செய்திகள்

ஆர்.கே. நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற இரட்டை இலைக்கு வாக்காளியுங்கள்

சென்னை மார்ச் 20–

ஆர்.கே. நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அண்ணா தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீதிவீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

ஆர்.கே.நகர் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட 40 வது கிழக்கு வட்டத்தில் அண்ணா தி.மு.க. வேட்பாளரும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ், கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவக்கினார்.

அந்த பகுதியில் வீதி, வீதியாக சென்று வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்தார். பஸ்களில் பயணம் செய்த பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக ஆர்.எஸ். ராஜேஷ், செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமக்கு மக்கள் மிகுந்த ஆதரவு தருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் வாக்காளர்கள் ரோஜா மாலை அணிவித்து, மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள். அவர்களது குடும்ப சகோதரராக எண்ணி இளநீர், மோர், தண்ணீர் வழங்கி உபசரிக்கின்றனர்.

இந்த தொகுதியில் போலி வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் வாக்காளர்களை ஏமாற்றி சென்று விட்டார். இந்த பகுதி நான் பிறந்து வளர்ந்த பகுதி என்பதால் தொகுதியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதை நன்கு உணர்ந்தவன். நான் மாவட்ட செயலாளராக இருந்து தொகுதி மக்களின் குறைகளை கேட்டு அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளேன்.

மேலும் தம்மை வெற்றி பெற வைத்தால் குடிநீர், கழிவுநீர், பாதாள சாக்கடை, தெரு மின் விளக்குகள், மின்சார கேபிள், தார் சாலைகள், குப்பை கிடங்கு உள்ளிட்ட பணிகளில் உள்கட்டமைப்பை மாற்றி அமைத்து ஆர்.கே.நகர் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன். வாக்காளர்கள் தொகுதி நலனை அறிந்து மக்கள் பணிகளில் திறம்பட உழைக்கும் நல்லவர்களை அடையாள படுத்தி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தந்து தம்மை வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதனைத்தொடந்து கிராஸ் ரோடு சுற்று வட்டார பகுதிகள், எல்.ஐ.ஜி.காலனி குடியிருப்பு பகுதிகள், சிவன் நகர், ஜீவா நகர், சிவகாமி நகர், சுனாமி அடுக்குமாடி குடியிருப்பு பகுதி, பிரின்ஸ் வில்லேஜ் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகளில் வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளர் ஆர்.எஸ். ஜெனார்தனம், ஏ.கணேசன், நெல்லை கே.குமார், ஆட்டோ தேவராஜ், இ.வேலு மேஸ்திரி, வி.எஸ்.புருஷோத்தமன், எம்.மாலா, குமுதா பெருமாள், கே.பி.கர்ணன், பன்னீர், ஒ.ஏ.ரவிராஜன், ஆர்.சிவக்குமார், நாகம்மா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *