செய்திகள்

ஆரணி அருகே மேல்சீஷமங்கம் ஏரியில் ரூ.98 லட்சத்தில் புனரமைப்பு பணிகள்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

ஆரணி, ஜூலை 17–

ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் ஏரி ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தி வரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்திலுள்ள நீர்வள ஆதாரத்துறையை சார்ந்த ஏரிகளை அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் புனரமைக்கும் திட்டத்தை கடந்த 2016–2017–ம் ஆண்டு தமிழக முதல்வரால் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2020–2021–ம் ஆண்டில் 499.7997 கோடி மதிப்பில் 1387 ஏரிகளை புனரமைப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நீர்வள ஆதார அமைப்பு, சென்னை மண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பெண்ணையாறு வடிநில கோட்டம் வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 54 ஏரிகளை புனரமைக்க ரூ.28 கோடியே 89 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆரணி உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய தாலுக்காவிலுள்ள 11 ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் மூலம் புனரமைக்க ரூ.7 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா மேல்சீசங்கமலம் கிராமத்திலுள்ள ஏரியில் நடைபெற்று வரும் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரையை பலப்படுத்துதல், 3 மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், 2 மதகுகளை சீர் செய்தல், கலங்கல் சீர் செய்தல், மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லைக்கற்கள் நடுதல், மிகைநீர் கால்வாய் தூர்வாருதல், பாசனக்கால்வாய் சீர்செய்து புனரமைத்து மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திடீரென அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு, இப்பணிகளை மழைக்காலம் துவங்கும் முன்பு விரைந்து முடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அறிவழகன்

இந்த ஆய்வின்போது ஆரணி உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள் முருகேசன், ராஜகணபதி, ஆரணி நகர கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமார், ஆவின் துணை பெருந்தலைவர் பாரி பாபு, வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பிஆர்ஜி சேகர், அரையாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் அரையாளம் எம்.வேலு, கவுன்சிலர் கோவிந்தராசன், கொளத்தூர் திருமால், ஒப்பந்ததாரர் மற்றும் விவசாய சங்க தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் மேகான்ராஜ், ஊராட்சி செயலாளர் திருமலை மற்றும் ஏரி நீர்பாசன சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *