செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை, அக். 7–

12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையின் 3 பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13 தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

தாம்பரத்தில் இருந்து பஸ்கள்

அதன்படி, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகளும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேற்கூறிய இடங்களை தவிர, மற்ற தமிழ்நாட்டின் பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *