சிறுகதை

ஆன்லைன் ஆர்டர் | ராஜா செல்லமுத்து

பரமசிவம் வீட்டின் கதவை கட்டினான் உணவு டெலிவரி செய்யும் பையன்.

பரமசிவம் தன் வீட்டிலுள்ள ஐந்து நபர்களுக்கும் சேர்த்து பிரியாணி பொட்டலத்தை வாங்கினார்.

வீட்டில் விருந்தாளியாக வந்த சிவகுமாருக்கு ஒன்றும் புரியவில்லை.

நீங்க பிரியாணி ஆர்டர் பண்ணலையே? அது எப்படி பிரியாணி வருது என்று கேட்டார் . அதற்கு பதில் சொல்லாமல் சிரித்தார் பரமசிவம்.

என்ன மாமா இப்படி சிரிக்கிறீங்கா? நானும் உங்ககூட தானே இருக்கேன். பிறகு எப்படி வீட்டுக்கு பிரியாணி வந்தது? என்று சிவகுமார் கேட்டார்.

இப்போ காலம் கலிகாலம் ஆயிப்போச்சு. எல்லாமே ஆன்லைன்ல தான் நடக்குது. இப்போ நான் நடந்ததை சொன்னா உனக்கே ஆச்சர்யமா இருக்கும் என்று பரமசிவம் சொன்னார்.

அட என்னன்னு சொல்லுங்க நான் தெரிஞ்சுக்கிறேன் என்று சிவக்குமாரின் ஆர்வம் மேலிட்டது.

முதல்ல பிரியாணியை சாப்பிடுங்க . அப்புறமா சொல்றேன் என்று பரமசிவம் சொல்ல, அதற்குள் வீட்டில் இருந்த மொத்த நபர்களும் டைனிங் ஹாலில் குவிந்தார்கள்.

பிரியாணி பரிமாறப்பட்டது. ஐந்து நபர்கள் பிரியாணி சைடிஷ் என்று சாப்பிட ஆரம்பித்தார்கள்.

நாம அங்க போய் இருந்தாக் கூட இப்படி ஒரு பிரியாணி கிடைத்திருக்காது. நல்ல ருசி; நல்ல டேஸ்ட் என்று பரமசிவன் குடும்பத்தினர் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்

ஆமா, அங்க போனா கூட கூட்டம் கும்பலும் இருக்கும் நோய்க்காலம் வேற, ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிரும் என்று சொல்லிக்கொண்டே பிரியாணியை சாப்பிட்டு முடித்தார்கள்.

சிவக்குமாருக்கு பிரியாணி ரகசியம் இன்னும் பிடிபடவில்லை. அதன் உண்மையை தெரிந்து தெரிந்து கொள்வதற்கு ரொம்பவே ஆர்வமாக இருந்தான். வேகவேகமாக சாப்பிட்ட சிவக்குமார் மறுபடியும் பரமசிவத்திடம் பிரியாணி ரகசியத்தை கேட்க ஆரம்பித்தான்.

நிதானமான குரலில் பேசிய பரமசிவம்

‘‘இப்ப நான் சொல்ல போறது வருங்காலத்துல நடந்தாலும் நடக்கும் . ஏன் இப்போது நடந்துருச்சு. இது இனிமேலும் நடக்கும் நடக்கிறதுக்கு வாய்ப்பு அதிகம்’’ என்று பூடகம் போட்டார்.

அந்த ரகசியத்தை சொல்ல மாட்டேங்கிறீங்களே? என்று சிவக்குமார் மறுபடியும் கேட்டுத் தொலைத்தார்.

என்கூட வேலை பாக்குற பிரண்டு பையனுக்கு கல்யாணம். நூறு பேரு தான் கல்யாணத்துல கலந்துகொள்ள முடியும் அப்படின்னு சொல்லிட்டாங்க.

இல்ல கூட்டம் போடக் கூடாது அதிகமா சேரக்கூடாதுன்னு சொன்னாதால கோயில்ல கல்யாணத்த வச்சுட்டாங்க . கல்யாணத்துக்கு போகாத ஆளுகளுக்கு ஆர்டர் பண்ணி உணவு வீட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க . கல்யாணத்துக்கு போகாத ஆளுகளும் என் பிரண்டு அக்கவுண்ட் நம்பர் வாங்கி மொய் பணத்தை அதிலேயே போட்டு விட்டோம்.

இப்போ கல்யாண வீட்டுக்கு போகல. எங்களோட மொய்ப்பணம் அவங்க வீட்டுக்கு போயிருச்சு. அவங்க வீட்டில நாங்க சாப்பிடல. அவங்க ஆர்டர் பண்ண பிரியாணி நம்ம வீட்டுக்கு வந்துருச்சு. இதுதான் நீங்க சாப்பிட்ட பிரியாணி; இப்படித்தான் இந்த கல்யாணம் நடந்துச்சு. இப்ப நாம பணம் போட்டது. அவங்களுக்கு போயிருக்கும் . அவங்க உணவு டெலிவரி பண்ணது நமக்கு வந்துருச்சு .

அப்படின்னா நாம கல்யாணத்துல கலந்துவிட்டதா அர்த்தம் . அதைக்கூட கல்யாணத்துக்கு கூட ஆன்லைன்ல நேரடியா ஒளிபரப்புவார்கள். அதுவும் இன்னும் கொஞ்ச நாள்ல நடக்கும் .

கூட்டம் கும்பல் எதுவும் தேவையில்லை.

அவங்க அவங்க இருக்கிற இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தலாம். அப்படி ஒரு நிலைமை கண்டிப்பா இங்கே வரும். இதுதான் இந்த பிரியாணி உடைய ரகசியம் என்று பரமசிவம் சொன்னபோது சிவகுமாருக்கு தலையே சுற்றியது .

உறவுகள் கூடி, சொந்தங்கள் சேர்ந்து, ஆசிர்வாதம் செய்து மணமக்களை வாழ்க்கைக்குள் அனுப்பும் வைபோகம் இப்போது ஆன்லைன் கலாச்சாரமாகிவிட்டது.

இது எங்கே போய் முடியப் போகிறதோ? என்று சிவக்குமார் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டிருக்கும்போது

பரமசிவத்தின் போன் செல்போன் அலறியது.

செல்போனை எடுத்த பரமசிவம்

‘‘ஹலோ நான் பரமசிவம் பேசுறேன்’’ என்று சொன்னார்.

எதிர்திசையில் இருந்தவர் பரமசிவம், நான்தான் முருகன் பேசுறேன் . என்னுடைய பையனுக்கு அடுத்த மாசம் எட்டாம் தேதி கல்யாணம்.

நீங்க யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம். பணத்தை ஆன்லைனில் அக்கவுண்ட்ல போட்டுருங்க . உங்களுக்கு தேவையான உணவை நீங்க எங்களுக்கு ஆர்டர் பண்ணுங்க. நாங்க ஆன்லைன்ல உணவை உங்களுக்கு அனுப்பி விடுவோம். நீங்க வீட்ல இருந்து மணமக்களை வாழ்த்தினால் போதும் என்று எதிர்திசையில் முருகன் பேச,

இதைக்கேட்ட சிவக்குமார் மயங்கி கீழே விழாத குறையாக தலைசுற்றி நின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *