செய்திகள்

ஆந்திரா, தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா

ஆந்திரா, தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா

நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் பாதிப்பு

சென்னை, ஜூலை 24–

ஆந்திரா, தமிழகம் உள்பட 6 தென் மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் புதிதாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்ததாக தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கு அதிகமானோரும், கர்னாடகத்தில் 5 ஆயிரத்துக்கு அதிகமானோரும் பாதிக்கப்பட்டனர்.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து 2–-வது நாளாக ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், தெலுங்கானாவில் 1500க்கு மேற்பட்டோரும் புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நேற்று 123 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டதையடுத்து, 2,421 பேராக பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களிலும் சேர்த்து நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 303 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

நாட்டில் நாள்தோறும் உருவாகும் கொரோனா தொற்றுகளில் பாதிக்கு மேற்பட்டவை தென் மாநிலங்களில் இருந்து உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்தில் 8 ஆயிரம் பேர் பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 998 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 72,711 ஆக அதிகரித்துள்ளது, நேற்று 61 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 884 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டம் தான் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரேநாளில் 6,472 பேர்

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 472 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகினர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்திலும் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 30 பேர் பாதிக்கப்பட்டனர், 97 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு முடிந்தபின் மீண்டும் மக்கள் பெங்களூரு நகரில் இயல்பு நிலைக்கு வந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நகரில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 207 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 97 பேர் உயிரிழந்ததில் பெங்களுருவில் மட்டும் 48 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கலாபுர்க்கி மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 370 பேரும், தட்சின கன்னடாவில் 4 ஆயிரத்து 209 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2 லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-–

தமிழகத்தில் ஒரே நாளில் 60 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,933 ஆண்கள், 2,539 பெண்கள் என 6,472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 40 பேரும் அடங்குவர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,336 பேர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் இதுவரையில் 90,900 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகரில் 480 பேரும், திருவள்ளூரில் 416 பேரும், தூத்துக்குடியில் 415 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேரும், நாகப்பட்டினத்தில் 4 பேரும், திருவாரூரில் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

21 லட்சம் பேருக்கு பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை 20 லட்சத்து 75 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 63 பேரும், தனியார் மருத்துவமனையில் 25 பேரும் என 88 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 210 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரையில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 பேர் குணம் அடைந்து உள்ளனர். 52 ஆயிரத்து 939 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 751 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 468 பேரும், ரெயில் மூலம் வந்த 424 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 367 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *