போஸ்டர் செய்தி

ஆந்திராவில் மோடி பங்கேற்ற விழாவை புறக்கணித்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு

அமராவதி, பிப். 10–
ஆந்திராவுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் முதல்வர் சந்திரபாபு நாயுடு புறக்கணித்தார்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி ஆந்திராவுக்கு இன்று சென்றார்.
விஜயவாடாவில் உள்ள ஞானாவரம் விமான நிலையத்துக்குத் தனி விமானத்தில் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மன், பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் வரவேற்றனர். ஆனால், முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்கச் செல்லவில்லை.
ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான அரசு மறுத்துவிட்டதாக கூறி தெலுங்குதேசம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது.
சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த ஒரு ஆண்டாக தெலுங்குதேசம் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில், விசாகப்பட்டி னத்தில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு மையங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். அதன்பின் குண்டூரில் பாரதீய ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசினார்.
ஆனால் பிரதமர் மோடி ஆந்திராவுக்குத் துரோகம் செய்துவிட்டார் எனக் கூறி, அவரின் வருகைக்கு ஆளும் தெலுங்குதேசம் கட்சி, காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜன சேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மோடிக்கு எதிராக பதாகைகளும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
‘நோ மோர் மோடி, மோடி இஸ்மிஸ்டேக், மோடி நெவர்ஏகெயின், மோடி கோ பேக்’ ஆகிய ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளன.
தெலுங்குதேசம் உள்ளிட்ட பல கட்சியினர் கருப்புக் கொடிகளையும், கருப்பு உடைகளையும் அணிந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் அமைதியான முறையில் மோடியின் வருகைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு, தொண்டர்களிடம் கூறுகையில், “ஆந்திர மாநிலத்துக்கு பிரதமர் மோடி வரும் இன்றைய நாள் கருப்பு நாள். ஆந்திர மாநிலத்துக்கு அநீதி இழைத்துவிட்டு மோடி இங்கு வருகிறார். மாநிலங்களையும், ஜனநாயக அமைப்புகளையும் பிரதமர் மோடி பலவீனப்படுத்திவிட்டார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் மோடியின் தலையீடு நாட்டுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. நம்முடைய எதிர்ப்பை அகிம்சை வழியில் வெளிப்படுத்த வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *