செய்திகள்

ஆந்திராவில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா: அமைச்சரவையை மாற்றும் ஜெகன்

அமராவதி, ஏப். 8–

அமைச்சரவையை முழுதும் மாற்றி அமைப்பதற்காக, ஆந்திராவில் முதலமைச்சரைத் தவிர்த்து, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று ஏப்ரல் 7ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதலமைச்சர் தவிர அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் ஒப்படைத்தனர்.

2019 ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி முதலமைச்சர் பதவியை ஏற்கும்போதே, ஜெகன்மோகன் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆட்சிக்காலத்தின் இரண்டரை ஆண்டு முடிவில் அமைச்சரவை முழுவதுமாக மாற்றி அமைக்கப்படும் என்பதுதான் ஜெகன்மோகனின் அந்த அறிவிப்பு.

அதன்படி இரண்டரை ஆண்டுகள் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்தது. அப்போது கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக அமைச்சரவையை முழுவதுமாக மாற்றி அமைக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிட்டு புதிய அமைச்சர்களுக்கு வழிவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

11 ந்தேதி புதிய அமைச்சரவை

அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த போட்ஸா சத்யநாராயணா, “முதலமைச்சர் ஏற்கனவே முழு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படியே ஒவ்வோர் அமைச்சரும் தனது ராஜினாமா கடிதத்தை மகிழ்ச்சியாகவும் தாமாகவே முன்வந்து கொடுத்துள்ளனர் என்றார்.

புதிய அமைச்சரவைப் பட்டியலை முதலமைச்சர் ஜெகன்மோகன், ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் ஆளுநரிடம் சமர்ப்பிப்பார் என்றும் அநேகமாக ஏப்ரல் 11ஆம் தேதி அமராவதி நகரில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.

ஐந்தாண்டுக் காலம் ஒரே அமைச்சர்கள் தொடர்ந்து பணியாற்றுவதன் மூலம், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகரிக்கும் எனக் கணக்கு போட்ட ஜெகன்மோகன் ரெட்டி, புதிய அமைச்சர்கள் அடுத்த இந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்பட்டால் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை பெருமளவு குறைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.