செய்திகள்

ஆதிதிராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்

ஸ்டாலின் உறுதி

சென்னை, ஏப்.13-–

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள், அநீதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

‘தமிழக அரசின் செயல்பாடுதான் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல்’, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- வன்கொடுமையைத் தடுக்க நாம் எத்தனையோ முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கவே செய்கிறது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85,000 ரூபாயிலிருந்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

இந்தத் தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இனி, பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாயும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணையும் போடப்பட்டுவிட்டது.

இதுதொடர்பான வழக்குகளில் 60 நாட்களுக்குள் விசாரணையை முடிப்பதற்குத் தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்படும் சட்டம் – ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள சிறப்பு நீதிமன்றங்களுடன் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் சொல்லி இருந்தேன். அந்த ஊர்களில் நீதிமன்றங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாதி வேறுபாடுகளற்ற மயானம்

தமிழ்நாட்டில் சில கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணத்தின் மூலமாக அந்த ஊரின் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

10 மாவட்டங்களில் தலா மூன்று ஊர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மாவட்டத்திற்கு 30 லட்சம் என்ற வீதத்தில், 3 கோடி ரூபாய் இத்திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்தினை மேம்படுத்தும் விதமாக, அனைத்து சமூகத்தினரும் பயன்பெறத்தக்க வகையில் முன்மாதிரியாக 10 எரிவாயு தகனமேடைகள், 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் கீழ் 16,442 கோடி ரூபாயும், பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் 1589 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

2022-–2023ம் ஆண்டின் மொத்த ஒதுக்கீடான 4281 கோடி ரூபாய் நிதியில் கல்விசார்ந்த திட்டங்களுக்கான 3571 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புத்தொழில்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத் தொழில்முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும்.

1. அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் பகுக்கக்கூடிய கொள்முதல்களில், ஐந்து விழுக்காடு தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினத் தொழில் முனைவோர் உற்பத்திசெய்யும் பொருட்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும்.

2. அனைத்து அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்விச் சூழல், உணவுத்தரம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க, ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.

பிரமாண்ட மாணவர் விடுதி

3. சென்னை, நந்தனத்தில் எம்.சி.ராஜா பெயரால் 1961-ம் ஆண்டு முதல், மாணவர் விடுதி துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது அதனை மிகப் பிரமாண்டமானதாக கட்ட அரசு முடிவெடுத்துள்ளது.

எம்.சி.ராஜா பெயரிலான விடுதி வளாகத்திற்குள்ளேயே தற்போது காலியாக உள்ள இடத்தில் சுமார் 75,000 சதுர அடிபரப்பளவில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

மேலும், அனைத்துத் துறைகளிடமிருந்து தொகுதிவாரியாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், அரசுப்பணிகளில் ஆதிதிராவிடருக்கான குறைவுப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் சட்டத்துறையின் குறிப்புரை பெறப்பட்டு, கோப்பு மீது தற்போது அரசாணை வெளியிடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமத்துவ விருந்து

சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் என்னை சந்தித்து, ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடைபெற்று வந்த சமபந்தி போஜனம் என்பதை பெயர் மாற்ற வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை எடுத்து வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இனிமேல் சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதை இந்த கூட்டத்தின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் இன்னல்களை களையவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை நமது அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்.

ஒருபக்கம் சமத்துவபுரம்! இன்னொருபக்கம் ‘சமூகத்தில் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டை, சட்டத்தின் வாயிலாகவும் விழிப்புணர்வுப் பரப்புரைகள் வாயிலாகவும் மேற்கொள்ளும் நமது அரசின் செயல்பாடுதான், இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ‘திராவிட மாடல்’ என்பதை நான் பெருமையுடன் பதிவு செய்கிறேன்.

இந்த ‘மாடல்’, அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட – வஞ்சிக்கப்பட்ட மக்களினுடைய குரல்! அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தரும் குரல்! தோளோடு தோள் நின்று அவர்களைப் பாதுகாக்கும் குரல்!

அவர்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு நமது அரசு எப்போதும் துணை நிற்கும்!

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நமது அரசு முன்னெடுக்கிறது. அதனைச் செயல்படுத்த அரசுக்கு எல்லா வகையிலும் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜண், சி.வி.கணேசன், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர்கள் எஸ்.கே.பிரபாகர், நா.முருகானந்தம், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.