சிறுகதை

என் அம்மா

சிறுகதை  ராஜா செல்லமுத்து

“ஓ” வென அழுதுகொண்டிருந்த குருவம்மாளைப் பாவமாய்ப் பார்த்தபடியே இருந்தாள் மருமகள் மஞ்சுளா.

” ம்ம்ம் ” என்று உதடு திறக்காமலே கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தவளை தோள் தொட்டுத் தேற்றினான் மகன் ராஜ்.

அவளையறியாமலே கண்ணீர் வந்து கொண்டிருந்ததை மஞ்சுளா அறிய வாய்ப்பில்லை.

“ஏய் மஞ்சுளா ஏன்?”

என்று செல்வராஜ் சொல்ல மஞ்சுளா நிமிர்ந்து பார்த்தாள்.

“இல்ல மாமா ஒங்க வீட்டுல இருந்து யாரும் பாக்க மாட்டேங்கிறாங்க. ரெண்டு பேருக்கும் ரொம்ப வயசாயிடுச்சி. அத்த இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி? வாய்விட்டே அழுதாள்.

“நாம என்ன செய்ய முடியும்மா கூடப்பெறந்த யாரும் எதுவும் கேக்குறதில்ல.

எல்லாம் நம்மோட நேரம்னு நினைச்சுட்டு போகவேண்டியதுதான்.

“இல்ல மாமா இது யாரோட சாபம்னு தெரியல ; நம்ம குடும்பத்த போட்டு ஆட்டுது.

“நினைக்கவே ஒரு மாதிரியா இருக்கு மாமா” என்று மஞ்சுளா பேசிக்கொண்டிருக்கும் போதே குருவம்மாள் தன் அருகில் கிடந்த கட்டிலில் கையை வைத்து அடித்து அடித்து அழுதுகொண்டு இருந்தாள்.

இன்னதென்று சொல்லத் தெரியாமல் அழுதுகொண்டே இருந்தாளேயொழிய இதுதான் காரணமென்று சொல்ல வாய் வரவேயில்லை.

பாருங்க இதுதான் காரணம். இதுக்காக தான் அழுகிறேனு கூட சொல்லத் தெரியாத தாய். ஆபத்தான நிலையில் இருக்கிற அப்பா… ச்சே….. உங்க வீட்டுல இருக்கறவங்களெல்லாம் மனுஷங்களா இல்ல மிருகமா? யாருக்கும் நெஞ்சுல ஈரமில்லையா ? இரக்கமில்லையா? இப்படியும் மனுசங்க இருப்பாங்கன்னு உங்க வீட்டுக்கு வந்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

யாரும் ஒரு எட்டு கூட வந்து பாக்கிறதில்ல என்று மஞ்சுளா சொன்ன போது ராஜுக்கு என்னவோ போலானது .

அத்தைய வேணும்னா நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவமா? அங்க போனா ஏதாவது நடக்கும்.

“வேண்டாம்”

“ஏன்?”

ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனா மட்டும் இன்னதின்னு தெரிஞ்சிருமா என்ன ? அங்கேயும் போய் அழுதிட்டு தான் இருக்கும்.

எங்க அம்மாவுக்கு புத்தி தப்பிப் போயி ரொம்ப வருசமாச்சு. நான் யாரு? எங்க அப்பா யாரு? நீ யாரு? நம்மோட புள்ளைங்க யாரு? ம்ஹூகும்… எதுவும் தெரியாது. இப்ப எங்க அம்மாவோட அழுகைக்கு அர்த்தம் என்னான்னு தெரியாது. இவ்வளவு நாள் நம்ம பக்கத்திலேயே படுத்திருந்த ஒரு உயிர். ஒரு உடம்பு எங்க காணாம்னு தான் அழுமேயொழிய, மத்தபடி, எங்க அப்பாவ எங்க இவ்வளவு நாளா காணாம்னு சொல்லவும் தெரியாது. அவருக்கு எப்படி இருக்குன்னு கேக்கவும் தெரியாது அவ்வளவுதான் எங்கம்மாவோட அறிவு. அப்படின்னு சொல்றத விட கடவுள் எங்கம்மாவோட புத்திய அந்தளவுக்கு சுருக்கிட்டான் என்று ராஜ் சொன்னபோது குருவம்மாளின் அழுகை அடங்கிய பாடில்லை .அருகில் படுத்திருந்த அப்பாவின் கட்டிலைத் தொட்டுத் அடித்து அடித்து அழுது கொண்டே இருந்தாள்.

மாமா அத்தைய பாக்க ரொம்ப பாவமா இருக்கு. ஒரு தடவ தான் ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு

வருவமே . அப்பா ஹாஸ்பிட்டல் போயி இன்னைக்கோட இருபது நாளைக்கு மேல ஆச்சு. ஒரு நாள் ரெண்டு நாள், அம்மா பாத்துச்சு. ரொம்ப நாள் அப்பாவ காணோம்னு தெரியவும் தான் அழ ஆரம்பிச்சுருக்கு. ஏன், இவ்வளவு நாள் கூடவே இருந்துச்சே ஏதாவது கேக்குமா? இல்ல பாக்குமா? எதுவுமே தெரியாது .பக்கத்தில ஒரு ஆள் படுத்திருந்தாங்க. அவ்வளவுதான் தெரியுமேயொழிய, இன்னாருன்னு அதுக்கு தெரியாதும்மா” என்று ராஜ் சொன்னபோது குருவம்மாள், கணவன் ரங்கசாமி படுத்திருந்த கட்டிலில் போய் உட்கார்ந்தாள். ஒரு ஓரத்தில் கிடந்த தலையணையை எடுத்து முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

“இல்ல மாமா… இன்னைக்கு கண்டிப்பா ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய் தான் ஆகணும் என்று மஞ்சுளா பிடிவாதமாகச் சொன்னாள்.

“வேண்டாம்மா

“இல்ல மாமா” இருபது நாளைக்கும் மேலா கூடவே படுத்திருந்த ஒரு உசுர காணாம்னு ஒரு பரிதவிப்பு அத்தைக்கு இருந்திட்டு தான் இருக்கும் கூட்டிட்டு போவோம். அங்க என்ன நடக்குதுன்னு பாப்பமே என்ற மனைவி மஞ்சுளாவின் பேச்சை ராஜ் தட்டவே இல்லை.

மறுநாள் காலை குருவம்மாளைக் கூட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றனர். ஹாஸ்பிட்டல் நுழைந்ததும் அங்கே ஐசியூவுக்குள் படுத்திருந்த கணவன் ரங்கசாமியின் நெஞ்சில் விழுந்து “ஓ”வென அழுதாள் குருவம்மாள். இன்னதென்று சொல்ல முடியாத துயரம். இது தான் காரணமென்று தெரியாத அழுகை. அவள் அப்படி அழுததைப் பார்த்த ராஜூக்கும் மஞ்சுளாவிற்கும் என்னவோ போலானது.

எங்க பாட்டி செத்த பெறகு புத்தி மாறிப்போன எங்க அம்மா, இப்ப, அப்பா படுக்கையில கெடக்கும்போது திரும்பி வந்திருக்கு போல என்று ராஜ் சொன்னதும் குருவம்மாள் ரங்கசாமியைப் பிடித்து அழுது

கொண்டிருந்தாள் . அதுவரையில் அசைவற்றுக் கிடந்த ரங்கசாமி மெல்ல மெல்ல கண் திறந்தார்.

குருவம்மாளின் முகத்தை குறுகுறுவென பார்த்தார்.

அவரின் இரண்டு விழிகளின் ஓரத்திலும் கண்ணீர் திரண்டு வழிந்துகொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *