சிறுகதை

“அவள் மனம் புண்படுமே?” -கவிஞர் திருமலை. அ

சென்னையிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்து அண்ணன் மதியும் தம்பி மாறனும் ஒரே மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள்.

அண்ணன் மதி தன் சொந்த அத்தை மகள் ரேவதியைத் திருமணம் செய்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. அவர்களுக்கு 2 வயதில் ஒரு பையனும் ஒரு வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். திருமணம் ஆனது முதல் மதி தன் குடும்பத்தோடு மனைவி ரேவதியின் வீட்டிலேயே வசித்து வருகிறார்.

தம்பி மாறன் தன் சொந்த வீட்டில் பெற்றோருடன் வசிக்கிறார், மாறனுக்கு ரேவதியின் தங்கை மாலாவை திருமணம் செய்து வைக்க அவர்கள் குடும்பமே காத்திருந்தது. மாறனுக்கும் மாலாவுக்கும் அது தெரியாமல் இல்லை; ஆனால் அவர்கள் தங்கள் நட்பை பெரிதாக நினைத்து, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் கடந்த 3 மாதங்களாக, அமுதா என்ற பெண்ணோடு மாறனுக்கு பழக்கம் ஏற்பட்டது. மாறன் வேலை பார்க்கும் அதே கம்பெனியில் கேஷியராகப் பணியாற்றி வருகிறாள் அமுதா.

அதே நேரம் மாறனுக்கும் மாலாவுக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து இரு வீட்டாரும் சந்தித்துப் பேசினார்கள். தம்பியின் விருப்பத்தை தெரிந்து கொண்டு, முடிவு எடுக்கலாம் என்று மதி சொன்னான். அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

மறுநாள் வேலைக்கு வந்த மாறனை அழைத்துப் பேசினான் மதி; மாலாவை திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதம் தானே? என்றான் மதி. நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்; அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்; நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று மதிக்கு பதிலடி கொடுத்தான் மாறன்.

மாலா உனது முறைப் பெண். உனக்காகவே பிறந்தவள். நீ மாலாவை திருமணம் செய்து கொள்வாய் என்று நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் உன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. இந்த சூழ்நிலையில் உன் காதலுக்கு நான் எப்படி உதவ முடியும்? என்ற கேள்வியோடு வேலைக்கு கிளம்பினான் மதி.

மாறன் சிந்தித்தபடி கம்பெனிக்கு சென்று வேலை பார்த்தான். உணவு இடைவேளையில், அலுவலகம் சென்று அமுதாவைச் சந்தித்தான் மாறன்; அவளிடம் திருமணம் குறித்து மதி சொன்ன விவரங்களை கூறினான். இதற்கு மாலா சம்மதித்து விட்டாரா? என்றாள் அமுதா. நாங்கள் திருமணத்தைப் பற்றி பேசியதே இல்லை. எங்களுக்குள் காதல் என்ற பேச்சே இதுவரை எழவில்லை; எனவே அவளிடம் இது பற்றி கேட்டிருக்கவே மாட்டார்கள் என்று பதில் அளித்தான் மாறன்.

இப்போதுள்ள சூழ்நிலையில், நீங்கள் முதலில் மாலாவை சந்தித்துப் பேசுங்கள்; அவள் விருப்பத்தைக் கேளுங்கள். அவள் சொல்லும் பதிலை வைத்து, நாம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினாள் அமுதா;

அன்று மாலையே மாலாவைச் சந்தித்த மாறன், திருமணத்துக்கு எப்படி சம்மதித்தாய்? என்றான். என்னிடம் எதுவும் கேட்கவில்லை. இது அவர்களே எடுத்த முடிவு என்றாள் மாலா. நீ என்னை விரும்புகிறாயா? என்று பதிலுக்கு கேட்டான் மாறன்.

முதலில் அதைப் பற்றி நான் யோசிக்கவில்லை; ஆனால் பெரியவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தேன்; என் சொந்த மாமாவை என்னால் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? திருமணப் பேச்சு தொடங்கியதில் இருந்தே உங்களை உண்மையாகக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் என்று சொல்லி முடித்தாள் மாலா.

அதற்கு மேல் அவளிடம் பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்ட மாறன், மறுநாள் மாலை மீண்டும் அமுதாவைச் சந்தித்தான். மாலாவின் விருப்பத்தை அவளிடம் சொன்னான். உங்களுடைய விருப்பம் என்ன? என்று மாறனிடம் கேட்டாள் அமுதா; உன்னுடைய விருப்பம் எதுவோ அதுவே என்னுடைய விருப்பம் என்று பதில் அளித்தான் மாறன்;

மாலா சிறு வயதில் இருந்தே உங்களோடு நட்பாக இருந்திருக்கிறாள். அதை நட்பு என்று சொல்வதைவிட ஆழமான பாசம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்த நட்பும் பாசமும் சேர்ந்துதான் ‘பஞ்சில் பட்ட தீயாய்’ உங்களைக் காதலிக்க வைத்திருக்கிறது.

நம்முடைய காதல் மூன்று மாதக் காதல்; இது தற்காலிகமானது. மாலாவின் காதல் புனிதமும் தெய்வீகமும் நிறைந்தது. அவளிடம் இருந்து, உங்களை நான் எடுத்துக் கொண்டால், அவள் மனம் என்ன பாடுபடும்? அவள் மனம் புண்பட்டு விடாதா?

எனவே நாம் நம்முடைய காதலை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அதுதான் நமக்கு மரியாதை; நீங்கள் என்னைப் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம். உங்களைப் போல் எனக்கும் ஒரு முறை மாப்பிள்ளை இருக்கிறார். இனி அவரே கதி; வேறு வழியில்லை என்று சொல்லி முடித்தாள் அமுதா.

அப்படியானால் நாம் இருவரும் செய்வது தியாகமா? என்றான் மாறன். தியாகமல்ல; புத்திசாலித்தனம். காதல் தோல்வியால் மரணத்தைத் தேடிச் செல்லும் இளஞ் சிட்டுக்கள், வருங்காலத்தில் நம்மைப் போல் விட்டுக் கொடுத்து வாழவும் சிந்தித்து முடிவெடுக்கவும் கற்றுக் கொண்டால் அது நமக்கு கிடைக்கும் பெருமைதானே? என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அமுதா.

அமுதாவிடம் இருந்து விடைபெற்ற மாறன். கம்பெனியில் இருந்த அண்ணன் மதியைச் சந்தித்தான். எனக்கும் மாலாவுக்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று மகிழ்ச்சியோடு அண்ணனிடம் கூறினான்.

அதைக் கேட்ட மதி அதற்குள் தம்பிக்கு திருமணக் களை வந்து விட்டதே என்று தமாஷாகச் சொன்னான்.

பிறகு மாறன் நேராக மாலா வீட்டுக்கு சென்றான். அங்கிருந்த அண்ணி ரேவதியும் அவளது பெற்றோரும் மாறனை வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார்கள். நீங்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக மதி இப்போதுதான் போனில் சொன்னார் என்று ரேவதியின் அப்பா விவரித்தார்.

சரி மாமா, மாலா எங்கே என்றான் மாறன். அந்த ரூமில்தான் இருப்பாள்; போய்ப் பாருங்கள் என்றார் மாமா. அங்கு மலர்ந்த முகத்தோடு காத்திருந்தாள் மாலா. மாலாவை நெருங்கினான் மாறன்; அவள் இரண்டு தோள்களையும் கைப்பற்றினான். மார்பில் சாய்ந்தாள் மாலா; மல்லிகை மலர்க் கூந்தல் மாறனை மயக்கியது. கட்டி அணைத்தான். இப்போது வேண்டாம்; எல்லாமே திருமணத்துக்குப் பிறகுதான், என்று சொல்லிக் கொண்டே மாறனின் கிடுக்கிப்பிடியில் இருந்து விலகி ஓடினாள் மாலா.

‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே’ என்ற ஏக்கத்தில் திருமணத்துக்குக் காத்து நின்றான் மாறன்.

Leave a Reply

Your email address will not be published.