சிறுகதை

அவளுக்குப் பிறந்தநாள் | ராஜா செல்லமுத்து

காதலிக்கும் போது இருக்கும் கவனம் காதலி நம்மை விட்டுப் போகும் போது இருப்பதில்லை.

அது மறதியல்ல ஒரு நாகரீகம்.

அடுத்தவரின் மனைவியானவளை எப்படிப் பாராட்டுவது?

தவறாக எடுத்துக் கொள்ளும் கணவனாக இருந்தால் வீடு இரண்டாகும். இல்லை பிரச்சினை பெரிதாகும் என்றெல்லாம் யோசித்ததால் அவள் பிறந்த நாளை மறந்திருக்க வேண்டும்; இல்லை மறக்கடிக்கப் பட்டிருக்க வேண்டும்.

எப்போதும் போல இன்று அலுவலகத்திற்குக் கிளம்பி பேருந்து நிலையம் வந்தேன். அன்று என்னவோ தெரியவில்லை. பேருந்து நிலையம் ஆட்களால் திக்கு முக்காடியது. என்ன இது இன்னைக்கு இவ்வளவு கூட்டம்.

“பஸ் வரலீங்க” என்றார் ஒருவர்

“வந்திட்டாலும் …… நேரத்துக்கு எடுத்திட்டு வரமாட்டானுகங்க. அவனுக இஷ்டத்துத்தான் வருவானுக. மக்கள யார் பாக்குறா; எல்லாம் சுய நலம். தான் பெரிய ஆளு அப்படிங்கிற நெனப்பு ” என்றார் ஒரு சமூக ஆர்வலர்.

கூட்டம் நிரம்பி வழிந்த பேருந்து நிலையத்தில் நானும் ஐக்கியமானேன். பேருந்து வரும் திசையையே வேடிக்கை பார்த்து நின்றது கூடி நின்ற கூட்டம் முழுவதும். எல்லோர் பார்வையும் பேருந்தை நோக்கியே கவிழ்ந்திருந்தது. அவரவர் செல்லும் பேருந்தை நோக்கிப் பார்த்திருந்தனர்.

எனக்கான பேருந்துத் திசையை நான் பார்த்துக் கொண்டிருந்த போது ஏதோ பார்த்த முகமாய் இருக்கிறதே என்று ஒரு பெண்ணை உற்று நோக்கினேன்.

“ஆமா….. கவிதா தான்…..

ஆனா சேலையில இருக்காளே …..

ஆமா….. அவளே தான் மீண்டும் உறுதி சொன்னது மனது. பச்சைக் கலர்புடவையில் அவ்வளவு அழகாக இருந்தாள். முன்னைவிட கொஞ்சம் சதை போட்டிருந்தாள். கன்னங்கள் இரண்டும் கொஞ்சம் உப்பியிருந்தன. முன்னைவிட கொஞ்சம் கறுப்பாக இருந்தாள்.

அருகில் சென்றேன். பேசலாமா?

வேண்டாமா? ஒரு பட்டிமன்றப் போராட்டத்திற்குப் பின்னே அவளுடன் பேச ஆயத்தமானேன்.

எங்கோ கவனித்துக் கொண்டிருந்தவளை “கவிதா” என்றேன் சட்டெனத் திரும்பினாள்

“ஹலோ …. என்னங்க எப்படியிருக்கீங்க”

“இருக்கேன்”

“மாமா” வரலியா”

“இல்ல”

ஏன்”?

“அவருக்கு வேற எடத்தில வேல”

“எந்தப் பக்கம்”

ஒரகடம்”

“ஓ” அதான் விட்டுட்டுப் போயிட்டாரா?

“ஆமா”

“நீங்க வள்ளுவர் கோட்டம் “தான”

“ஆமா”

“ஏன் இவ்வளவு லேட்டா போறீங்க”

“லேட்டாயிருச்சு”

“சரி ஆட்டோவுல போகலாமா?

“வேணாம் நீங்களே போங்க . நான் வரல” என்றாள்.

அவளின் ஈர உதடுகளில் லேசாக வெடிப்புகள் இருந்தன. சிவந்து நிற்கும் இரண்டுக் கன்னக் கதுப்புகள் லேசாக கறுப்பாய் மாறியிருந்தன.

“கவிதா”

“செல்லுங்க”

“லேட்டாயிருச்சுல்ல”

“ஆமா”

“லேட்டா போனா ஒங்க ஆபிசுல ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?

“இல்லையே”

“ஏன்?”

“எங்க ஆபிசுக்கு எப்ப வேணும்னாலும் போகலாம்’’

என்றாள் கவிதா.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே நாங்கள் செல்லும் இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன.

“கவிதா ”

“செல்லுங்க”

“இதுல போகலாமா? ”

என்று நான் சொல்வதற்குள் மொத்தக் கூட்டமும் இரண்டு பேருந்துகளை நோக்கி முன்னேறினர்.

நானும் கவிதாவும் அந்தப் பேருந்தை நோக்கிச் சென்றோம்.

முண்டியடித்து உள்ளே நுழைய முற்பட்ட போது நான் முதலில் எப்படியோ தொற்றிப் பிடித்து ஏறினேன். உள்ளே கூட்டம் அவ்வளவாக இல்லையென்றாலும் எல்லோரும் படிகளிலேயே நின்றிருந்தனர்.

யோவ், உள்ள போங்கய்யா….

எல்லாம் படியில நின்னு செத்துட்டு இருக்கானுக; உள்ள போக மாட்டிங்களா? கோபப்பட்டுத் திட்டிக் கொண்டிருந்தேன்.

ஆமா எங்க கவிதாவ இந்தக் கூட்டதில அவள நசுக்கி

எடுத்திருப்பானுகளோ” என்ற யோசனையில் இருந்த போது என் செல்போன் சிணுங்கியது.

என்ன கவிதா கூப்பிடுறா?

“ஹலோ, டிக்கெட் எடுத்திட்டீங்களா?

“என்னையத் தேடாதீங்க. நான் அந்த பஸ்ல ஏறல ..’’

“ஏன்?

“பயங்கரமான கூட்டமா இருந்துச்சில்ல. அதான், இப்ப நான் ஆட்டோவுல போயிட்டு இருக்கேன்.

அடிப்பாவி, ஒன்னோட ஆபிஸ் போற வழிதான – என்னோட ஆபிசுல என்னையும் விட்டுட்டு போயிருக்கலாமே”

“சரிசரி ஒரு பிரண்டுக்கு “விஷ்” பண்ணனும்னு ஒங்களுக்கு தோணலையா?’’

“ஏன் என்னாச்சு?’’

இன்னைக்கு எனக்கு பிறந்த நாளு

“ஸாரி ….. ஸாரி மறந்திட்டேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என்னைய வாழ்த்தி ஒரு கவிதை எழுதியிருந்தீங்க’’

“ஆமால்ல” மறந்திட்டேன் ஸாரி

ஸாரி… என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேன்.

“மறந்திட்டீங்கன்னு சொல்லுங்க’’

“ஆமா கவிதா” நான் மறந்தது உண்மை தான். என்னோட மனசுல இருக்கிற வரைக்கும் நீங்க என்னோட நினைவில இருந்தீங்க; அதுக்கப்பறம் நீங்க இன்னொருத்தரோட மனைவியாகிட்டீங்க ; அதான் நான் ஒங்கள மறந்திட்டேன்” என்ற போது அவளுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்களைச் சொன்னேன்.

“சரி என்று போனைக் கட் செய்தாள்’’.

கவிதாவைப் பற்றிய முன் கால யோசனை என்னை முழுவதுமாய் நிறைத்தது.

சுதந்திர தினத்திற்கு முன் கவிதாவின் பிறந்த நாள் என்று என் மனம் அந்தத் தேதியை வரிந்து கட்டிக் கொண்டிருந்தாலும் இதயம் ஏற்றி வைத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை.

அடுத்த ஆண்டு என் ஞாபகம் என்ன செய்யுமென்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *