செய்திகள்

அவதூறு பேசி அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலின்: எடப்பாடி தாக்கு

Spread the love

சேலம், பிப்.10–

அவதூறு பேசி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் ஸ்டாலின், அது நடக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழாவில்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:– நீடித்த நிலையான வளர்ச்சியை நமது மாநிலம் அடைய கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவது மிகவும் அவசியமாகும். கால்நடை வளர்ப்பை அதிகரிப்பதுடன், வேளாண் பெருமக்களின் வருமானமும் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அம்மா, 2011–ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

மிக பெரிய வெற்றி

அம்மாவின் தொலைநோக்கு சிந்தனையில் உதித்த இத்திட்டங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. உதாரணமாக, திருச்சி மாவட்டம், பனையபுரம் கிராம ஊராட்சியைச் சார்ந்த சாரதா என்பவருக்கு 2011–12–ம் ஆண்டு விலையில்லா கறவைப்பசு வழங்கும் திட்டத்தில், கன்றுடன் கூடிய கறவைப்பசு வழங்கப்பட்டது. தற்போது அந்த பயனாளி 9 ஆண்டுகளில், 9 பசுக்கள் மற்றும் 2 கன்றுகளுடன் நாளொன்றுக்கு சுமார் 50 லிட்டருக்கு மேல் பால் உற்பத்தியை பெருக்கி தன்னுடைய வாழ்க்கையை, இன்றைக்கு சொந்த காலிலே நிறைவேற்றி வருகிறார்.

இதே போன்று, தூத்துக்குடி மாவட்டம் இடைச்செவ்வல் கிராம ஊராட்சியைச் சார்ந்த அய்யம்மாள் என்பவருக்கு 2011–12ம் ஆண்டில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் 3 பெட்டை மற்றும் ஒரு கிடா என மொத்தம் 4 ஆடுகள் வழங்கப்பட்டன. இதனை சிறந்த முறையில் வளர்த்ததன் பயனாக, நாளது தேதி வரை சுமார் 250 ஆட்டுக்குட்டிகள் கிடைக்கப்பெற்றதோடு, அதில் 170 ஆடுகளை விற்பனை செய்து 4.12 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

தற்சமயம் 80 ஆடுகளை பராமரித்து வருகிறார். ஆகவே, அம்மா கிராம பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும், விவசாய பெருங்குடி மக்களும், விவசாய தொழிலாளர்களும், இன்றைக்கு சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்து, இந்த திட்டம் இன்றைக்கு வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம், சிக்கதாசன்பாளையம் கிராம ஊராட்சியைச் சேர்ந்த சாரதா என்பவருக்கு கடந்த 2018–19ம் ஆண்டு விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தில் 50 அசில் இன நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. இதனை சிறப்பாக பராமரித்து கடந்த ஒரு வருடத்தில் 850 முட்டைகள் மற்றும் 158 கோழிகள் கிடைக்கப்பெற்று, அதனை விற்பனை செய்து, இன்றைக்கு லாபம் பெற்றுள்ளார்.

தற்சமயம் 155 கோழிகளையும் பராமரித்து வருகிறார். ஆகவே, இந்த திட்டம் சிறப்பான திட்டம் என்பதற்காக இதை எடுத்துரைக்கின்றோம். இன்று இவ்விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை

* 357 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 96 ஆயிரத்து 944 பயனாளிகளுக்கு கறவை மாடுகளும்,

* சுமார் 1,473 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 லட்சத்து 40 ஆயிரத்து 430 பயனாளிகளுக்கு 45 லட்சத்து 61 ஆயிரத்து 720 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து, விலையில்லாமல் கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கியதன் மூலமாக வேளாண் பெருமக்களும், வேளாண் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்ற தொழிலாளிகளும், இந்த தொழிலில் ஈடுபட்டதன் மூலமாக இன்றைக்கு அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது.

வாழ்க்கை தரம் உயர்ந்தது

இன்றைய தினம் கறவை மாடுகள் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கன்றுகள் ஈன்றும், ஆடுகள் 78 லட்சத்து 13 ஆயிரம் குட்டிகள் போட்டும், அதன் எண்ணிக்கை மிக அதிக அளவில் பெருகிவிட்ட காரணத்தினால், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து உள்ளது. இப்படிப்பட்ட மகத்தான இத்திட்டம் இன்றளவும் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் பலனாக, 20–வது கால்நடை கணக்கெடுப்பின்படி, வெள்ளாடுகளின் எண்ணிக்கையில் கடந்த கால்நடை கணக்கெடுப்பில் இருந்த எண்ணிக்கையை விட, தமிழ்நாடு 21 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்திய அளவில் கோழியின எண்ணிக்கையில் முதலாவது இடத்தையும், செம்மறியாடு எண்ணிக்கையில் 5வது இடத்தையும், வெள்ளாடுகளின் எண்ணிக்கையில் 7வது இடத்தையும் தமிழகம் பெற்றிருக்கிறது.

இந்த அளவிற்கு கால்நடைகளின் எண்ணிக்கை பெருகி இருக்கிறதென்றால், கிராமப்புற மக்களின், குறிப்பாக பெண்களின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி தனியாக நான் குறிப்பிட தேவையில்லை என்று நான் கருதுகிறேன்.

கால்நடை வளர்ப்பில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லவும், அதனால் விவசாயிகள் மேலும் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த கால்நடைப் பூங்காவிற்கான திட்டத்தைத் தீட்டி, அது எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற உத்திகளை பல வல்லுனர்களிடம் பல நாட்களாக கலந்தாலோசித்தேன். மேலும், நான் அண்மையில் அமெரிக்கா சென்றபோது, பஃபலோ நகரில் உள்ள பெரிய கால்நடை பண்ணையை பார்வையிட்டு, அங்கு கடைபிடிக்கப்படும் அதிநவீன உத்திகளை கண்டறிந்து, இந்த கால்நடைப் பூங்காவில் அவற்றை அமல்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன்.

அது மட்டுமன்றி, கால்நடைத் துறை அமைச்சரையும், துறை அதிகாரிகளுடன் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி, அங்கு கால்நடை வளர்ப்பில் உள்ள நவீன தொழில்நுட்பங்களையும், வசதிகளையும் அறிந்து வரச் செய்திருக்கிறேன். அந்த தொழில்நுட்பங்களையும் இங்கு அமையவுள்ள கால்நடை பூங்காவில் அமல்படுத்த உள்ளோம்.

ஏற்கனவே நம்முடைய வேளாண்மைத் துறை செயலாளர் அழகாக குறிப்பிட்டார். எந்தெந்த வகையில் விவசாயிகளுக்கு அரசு உதவி செய்கிறது என்று தெளிவுபடுத்தி சுட்டிக்காட்டினார்.

வறட்சி நிதி

* 2016–2017ல் நிலவிய வறட்சியின் பிடியில் இருந்து விவசாயிகளைக் காக்க, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வறட்சி நிவாரணமாக 2,247 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கிய அரசு அம்மாவுடைய அரசு.

* 2011ம் ஆண்டு முதல் இது வரை சுமார் 90 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில், 48 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

* பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலேயே ஒரு சாதனை அளவாக 7,528 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக பெற்று தந்திருக்கிறது.

விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரண்

* அம்மாவின் அரசு விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக உள்ள அரசு. அதனால் தான் கடந்த ஆண்டு, அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதலால் மக்காச்சோளம் பாதிக்கப்பட்ட போது, அந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அம்மாவுடைய அரசு, பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு, அவர்களது இழப்பினை ஈடு செய்ய 186.25 கோடி ரூபாய் நிவாரணம் இந்த அரசால் வழங்கப்பட்டது. மேலும், இவ்வாண்டு படைப்புழு பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த, 47 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசே பூச்சி மருந்தை தெளிக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுகாத்த அரசு அம்மாவுடைய அரசு. உணவுப் பூங்கா

* மேலும், சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை, தேனி, மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் 217 கோடி ரூபாய் மதிப்பில் உணவுப் பூங்காக்கள் அமைக்கும் பணியில் எனது தலைமையிலான அரசு விரைந்து செயலாற்றி வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் இந்த தொடர் நடவடிக்கையினால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக இத்தகைய உணவு பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு சென்று நல்ல விலை கிடைக்க எங்களுடைய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

* தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையினை துவங்க முன்வருபவர்களுக்கு முதலீட்டு மானியம், வட்டி மானியம், முத்திரைக் கட்டண விலக்கு, வரிச் சலுகை போன்ற பல்வேறு சலுகைகளை அறிவித்து, இந்த திட்டத்தை ஒரு முன்னோடி திட்டமாக துவக்கி வைத்திருக்கின்றோம்.

* இதுபோன்று, இன்னும் தமிழ்நாட்டில் கூடுதலாக உணவு பதப்படுத்தும் தொகுப்புகளையும், மிகப்பெரிய உணவு பூங்காக்களையும் உருவாக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற ஒரு மகிழ்ச்சியான தகவலை இந்த நேரத்தில் நான் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். * கடந்த 8 ஆண்டுகளில் 3 அரசு வேளாண்மை கல்லூரிகளும், ஓர் அரசு தோட்டக் கலை கல்லூரியும் உருவாக்கப்பட்டு, ஆண்டுக்கு 365 வேளாண்மைப் பட்டதாரிகள் கூடுதலாக பயின்று வருகின்றனர். இது தவிர, 23 தனியார் கல்லூரிகளும் துவங்கப்பட்டு, கூடுதலாக 2,500 மாணவர்கள் வேளாண் கல்வி பயில வழிவகுக்கப்பட்டது.

கிருஷி கர்மான் விருது

இவ்வாறு பல திட்டங்களையும் இன்னும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளையும் எடுத்த காரணத்தால், வேளாண் பெருமக்களின் வருமானம் வெகுவாக உயர்ந்து, கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முத்தாய்ப்பாக, வேளாண் பெருமக்களாகிய நீங்கள் கடுமையாக உழைத்ததன் காரணமாக தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி பெருகி, தமிழ்நாடு மத்திய அரசின் உயரிய விருதான ‘‘கிருஷி கர்மான்” விருதினை கடந்த 8 ஆண்டுகளில் 5 முறை பெற்றுள்ளது. இந்த சிறப்பை வேளாண் பெருமக்களாகிய உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்.

இது போன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அம்மாவின் அரசு, ஒரு மைல் கல்லாக இங்கு வேளாண் பெருமக்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும், மீனவ நண்பர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக, உலகத் தரத்தில் மிகப் பிரமாண்டமான நவீன கால்நடைப் பூங்கா சுமார் 1,023 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க உள்ளது. அம்மாவுடைய அரசு வேளாண்மை, தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூகநல திட்டங்கள் உள்ளிட்ட பத்து துறைகளில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஐம்பது குறியீடுகளின் அடிப்படையில், 2019க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதனைகளை கண்டு பொறாமை

அம்மாவின் அரசு எடுத்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் காரணமாக மத்திய அரசு மட்டுமன்றி, பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் இந்த அரசு பெற்றுள்ளது. இதைக் கண்டு பொறாமையில் இருக்கும் எதிர்க் கட்சியினர், விருது வழங்குபவர்களை கொச்சைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். தமிழ்நாடு அரசுக்கு விருது கொடுத்தவர் யார்? அவரை கூப்பிட்டு வாருங்கள், நான் அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சொன்னார். தேசிய விருது பெறுவது எவ்வளவு பெருமை. அதுவும் தமிழ்நாடு இன்றைக்கு முதன்மையாக வந்திருக்கின்றது என்று சொன்னால், அது அனைவருக்கும் பெருமை. தனிப்பட்ட அரசிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை. ஆனால் ஒருவருக்கு மட்டும் பொறுத்து கொள்ள முடியவில்லை. அவர் தான் எதிர்க்கட்சி தலைவர். இந்த விருது பெறுவதற்கு கடுமையாக உழைத்த அரசு அலுவலர்களுக்கும் இன்றைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *