சினிமா

அவதூறு பரப்பிய சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு

சென்னை, அக். 21–

தன்னைப் பற்றிய அவதூறான தகவல்களைப் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

அண்மையில் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக சமந்தா அறிவித்தார். நாக சைதன்யாவும் அதேபோன்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக ஊடகங்களிலும், சில யூடியூப் தளங்களிலும் விவாதிக்கப்பட்டன.

மான நஷ்ட வழக்கு

இந்த விவாகரத்துக்கு காரணம் சமந்தாதான் என்று அவரைப் பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே, தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் நாக சைதன்யாவோ, அவரது குடும்பத்தில் மற்றவர்களோ சமந்தாவுக்கு ஆதரவு தரவில்லை.

இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சுமன் டிவி, தெலுங்கு பாப்புலர் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசியதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *