சிறுகதை

அழகு – கரூர். அ. செல்வராஜ்

மடிக்கணினியில் முக்கியமான தரவுகளைப் பதிவேற்றம் செய்து முடித்துவிட்டுத் தண்ணீர் குடிப்பதற்காகப் பாட்டிலைக் கையில் எடுத்தான் மோகன்குமார். பாட்டிலில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது. கோடை வெப்பத்தால் ஏற்பட்ட தாகத்தைத் தணிக்கப் போதுமான தண்ணீர் இல்லாத பாட்டிலைக் கையில் எடுத்துக் கொண்டு மாடிப்படிகளில் நடந்து கீழே இறங்கி சமையல் அறைக்கு வந்து கேனிலிருந்த தண்ணீரைப் பாட்டிலில் பிடித்தான். பிடித்த பாட்டில் தண்ணீர் முழுவதையும் குடித்துத் தாகத்தைத் தணித்தான்.

தண்ணீர் தாகம் தணிந்த பின்பு சமையல் அறையிலிருந்து வெளியேறிக் கூடத்திற்கு வந்து அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தான். அப்போது அங்கே வந்த அவனது அம்மா மாலதி ,

‘மோகன் கண்ணு’என்றாள்.

‘சொல்லுங்கம்மா’

‘உன் ஆபீஸ் வேலை எல்லாம் முடிஞ்சுதா’

‘முழுசா முடியலேம்மா, இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்குது. அது இருக்கட்டும். நீங்க சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுங்கம்மா’

‘மோகன் கண்ணு, தை மாசம் உன் தங்கச்சி அனுராதாவைப் பொண்ணு பார்க்க தஞ்சாவூரிலிருந்து ஒரு மாப்பிள்ளை வந்தாரு. உனக்கு அது ஞாபகம் இருக்குதாப்பா?’

‘ஆமாம்மா, நல்லா ஞாபகம் இருக்குது. தங்கச்சியைப் பொண்ணு பார்த்துட்டுப் போனாங்க. ஆனா முடிவு ஏதும் சொல்லாமே புறப்பட்டுப் போயிட்டாங்க. தரகர் தனபாலும் இதுவரை எந்தப் பதிலும் நமக்கு சொல்லலே’

‘ஆமாப்பா, அந்த விஷயமா மூணு நாளைக்கு முன்னாலே எனக்கு ஒரு தகவல் கிடைச்சுது’

‘அது என்ன தகவல்? சொல்லுங்கம்மா’

‘உன் தங்கச்சி அனுவைப் பொண்ணு பார்க்க வந்த தஞ்சாவூர் மாப்பிள்ளை பேரு ராகேஷ். அவருக்குத் தஞ்சாவூர் காலேஜிலே படிக்கும்போத நம்ம அனுவைத் தெரியுமாம். அவளைக் கருவாச்சி, கருவாச்சின்னு கூப்பிட்டுக் கிண்டல் பண்ணுவாராம். இந்த விஷயம் இப்பதான் அதாவது மூணு நாளைக்கு முன்னாலே தான் தெரிஞ்சுது. இந்த விஷயத்தை எனக்கு எதிர்த்த வீட்டு இளவரசி அம்மா தான் சொன்னாங்க’

‘அம்மா’

‘சொல்லுப்பா மோகன்’

‘புற அழகே பேரழகு அப்படீன்னு நினைச்சு ஒதுங்கிச் சென்ற ராஜேஷை விட்டுத் தள்ளுங்க. சிவப்பு நிறப் பொண்ணு தான் பேரழகின்னு சொல்லித் திரியற மாப்பிள்ளைகளை நம்ம அனுவுக்குப் பார்க்க வேண்டாம். விவசாயப் பட்டப் படிப்பு படிச்சுட்டு அரசாங்க வேலைக்குப் போகாமல், பாரம்பரிய விவசாயம் செய்து சொந்தக் காலில் நின்னு சுகமாக, சுதந்திரமா வாழ்ந்துகிட்டிருக்கிற உங்க அண்ணன் மகன் அசோக்குமாருக்கு நம்ம அனுவைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திடலாம். என்ன சொல்றீங்க?’

‘தம்பி மோகன், நீ ஆசைப்பட்டா மட்டும் போதாது? அனுவைக் கல்யாணம் செஞ்சுக்க அசோக்குமாருக்கு விருப்பம் இருக்கணுமே?’

‘அம்மா! அசோக்குமாருக்கு அனுவைக் கல்யாணம் பண்ணிக்க ஆசை இருக்குது. அது எனக்குத் தெரிஞ்ச விஷயம். அசோக்குமார் – அனு கல்யாணத்துக்கு நீங்களும் அப்பாவும் சம்மதம் சொல்லுங்க. மத்த ஏற்பாடுகளை நான் செய்து முடிக்கிறேன்’

‘சரிப்பா மோகன்’

சொன்ன சொல்லை அம்மா காப்பாற்றியதால் தன் தங்கை அனுராதாவை அசோக்குமாரைத் திருமணம் செய்து வைத்தான் மோகன் குமார்.

அக அழகே பேரழகு என்பதை அறிந்த அசோக்குமாரை அனைவரும் பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *