நாடும் நடப்பும்
இரண்டு நாட்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க தயாராகிவிட்டனர்.
2024–ல் பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் இது நடப்பு ஆட்சியின் இறுதி முழு பட்ஜெட் என்பதால் சாமானியர்கள் பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கான செலவினங்களை சந்திக்க மத்திய அரசின் கஜானா தயாராக இருக்கிறதா? அதை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் இருந்தால் வருவாய் பெற வரிச் சுமையும், மானிய சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டிய நிலை தானே வரும்?!
எது எப்படியோ, பட்ஜெட் சமர்ப்பித்த சில வாரங்களில் வடகிழக்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்த்கள் நடைபெற இருக்கிறது?
14 மாதங்களில் நாடே பொதுத்தேர்தல்களுக்கு தயாராகி விடும். இந்த நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்படிப்பட்ட பட்ஜெட்டை சமர்ப்பிப்பார் என்ற எதிர்பார்ப்பில் நாடே காத்திருக்கிறது.
மக்களின் மனநிலை இதுவரை ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு சாதகமாகவே இருப்பதை பல கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகிறது.
சமீபத்தில் மக்களின் மனநிலை குறித்து இந்தியா டுடே, சி வோட்டர் சார்பில் தேசிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் 67% மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தல்களை மோடி அரசு திறம்பட எதிர்கொண்டு வருகிறது என்று பெரும்பாலான மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது பா.ஜ.க. அரசின் மிகப்பெரிய சாதனை என்று மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சுமார் 18% பேர் மட்டுமே மத்திய அரசு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். நாட்டின் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியமா என்ற கேள்விக்கு 69% பேர் அவசியம் என்று பதில் அளித்துள்ளனர். 19% பேர் மட்டுமே பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஹிஜாபுக்கு தடை விதிப்பது சரியா என்ற கேள்விக்கு 57% பேர் சரி என்றும் 26% பேர் தவறு என்றும் பதில் கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது சரியான அணுகுமுறையா என்பது குறித்து மக்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு 38% பேர் சரி என்று பதில் அளித்தனர். அரசு நிர்வாகமே, நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்று 19% பேர் வாக்களித்தனர். அரசு மற்றும் நீதித்துறை இணைந்து நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று 31% பேர் கருத்து தெரிவித்தனர்.
இந்த ஆண்டு 10 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் இந்தியா டுடேவின் கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இன்று நிலவும் மக்கள் மனநிலை அப்படியே தொடர்வது சாத்தியமற்றது. சீறிப் பாய்ந்து வரும் சிறுத்தை திடீர் என வேறு திசையில் சென்று விடும் அல்லவா? அதேபோன்று வாக்காளர்களின் மனநிலையும் மாறிவிடும். அதை மனதில் கொண்டு பட்ஜெட்டை சமர்பித்தால் பொருளாதாரம் பலமின்றி சரியும் அச்சமும் இருக்கிறது.
அரசியல், மக்கள் நலன், பொருளாதார மீட்சி என பல்வேறு முட்புதரில் லாவகமாக நடந்து சமர்ப்பிக்க இருக்கும் பட்ஜெட், நிர்மலா சீதாராமனின் திறமைக்கு மிகப்பெரிய சவால். அதை சமாளிக்கும் திறன் அவருக்கு இருக்கிறது, அதை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் நாடே காத்திருக்கிறது.