சிறுகதை

அய்யனார் கோவில் தோப்பில் ஆப்பிள் மரங்கள்! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

வீட்டுக் கொல்லையில் நீண்ட நேரமாக ஒரு காக்கை கத்திக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த சிறுவன் ராமநாதன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான்.

‘இந்த காக்கா ஏன் இப்படி கத்திக் கொண்டே இருக்கிறது’ என்று சலித்துக் கொண்டே கொல்லைப்புறத்துக்குப் போனான். கிணற்றடியில் இருந்த வேப்ப மரத்திலிருந்து ஒரு அண்டங்காக்கை கத்திக் கொண்டிருந்தது. அதை “ச்சூ…ச்சூ…” என்று கையால் விரட்டினான். அது கத்துவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்ததே தவிர பயந்து பறந்து போகவில்லை.

ராமநாதன் கொல்லைச் சுவற்றின் மாடத்திலிருந்த பல்பொடியை எடுத்து பல்லை விளக்கிவிட்டு முகம், கை, காலெல்லாம் கழுவி விட்டு, மாட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த எருமை மாட்டைப் பார்த்தான். அதன் அருகே அதன் கன்றுக் குட்டி கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தது. ராமநாதன் வைக்கோல் போரிலிருந்து கொஞ்சம் வைக்கோலை உருவி எடுத்து வந்து அந்த மாட்டுக்குப் போட்டான்.

அப்போது வேலி ஓரத்திலிருந்த எலுமிச்சை மரம் அவன் கண்ணில் பட்டது. அந்த எலுமிச்சை மரத்தில் மஞ்சள் மஞ்சளாக பழங்கள் பழுத்துக் குலுங்கின. அந்த கிராமத்தில் அதை யாரும் விலைக்கு கேட்காததால் அவை அப்படியே பறிக்காமலேயே கிடந்தது. எலுமிச்சை மரத்தின் கீழே தரை காய்ந்துக் கிடப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு வாளி தண்ணீரைப் பிடித்து வந்து அதற்கு ஊற்றினான்.

வீட்டுக்குள் நுழைந்த ராமநாதனுக்கு அம்மா தோசை சுட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

“அடேய்… முடக்கத்தான் தோசை சுடுகிறேன் சாப்பிடு, உடம்புக்கு நல்லது” என்று அவனுடைய அம்மா சொல்ல, “அதெல்லாம் வேண்டாம். அது எனக்கு பிடிக்காது” என்றபடி ஒரு கிண்ணத்தில் இருந்த பழைய சாதத்தை, நல்ல கெட்டி எருமைத் தயிரைப் போட்டுப் பிசைந்து எலுமிச்சை ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தான்.

இந்த கொரோனா வந்து பள்ளிக் கூடமெல்லாம் ஒரு வருடத்திற்கு மேலாக மூடியே கிடப்பதால் அவன் வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிட்டது. வீட்டுத் திண்ணையில் வந்து ராமநாதன் ஒரு மணி நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அதன் பிறகு ‘சரி, குளத்திற்குப் போய் குளித்துவிட்டு வருவோம்’ என்று ஒரு சிவப்பு துண்டையும் சோப்பு பெட்டியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அப்போதே வெயில் சுள்ளென்று அடித்தது. மணி ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருக்கும் போலிருக்கு!

ராமநாதன் குளத்தை நோக்கி சென்றபோது வேலி ஓரத்தில், ஒரு காட்டாமணக்கு செடியின் இலையில் தட்டாரப் பூச்சி ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அதைப் பிடிக்கலாம் என்று நினைத்த அவனுக்கு, முன்பு சயின்ஸ் வாத்தியார் சண்முகம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ‘தட்டான் போன்ற பூச்சிகளைப் பிடித்து விளையாடி, அதை துன்புறுத்தக் கூடாது. தட்டான்கள் கொசுக்களைக் கொன்று கொசுக்கள் பெருகுவதைக் குறைத்ததால்தான் முன்பெல்லாம் கொசுக்களின் தொந்தரவு மிகவும் குறைவாக இருந்தது. இப்போது கொசுக்கள் அதிகமானதுக்கு தட்டாரப் பூச்சிகள் பெருமளவு அழிந்துப் போனதும் ஒரு காரணம்’ என்று அவர் சொல்லியிருந்தார். அதனால் அந்த தட்டாரப் பூச்சியை பார்த்துக் கொண்டே பேசாமல் நடந்தான்.

ராமநாதன் குளத்தையடைந்தபோது அங்கே யாருமில்லை. அந்த சுற்றுப்புற சூழ்நிலையே அமைதியாக இருந்தது. கரையோரைத்திலிருந்த துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்தான் ராமநாதன். துண்டைக் கட்டிக் கொண்டு, கால் சட்டை, மேல் சட்டை இரண்டையும் கழற்றி, குளத்து தண்ணீரில் நனைத்து, அந்தக் கல்லில் நன்றாக அடித்து துவைத்து, அலசி பிழிந்து வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கி நன்றாக மூழ்கி மூழ்கி குளித்தான். சோப்பைக் கையில் எடுத்தபோது அது கை நழுவி, குளத்தில் விழுந்தது. ராமநாதன் பதறிப் போய், “ஐயயோ… அம்மா அடிக்குமே!” என்றபடி குளத்து தண்ணீரில் கையை விட்டு துழாவினான். அவன் நல்ல நேரம் சோப்பு உடனே அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது. ‘புது சோப்பாச்சே!’ என்று நினைத்துக் கொண்டான்.

துண்டை நன்றாகப் பிழிந்து இடுப்பில் கட்டிக் கொண்டு, ஒரு கையில் பிழிந்த சட்டைத் துணிகள், இன்னொரு கையில் சோப்பு பெட்டியுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

அந்த ஆளில்லாத பூட்டிய வீடு அருகே வந்தபோது, அங்கே தெரு ஓரத்திலிருந்த வாதா மரத்திலிருந்து சலசலவென்ற இலைகளின் சத்தத்துடன் ஒரு முற்றிய வாதாங்காய் தொப்பென்று தரையில் விழுந்தது.

அவ்வளவுதான், ராமநாதன் அவசரம் அவசரமாக அருகேயிருந்த மைல் கல் மீது கையால் ஒரு துடைத்து விட்டு, அதன் மீது தனது பிழிந்து எடுத்து வந்த ஈரதுணிகளையும் சோப்பு பெட்டியையும் வைத்துவிட்டு, வேகமாக அந்த வாதாங்காயை எடுக்க ஓடினான்.

ராமநாதன் அந்த வாதாங்காயை குனிந்து எடுத்தபோது, சட்டென்று எதிர்பாராதவிதமாக அவன் இடுப்பில் கட்டியிருந்த அந்த துண்டு அவிழ்ந்து தரையில் விழுந்தது. ஒரு அரை நிமிட நேரம் அம்மணமாகி விட்ட அவன் பதறி, மறுபடியும் அந்த துண்டையெடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். ‘அங்கே யாரும் இல்லை, யாரும் பார்க்கவில்லை’ என்பதை உணர்ந்தபோது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

அதே சமயம் அந்த ஈரத்துண்டு கொறகொறவென்று மண்ணுடன் இருப்பதை உணர்ந்தான். ‘இதோ கிட்டேதானே குளம்; மறுபடியும் இறங்கி குளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தபடி அந்த வாதாங்காயை அந்த ஆளில்லாத வீட்டுத் திண்ணையில் வைத்து, ஒரு பெரிய கல்லாக தேடியெடுத்து வந்து, அதை பருப்பு தூளாகமல் பக்குவமாக உடைத்து எடுத்து சாப்பிட்டான். எனோ அதில் ஒரு அலாதி திருப்தி அவனுக்கு!

மறுபடியும் குளத்திற்கு சென்று தண்ணீரில் இறங்கி, துண்டை நன்றாக அலசி பிழிந்து இடுப்பில் கட்டிக் கொண்டு திரும்பினான்.

தனது வீட்டை நெருங்கியபோதுதான், ஏதோ குறைவதுபோல அவன் மனதிற்கு பட்டது. ‘ஐயயோ…சட்டைத் துணிகளையும் சோப்பு பெட்டியையும் அந்த மைல் கல்லிலேயே வைத்துவிட்டு எடுக்க மறந்து விட்டோமே’ என்று திரும்பவும் அந்தக் கட்டியிருந்த துண்டை நன்றாக இறுகப் பிடித்துக் கொண்டு ஓடினான்!

பகல் பதினோரு மணியாகியிருந்தது. ராமநாதன் மனம் போன போக்கில், கால்போன போக்கில் கிழக்கே அய்யனார் கோவில் பக்கம் சென்றான். அது குக்கிராமம் என்பதால் அந்தப் பக்கம் ஆள் நடமாட்டமில்லை. அந்த அய்யனார் கோவிலும் வெளியே இருந்த பூதக்கணங்களும் கல் குதிரையும் பாழடைந்து கிடந்தது.

‘எல்லா ஊர் அய்யனார் கோவில்களும் புதிதாகக் கட்டப்பட்டு, பெயிண்டெல்லாம் அடித்து புதுசாகயிருக்கும்போது, நம்ம ஊர் கோவில் மட்டும் இப்படியிருக்கே’ என்று நினைத்துக் கொண்டான்.

அந்த அய்யனார் கோவிலுக்குப் பின்புறம் மாமரங்கள், இலுப்பை மரங்கள், ஒதிய மரங்கள், வேப்ப மரங்கள் நிறைந்த ஒரு தோப்பும் இருந்தது. அந்த அய்யனார் கோவிலின் மடப்பள்ளி கூரை மேலே சமத்தளமாக கல்லில் கட்டப்பட்டிருந்தது. ராமநாதன் அந்த மடப்பள்ளி கூரை மீது ஏறி, அந்த மேல்தளத்தில் கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்தான். அந்த வெயில் நேரத்தில் கூட அங்கே மரங்களின் நிழலால் கொஞ்சம் இருளும் சூழ்ந்திருந்தது.

‘அட, இந்த அய்யனார் கோவில் தோப்பு மாமரங்கள் மட்டும் ஆப்பிள் மரங்களாக இருந்தால், ஆப்பிள் பழங்களாக பழுத்துத் தொங்கும்! பறித்து பறித்து சாப்பிடலாம்!’ என்று ராமநாதன் நினைத்துக் கொண்டான்.

அடுத்த நிமிடமே, அந்த நினைப்பே அவனுக்கு சிரிப்பைத் தந்தது. அதோடு ஆப்பிள் பழங்கள் ஊட்டி, இமாச்சல் பிரதேசம் மற்றும் குளிரான நாடுகளில்தான் விளையும்’ என்று யாரோ சொல்லியிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. இப்படியே ஒரு இரண்டு மணி நேர பொழுதை ‘சும்மா’ கழித்துவிட்டு வீட்டுக்கு வந்தான் ராமநாதன்.

அங்கே மதிய சாப்பாட்டுக்காக அடுப்பில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. ‘என்னம்மா இன்னைக்கு சாம்பார்?” என்று கேட்டான். “பாவக்காய்டா!” என்று அவன் அம்மா சொல்ல ராமநாதன் திடுக்கிட்டான். ‘இன்னைக்கு என்ன அம்மா, ஒரே கசப்பா போட்டு அழிச்சாட்டியம் செய்யுது? அப்பா மீது ஏதாவது கோபமாயென்று நினைத்தவனுக்கு கொல்லையில் வேலி ஓரத்தில் பாகற்காய் பறித்து மாளாத அளவுக்கு காய்த்து தொங்குவது நினைவுக்கு வந்தது. ‘சரி இரண்டு ஸ்பூன் நெய்யை அதிகம் போட்டுக்கிட்டு, சமாளிக்க வேண்டியதுதான்’ என்று நினைத்துக் கொண்டான்.

அப்போது வெளியே ஏதோ சத்தம் கேட்டது. ராமநாதன் வீட்டுக்கு வெளியே வந்துப் பார்த்தான்.

போஸ்ட்மேன் ஆறுமுகம்தான் பைக்கிலிருந்து வந்து இறங்கினார். அவர் கையில் ஒரு பத்திரிகை இருப்பதைப் பார்த்தான். ‘மின்மினி’ என்ற சிறுவர் பத்திரிகைக்கு அவனுக்காக அவங்க அப்பா, ஒரு வருடத்திற்கு சந்தா கட்டியிருந்தார். அந்த பத்திரிகைதான் தபாலில் வந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.

அந்த போஸ்ட்மேன் பெயர் ஆறுமுகம் என்பதும் அவர் பத்திரிகைக்கு கதையெல்லாம் எழுதுவார் என்றும் பக்கத்து வீட்டு அக்கா சொல்லியிருப்பதால், அந்த போஸ்ட்மேனை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.

அந்த போஸ்ட்மேன் தபாலில் வந்திருந்த அந்த பத்திரிகையை ராமநாதனிடம் கொடுத்துவிட்டு, “நீ கதையெல்லாம் எழுதுவியா?” என்று கேட்டார்.

“எழுதுவேன், ஆனால் இன்னும் பத்திரிகையில் வரவில்லை!” என்றான் கொஞ்சம் வருத்தத்துடன்.

“பத்திரிகையில் கதை வந்தால் சொல்லு!” என்றார் அந்த போஸ்ட்மேன். அவர் எழுத்தாளர்களுக்காக ‘வாட்ஸ்-அப்’பில் ஒரு குழு நடத்துகிறார். ஒருசமயம் ராமநாதனையும் அந்தக் குழுவில் சேர்க்கலாமென்று அவர் நினைக்கிறாரோ என்னவோ!

“நல்ல வெயிலாயிருக்கு! போய் குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டுவா!” என்றார் அந்த போஸ்ட்மேன்.

“தண்ணியா! மோரேயிருக்கு கொண்டு வருகிறேன். கொஞ்சம் எலுமிச்சம் பழம் பிழிந்து உப்பு போட்டு கொண்டு வருகிறேன்!” என்றபடி ராமநாதன் வீட்டுக்குள் ஓடினான். ஆறுமுகத்திற்கும் அவங்க வீட்டிலே மாடெல்லாம் இருப்பது தெரியும் என்பதால் பேசாமல் இருந்தார்.

ராமநாதன் ஒரு சின்ன சொம்பில் மோரை எடுத்து வந்தான். “இவ்வளவு வேண்டாம்டா!” என்று சொல்லியபடி ஒரு இரண்டு டம்ளர் மோரைக் குடித்துவிட்டு, “டேய்… அடுத்த தடவை நான் இங்கே வரும்போது உனக்காக சில கதைப் புத்தகங்கள் எடுத்து வந்து கொடுத்துவிட்டுப் போகிறேன். இந்த லீவில் நீ படிக்கலாம்!” என்றபடி கிளம்பினார். ராமநாதன் அந்த போஸ்ட்மேனையே சந்தோஷமாக பார்த்துக் கொண்டு நின்றான்.

ராமநாதன் மதியம் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கினான்.

மாலை நான்கு மணியாகியது. அவனுடைய அப்பா அவனைக் கூப்பிட்டு, “மாட்டுத் தீவனம் புண்ணாக்கு இல்லைடா, போய் வாங்கி வா!” என்று ஒரு பையையும் பணத்தையும் கொடுத்து அனுப்பினார்.

கடை அரை மைல் தூரத்தில் இருந்தது. நடந்து போகும்போது மஞ்சள் நிறத்தில் அழகழகாக பூந்திருக்கும் ஒரு பூவரசு மரத்தைப் பார்த்தான். அதன் ஒரு தாழ்ந்த கிளையிலிருந்து ஒரு இலையை ஒரு தாவிப் பறித்து, அதை சுருட்டி, ‘பீப்பீ…’ என்று கொஞ்ச தூரம் ஊதிக் கொண்டே சென்றான். பிறகு அதன் சத்தம் அவனுக்கே பிடிக்காமல் அதை தூக்கியெறிந்துவிட்டு நடந்தான்.

கடைக்காரர் ஒரு கிலோ புண்ணாக்குக்கு பணத்தை வாங்கிக் கொண்டு, புண்ணாக்குடன் மீதியிருந்த ஒரு ரூபாய்க்கு ஒரு எலந்தை அடையையும் கொடுத்தார். அதை தின்று கொண்டே வீட்டுக்கு வந்தான் ராமநாதன்.

அப்படி வரும்போது, ‘இந்த கொரோனா என்னும் கொடுமையான தொற்று நோய் வருவதற்கு முன்பெல்லாம் பள்ளிக் கூடம் லீவு என்றாலே மனது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். எப்போதாவது ஒரு சனிக்கிழமை பள்ளிக் கூடம் வைத்துவிட்டாலோ அல்லது ஏதாவது பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமையில் வந்து விட்டாலோ கூட வருத்தமாக இருக்கும். கால் பரீட்சைக்கு பத்துநாள்தான் லீவா, அரைப் பரீட்சைக்கு பதினைந்து நாள்தான் லீவா என்று மனது எண்ணி எண்ணிப் பார்க்கும். இந்த பள்ளிக் கூடமே இல்லாமல் லீவாகவே இருந்தால் நன்றாகயிருக்குமே என்று கூட தோன்றும்.

இப்போதுதான் இந்த கொரோனா என்னும் கொடுந்தொற்றால் ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிக்கூடமே இல்லாமல் இருப்பது, ரொம்ப ரொம்ப சலிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்க செல்லும் வரை என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்கும் பயணம் செல்ல முடியவில்லை. பள்ளிக்கூட நண்பர்களைப் பார்க்க முடியவில்லை. பள்ளிக்கூடத்தின் அருமையே இப்போதுதான் புரிகிறது. எங்கும் ஒரே கஷ்டம்.

கடவுளே… சீக்கிரமே இந்த கொரோனாவை அழித்து உலகை மீண்டும் பழையபடி ஆக்கிவிடு. இப்போதுதான் ஒன்பதாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை திறந்திருக்கிறார்கள். விரைவிலேயே எல்லோருக்கும் பள்ளிக்கூட வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும். இந்த போரான வாழ்க்கை ஒரு முடிவுக்கு வர வேண்டும்!’ என்று நினைத்த படியே கடவுளை வேண்டிக் கொண்டே வந்து கொண்டிருந்தான் ராமநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *