புதுடெல்லி, ஏப்.18–
அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‘பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பலரும் அவருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதேநேரத்தில் தமிழக பா.ஜ.க.வினர் இளையராஜாவின் கருத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவரது கருத்துகளை வாபஸ் பெற வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தினர். ஆனால், தன் கருத்தை திரும்பப் பெற மாட்டார் என இளையராஜா கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். இதுமாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மையின்றி நடந்து கொள்கின்றன” என ஜே.பி.நட்டா ஒரு அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:–
‘‘உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா?
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா? ஆதரவாக பேசவில்லை என்பதால் அவரை விமர்சிப்பது தவறான அணுகுமுறை.
தேர்தலில் ஒதுக்கப்பட்ட கட்சிகளும், வெறுத்துப் போயிருக்கும் கட்சிகளும் இப்போது பாரதீய ஜனதாவை விமர்சித்து தாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.
1966–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, பார்லிமெண்டுக்கு வெளியே அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்து சாதுக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டை மறக்க முடியுமா?
இந்திரா காந்தி மறைந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் மீது நடந்த துப்பாக்கி சூது மரணத்தில் ‘‘ராட்சச மரம் தரையில் சாய்கிறபோது பூமி அதிர்கிறது’ என்று சொன்ன ராஜீவ்காந்தியின் வார்த்தைகளை மறக்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்திருக்கும் வன்முறை சம்பவங்களை அவர் பட்டியலிட்டார்.