சென்னை, நவ. 26–
தமிழக அமைச்சர் கே.என். நேருவின் ட்விட்டர் பக்கம் நேற்று இரவு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் ட்விட்டர் பக்கத்தில் திடீரென அமெரிக்க விண்வெளி மையமான நாசா பற்றிய பதிவுகள் இருந்தன.
இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கே.என். நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்திற்கு இதுகுறித்து தி.மு.க. ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, ” எனது ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குழு எனது ட்விட்டர் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ட்விட்டர் பக்கம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டவுடன் அது குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.