செய்திகள்

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கலவரம்

வாஷிங்டன், மே 31–
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து அங்கு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
பல்வேறு மாகாணங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடைபெறுவதால் ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25–ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது விசாரணை அதிகாரி, அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார்.
இதில் ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னபொலிஸ் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அதிலும் மினசோட்டா, ஜார்ஜியா, ஓகியோ, கென்டக்கி, டெக்சாஸ், கொலம்பியா ஆகிய இடங்களில் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இதையடுத்து பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மின்னபொலிஸ் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த நேற்று முன் தினம் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். உணவகம், வங்கி உள்ளிட்டவைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நீண்ட நேரமாக பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்த வீரர்கள் கடுமையாக போராடினர். நியூயார்க் முதல் அட்லாண்டா வரை பெரும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
ஓக்லாந்தில் உள்ள பிரபல கார் ஷோரூமை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனால் பல வாகனங்கள் சேதமடைந்தன. இந்தநிலையில் மின்னபொலிஸ் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அமெரிக்க ராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில் இந்த குண்டர்கள் ஜார்ஜ் பிளாய்டிற்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அசம்பாவிதம் நேர்ந்தால் நிலைமை கட்டுப்படுத்தப்படும். சூறையாடல் தொடங்கினால் துப்பாக்கிச் சூடு தொடங்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் டிரம்ப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *