சிறுகதை

அமெரிக்காவில் தை அமாவாசை ‘ வெள்ளை காக்கைக்கு ’ திதி கொடுத்த தாத்தா !


சிகாகோ சின்னஞ்சிறுகோபு


என்னுடைய ராமசாமி தாத்தா அமெரிக்கா வந்திருந்தார். இந்த ராமசாமி தாத்தா என்னுடைய அம்மாவின் அப்பா. இவர் அந்த காலத்திலேயே கல்லூரிக்கெல்லாம் சென்று படித்து, பள்ளிக்கூட ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடவுள் பக்தி மிகுந்த இவர் சனாதன தர்மத்தில் கூறிய ஆசாரத்துடன் அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பவர். இந்த 85 வயதிலும் ஆரோக்கியமாக திடகாத்திரமாக இருந்தார்.

இவருக்கு அமெரிக்காவுக்கு வந்து சுற்றிப் பார்க்க வேண்டுமென்று நீண்டகாலமாகவே உள் மனதில் ஒரு ஆசை இருந்திருக்கிறது. நான் இந்த அமெரிக்காவின் சிகாகோவுக்கு வேலைக்கு வந்ததிலிருந்தே, ‘நானும் ஒரு தடவை அமெரிக்கா வரவேண்டும்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். இந்த தடவை என்னுடைய அம்மா இந்தியாவிலிருந்து வந்தபோது தாத்தாவும் கூட வந்துவிட்டார்!

தாத்தா என்னை போல கிடையாது. இவர் அந்த காலத்து மனிதர். காலையில் எழுந்து குளித்து, தூய்மையான துவைத்த ஆடைகளை உடுத்திக்கொண்டு, திருநூறு பூசிக்கொண்டு, கடவுள் வழிப்பாட்டை முடித்துவிட்டுதான் காலை உணவையே முடிப்பார்.

அன்று காலையில் நான் ஆபீஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்தபோது, “டேய்… விசு, இங்கே சிகாகோவில் காக்கைககள் இருக்கிறதா?” என்று கேட்டார்.

எனக்கு ஆச்சரியம்! “எதுக்கு தாத்தா கேட்கிறிங்க? இருப்பதாக தெரியவில்லை. நான் பார்த்ததில்லை! ஆனால் நம் வீட்டுக்கு பின்புறம் இருக்கே, அந்த மிக்சிகன் ஏரிக்கரையில் சீகல் என்று ஒருவகை நீர்வாழ் பறவைகள் இருக்கின்றன. அவைகளின் உடலமைப்பும் காக்கை மாதிரிதான் அந்தளவுக்குதான் இருக்கும். ஆனால் வெள்ளை நிறத்தில் இருக்கும். அலகுதான் நம்ம தேசத்து காக்கை போல இல்லாமல் கொஞ்சம் புறா அலகுபோல இருக்கும். இதுவும் மனிதர்கள் போடும் உணவை கூட்டமாக வந்து சாப்பிடும். கொஞ்சம் ஏமாந்தால் நம் கையிலிருக்கும் உணவுப் பொருளைக் கூட நம்மூர் காக்கைகளை போலவே தட்டிப்பறித்துக் கூட செல்லும்!” என்றபடி நான் ஆபீஸுக்கு சென்றுவிட்டேன்.

எனக்கு அன்று தை அமாவாசை என்றெல்லாம் தெரியாது! ஆனால் தாத்தாவுக்கோ இந்த தை அமாவாசையில் தனது முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் கொஞ்சம் இருந்திருக்கிறது. அதாவது பரவாயில்லை, ‘தை அமாவாசையும் அதுவுமாக காக்கைகளுக்கு சாதம் வைக்காமல் எப்படி சாப்பிடமுடியும்?’ என்று அவர் நினைத்திருக்கிறார்.

அமாவாசை நாளில் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. அமாவாசையில் காகத்திற்கு சாதம் வைத்தால், மேலுலகத்தில் வாழும் நம் முன்னோர்கள் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார்கள் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்திலெல்லாம் அதிக நம்பிக்கையுள்ள என்னுடைய தாத்தா, தை அமாவாசையும் அதுவுமா காக்கைகளுக்கு சாதம் வைக்காமல் எப்படி சாப்பிடுவது என்று யோசித்திருக்கிறார்.

அப்போது ‘பக்கத்து ஏரியில் காகங்கள் போல, சீகல் என்ற பறவைகள் இருக்கிறது. அது மனிதன் வைக்கும் உணவுகளை சாப்பிடும்’ என்று நான் சொன்னது நினைவுக்கு வந்திருக்கிறது.

உடனே வீட்டில் எனது அம்மா சமைத்து வைத்திருந்த பருப்பு சாதம், வடை போன்றவைகளில் கொஞ்சம் தாராளமாகவே ஒரு பாத்திரத்தில் அள்ளிப்போட்டுக்கொண்டு பக்கத்திலிருக்கும் மிக்சிகன் ஏரி கரைக்கு சென்றிருக்கிறார்.

என்னுடைய தாத்தா அந்த ஏரிக்கரையிலிருந்த ஒரு கருங்கல் பாறையில் சாதத்தையும் வடைகளையும் வைத்தவுடனேயே, அங்கு பறந்துக்கொண்டிருந்த சீகல் பறவைகள் அதைக் கண்டுக்கொண்டு கூட்டமாகவந்து சாப்பிட ஆரம்பித்திருக்கின்றன!

அப்போது என் தாத்தாவின் முதுகிலே யாரோ தட்டுவது போல இருந்திருக்கிறது. தாத்தா திரும்பிப் பார்த்தால் இந்த நாட்டை சேர்ந்த ஒரு போலீஸ்!

தாத்தாவுக்கு போலீஸ்காரரைப் பார்த்ததும் கொஞ்சம் பயம்! அந்த போலீஸ்காரர் தாத்தாவைப் பார்த்து, “நீங்க யார்? இங்கே ஏன் சீகலுக்கு உணவுப்போடுகிறீர்கள்? இது குற்றம் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கொஞ்சம் மிரட்டலாகவே விசாரித்திருக்கிறார்.

நல்லவேளை, தாத்தாவுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும் என்பதால் சமாளித்து, எனது வீட்டை விரலால் சுட்டிக்காட்டி விபரம் சொல்லியிருக்கிறார்.

அந்த போலீஸ்காரரோ, “இதோ அருகேதான் இதைப்போன்ற வன உயிரினங்களுக்கு உணவு போடக்கூடாது என்று போர்டு வைத்திருக்கிறோமே! அப்படியும் எதற்காக இப்படி செய்கிறீர்கள்? இனி நீங்க இப்படி செய்தால் நிச்சயம் அபராதம் போடுவேன்!” என்று கடுமையாக ஆங்கிலத்தில் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

அப்போதுதான் தாத்தா, அருகேயிருந்த போர்டைப் பார்த்திருக்கிறார். அந்த போர்டில் PLEASE DO NOT FEED THE WILDLIFE என்று பெரிய எழுத்தில் சீகல், அணில், வாத்து படமெல்லாம் போட்டு எழுதியிருந்திருக்கிறது!

இந்த தை அமாவாசையில் வெள்ளைக்கார தேசத்துக்கு வந்து வெள்ளை காக்கைகளுக்கு சாதம் வெச்சு இப்படி ஆகிவிட்டதேயென்று அவருக்கு வருத்தம்!

‘இதைப்போன்ற வன உயிரினங்களுக்கு மனிதர்கள் உணவு அளித்து பழக்கிவிட்டால் அதன் இயல்பான இரைத்தேடும் பழக்கம் நாளடைவில் அற்றுப்போய், அதன் வாழ்க்கை முறையே மாறி, மனிதர்களை சார்ந்து வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுவிடும்’ என்பதற்காகதான் இந்த சட்டம் என்பது படித்த தாத்தாவுக்கு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது.

ஆனாலும் தாத்தாவுக்கு அந்த போலீஸ்காரர் அதட்டிவிட்டுப் போனதில் வருத்தம். இதை என் அம்மாவிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். இதை என் அம்மா போன் செய்து எனக்கு சொல்லியபோது, எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தது. முதலில் இந்த அமெரிக்க தேசத்தில் எப்படி எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்!


Leave a Reply

Your email address will not be published.