செய்திகள்

அமெரிக்காவில் சாலை விபத்து: இந்திய மாணவர்கள் 3 பேர் பலி

ஐதராபாத், அக். 27–

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த ஒரு மாணவர், தெலுங்கானாவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கடையபுலங்கா பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்ரீநிவாஸ் என்பவரின் மகன் சாய் நரசிம்மா (வயது 23). இவர் சென்னை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பி.டெக். முடித்ததும் வேலை கிடைத்தது. ஆனால், எம்.எஸ். பட்ட மேற்படிப்பு படிக்க அமெரிக்கா செல்ல ஆசைப்பட்டார். மகனின் ஆசையை நிறைவேற்ற பெற்றோர் முடிவு செய்து அவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள கனெடிக்ட் பகுதியில் அவர் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சாய் நரசிம்மா, ஐதராபாத்தை சேர்ந்த பிரேம்குமார் (23), வாரங்கலை சேர்ந்த பாவனி (24) உட்பட மொத்தம் 7 பேர் காரில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது அமெரிக்க நேரப்படி மாலை 7 மணியளவில், பனி மூட்டம் காரணமாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது அவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சாய் நரசிம்மா, பிரேம் குமார், பாவனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *