செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை 29 கோடி டோஸ் தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்

வாஷிங்டன், மே 30–

அமெரிக்காவில் இதுவரை 29.3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 29 கோடியே 37 லட்சத்து 5 ஆயிரத்து 50 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 28–ம் தேதி வெளியான தகவலின்படி மொத்தம் 29 கோடியே 20 லட்சத்து 99 ஆயிரத்து 778 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 16 கோடியே 71 லட்சத்து 57 ஆயிரத்து 43 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 13 கோடியே 44 லட்சத்து 18 ஆயிரத்து 748 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *