செய்திகள்

அப்போலோ – சாம்சங் நிறுவனம் சார்பில் நடமாடும் மருத்துவமனை: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைத்தார்

Spread the love

சென்னை, ஜூலை 11–
கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்குவதற்காக அப்போலோ – சாம்சங் நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் – அப்போலோ நடமாடும் மருத்துவமனையை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்தார்.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் – சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்து “சாம்சங் – அப்போலோ நடமாடும் மருத்துவமனை” என்ற பெயரில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளன. அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் தாக்கத்துக்கு எதிராக போராடி முன்னெச்சரிக்கை மருத்துவத்தை பின் தங்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக இந்த தொடக்க நிலை நோய் பரிசோதனை சேவை வழங்கப்படும். இந்த தொடக்க நிலை சோதனைகள் மற்றும் அதற்கான முகாம்களில் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, அப்போலோ மருத்துமனைகள் குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் சங்கீதா ரெட்டி, சாம்சங் நிறுவனத்தின் சென்னை உற்பத்தித் தொழிற்சாலை மேலாண்மை இயக்குநர் ஜே யங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடமாடும் மருத்துவ வாகனத்தின் செயல்பாட்டை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
அனைவருக்கும் மருத்துவ சேவைகள் கிடைப்பது அவசியம். குறிப்பாக, கிராமப் புறங்களில் மருத்துவ வசதிகள் சென்றடைய வேண்டும். அதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் அந்த வகை நோய்களால் 1.5 கோடி பேர் உயிரிழப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் விநாடிக்கு 10 பேர் தொற்றா நோய்களுக்கு பலியாகின்றனர். அவர்களில் 85 சதவீதம் பேர் நடுத்தர வகுப்பையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பையும் சேர்ந்தவர்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இளைஞர்கள் என்பதும் வலி நிறைந்த உண்மையாக உள்ளது. பெருகி வரும் நகரமயமாக்கத்தினாலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும் தான் தொற்றா நோய்களுக்கு பலர் ஆளாகின்றனர். புகை, மது, துரித உணவுகள் என உடலுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் நோய்களைத் தேடிப் பெற்றுக் கொள்கின்றனர். இது ஒருபுறமிருக்க உடல் பருமன் இன்றைக்கு பரவலாகக் காணப்படுகிற ஒரு நோயாக விளங்குகிறது. போதிய உடற்பயிற்சி இல்லாததே அதற்கு முக்கிய காரணம். ஆரோக்கியமான வாழ்வுக்கு முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் வேண்டும். நோய்கள் வந்த பிறகு மருத்துவரை நாடிச் செல்வதை விட அவை வராமல் தடுப்பதற்கான வழிகளை பேண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் பிரதாப் சி ரெட்டி
இந்த நிகழ்ச்சியில் பேசிய அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பேசியதாவது:
இந்தியாவில் அனைவருக்கும் ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவது மிகப் பெரிய சவாலான விஷயமாக உள்ளது. குறிப்பாக தொற்றா நோய்களால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் ஒவ்வொருவரும் சரியான நேரத்திற்கு மருத்துவமனைகளுக்குச் செல்ல முடிவதில்லை. தூரம், நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அதற்கு காரணம். மருத்துவமனையை அணுக முடியாத இந்த நிலையை மாற்றி இந்த சவாலை எதிர்கொள்ள அப்போலோ மருத்துவமனை முடிவு செய்தது. சாம்சங் நிறுவனத்தின் உதவியுடன் சாம்சங் அப்போலோ நடமாடும் மருத்துவமனை தற்போது தொடங்கப்பட்டு தேவைப்படும் ஒவ்வொருவரையும் அணுகி அவர்களது மருத்துவத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தொற்றா நோய்களுக்கு எதிரான எங்களின் இந்த போராட்டம் பெரு நகரங்களில் மட்டுமில்லாமல் இதரப் பகுதிகளுக்கும் சென்றடையும். மருத்துவமனைகளுக்குள் மட்டும் தான் சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில்லை. அப்போலோ மருத்துவமனை ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அதன் மூலம் அனைவரும் நலமுடன் இருப்பதை உறுதி செய்யும். ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குடிமக்கள் வளமான இந்தியாவை உருவாக்குவார்கள். அப்போலோ மருத்துவமனை இதற்காக தனது பங்குக்கு முடிந்த அனைத்தையும் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பீட்டர் ரே பேசுகையில், இந்த நடமாடும் மருத்துவமனை தமிழகத்தில் பின் தங்கிய கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்காக முகாம்களை நடத்தி தொற்றா நோய்கள் தடுப்பு தொடர்பான சேவைகள் மற்றும் இலவச மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *