செய்திகள்

அப்பாஸ் கல்ச்சுரல் 10 நாள் நாட்டிய நாடக விழா குதூகல ஆரம்பம்

20 பிரபல நாட்டிய ஆசான்களுக்கு கேடயம்; சித்ரா விஸ்வேஸ்வரன் வழங்கி வாழ்த்து

டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணன் முன்னிலை

சென்னை, ஏப்.24–

சென்னையில் கார்த்திக் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி வரும் பிரபல கலை நிறுவனமான அப்பாஸ் கல்ச்சுரல் சார்பில் 10 நாள் நாட்டிய நாடக விழா, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கலையரங்கில் குதூகலமாகத் துவங்கியது.

பிரபல நாட்டியக் கலைஞர் பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன் தலைமையேற்று விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பிரபல நாட்டியக் கலைஞர் டாக்டர் உன்னி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

அப்பாஸ் பெருமையுடன் வழங்கும் ‘‘சீசன் – ஒன்’’–ன் 10 நாள் நாட்டிய நாடக விழா.

‘‘28 நிகழ்ச்சிகள், 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள், வியக்க வைக்கும் இசை, காட்சி அமைப்புகள் என்பது நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும். திறமையான இளம் கலைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்க, பார்வையாளர்களிடையே ஓர் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நடன வடிவங்களில் புதிய எல்லைகளை ஆய்வு செய்திட, புண்ணிய பூமியாம் நம் பாரதத்தின் பாரம்பரிய – பழைமையான கலை – கலாச்சாரம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு–போதிக்க, இனிவரும் காலத்தில் அவர்களையும் கலாச்சாரத் தூதுவர்களாக உயர்த்திக் காட்டிட இந்த ஐம்பெரும் இலக்கோடு இன்று இக்கலை விழாவுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறோம் என்றார்கள். நிறுவனத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்கள். மனம் திறந்து பாராட்டுகிறேன்’’ என்று கூறினார் சித்ரா விஸ்வேஸ்வரன்.

‘‘இப்பயணம் இனி ஆண்டுதோறும் தொடரும்… தொடரும்… என்ற நம்பிக்கை வித்துக்களை விதைக்கிறோம் என்றார்கள். வெற்றிப் பயணமாக வாழ்த்துக்கள்’’ என்றார்.

பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன், டாக்டர் ஷீலா உன்னி கிருஷ்ணன், நந்தினி சுரேஷ், லட்சுமி ராமசுவாமி, அப்பாஸ் கார்த்திக்கின் துணைவியார் அனுஷா கார்த்திக் ஆகிய ஐவரும் குத்துவிளக்கேற்றினார்கள்.

பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரனுக்கும், டாக்டர் உன்னி கிருஷ்ணனுக்கும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நந்தினி சுரேஷ், அனுஷா கார்த்திக் பொன்னாடை போர்த்தி கவுரவித்து அன்புப் பரிசு வழங்கினார்கள்.

தொடர்ந்து பிரபல நாட்டிய ஆசான்கள் லட்சுமி ராமசாமி, திவ்யசேனா, பினேஷ் மகாதேவன், நந்தினி சுரேஷ், பத்மினி கிருஷ்ணமூர்த்தி, மதுசூதனன், வைதேகி ஹரீஷ், அர்ச்சனா நாராயணமூர்த்தி, ராதிகா வைரவேலவன், பிரியத்தனம் சார்பில் சசிரேகா ராம்மோகன், லதா ரவி, வாணி காயத்ரி, லஷ்மி ப்ரியா, ஆனந்தராஜ், செந்தில்குமார், பிரபாவதி, கேசவராஜா ஆகியோருக்கு நினைவுக் கேடயங்களை வழங்கினார் சித்ரா விஸ்வேஸ்வரன்.

இதே போல திரைமறைவில் உழைத்திருக்கும் வரதராஜன் (எம்எப்ஏசி செயலாளர்), அலமேலு ரமேஷ் (ஸ்கை கமர்ஷியல்ஸ்), ஏழுமலை (ஒளியும் ஒலியும்), கே. வெங்கட்ராமன் (முதுநிலை ஆலோசகர் அப்பாஸ்), மதுமதி (நிரானா க்ளோபல் நிர்வாக இயக்குனர்), ‘மோனி’ கிருஷ்ணன் கலை இயக்குனர், வி.பிரசாத் (பிரசாத் வீடியோஸ்), பாபு (தொழில் நுட்பக் கலைஞர் எம்எப்ஏசி) ஆகியோருக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

ஆறுமுகனும் – அருணகிரியும்

முடிவில் ஏற்புரையோடு நன்றி கூறினார் நந்தினி சுரேஷ். அனைவரையும் நிறுவன தலைவர் கார்த்திக் வரவேற்றார்.

துவக்க விழாவை தொடர்ந்து நந்தினி சுரேஷ் தலைமையிலான சாய் நிருத்யாலயா குழுவினரின் ‘ஆறுமுகனும் – அருணகிரியும்’ நாட்டிய நாடகம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published.