செய்திகள்

அபுதாபி நகரில் 10.9 ஹெக்டேரில் இந்து கோவில் கட்டுமான பணிகள் துவங்கியது: லட்சக்கணக்கான இந்தியர்கள் மகிழ்ச்சி

புதுடெல்லி, ஏப்.21–
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அபுதாபி நகரில் அமையவுள்ள முதல் இந்து கோவில் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் அமீரக மந்திரிகள், இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து அங்குள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க துபாய் –அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது. இதற்காக மொத்தம் 10.9 ஹெக்டேர் பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டது.
இந்தகோவில் கட்டுமான பணிகளுக்கும், அதனை நிர்வகிக்கவும் குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்சார் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா) என்ற இந்து அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அபுதாபியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது அமீரகம் வந்திருந்த பிரதமர் மோடி, கோவில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் மாதிரியை துபாய் ஒபெரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அபுதாபி நகரில் நேற்று நடை பெற்ற கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் கோயில் அமைப்பதற்கான இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு செங்கல் வைத்து 2 மணிநேர பிரமாண்ட யாகம், பூஜை, சடங்குகள் நடைபெற்றன. இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இளஞ்சிவப்பு கல்லை கொண்டு முதற்கட்ட அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்தது. இந்த பூஜை ‘சிலன்யாஸ் விதி’ என அழைக்கப்படுகிறது. சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக 50-க்கும் மேற்பட்ட சாமியார்கள் இந்தியாவில் இருந்து சென்று இருந்தனர்.
இந்திய தூதர் பங்கேற்பு
நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் நவ்தீப் சுரி கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய அறிக்கையை வாசித்தார். இந்துக் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்த அரசுக்கு பிரதமர் மோடி தனது அறிக்கையில் பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் அபு தாபியின் இளவரசர் ஷேக் முகம் மது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கும் அவர் தனது பாராட்டுகளை அதில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கோயில் கட்டும் பணிகள் நிறைவடையும்போது உலகளவிலான மனித மதிப்புகளையும், ஆன்மீக மதிப்புகளையும் அடை யாளப்படுத்தும் இடமாக கோயில் மாறியிருக்கும். மேலும் இது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பாரம்பரியத்தை பகிர்ந்துகொண்டது போல் அமையும் என்றும் மோடி அதில் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 33 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். 2015-ல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது கோயில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்தது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
அபுதாபி – துபாய் நெடுஞ்சாலையில் அபு மரைக்கா என்ற இடத்தில் 14 ஏக்கர் நிலப்பரப்பளவில் கோயில் அழகுற அமைகிறது. கோயிலில் கலாசார வளாகம், ஆர்ட் கேலரி, தியான மண்டபங்கள், நூலகம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவை அமையவுள்ளன.
இந்திய சிற்பிகள்
இந்த கோயிலுக்கான தூண்கள், சிற்பங்களை இந்தியாவில் உள்ள சிற்பக் கலைஞர்கள் உருவாக்குகின்றனர். பின்னர் அவை துபாய் கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்படும்.
அடுத்த ஆண்டுக்குள் (2020) இந்த கோவில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைய உள்ளது. கோவில் வளாகத்தில் இந்து மக்கள் தங்கள் வழக்கப்படி திருமணங்களை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அனைத்துவிதமான திருவிழா மற்றும் இந்து விழா கொண்டாட்டங்களுக்கும் வசதி செய்து தரப்பட உள்ளது. இந்த கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்தால், இங்கு ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் வழிபடலாம் என பாப்ஸ் அமைப்பின் நிர்வாகி சுவாமி பிரம்ம விஹாரி கூறினார்.
மத்திய கிழக்கு பகுதியில் கட்டப்பட இருக்கும் முதலாவது இந்து கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெறுகிறது.
இதுகுறித்து துபாயிலுள்ள பாரதீய ஜனதாவின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு செய்தித்தொடர் பாளர் சஞ்சீவ் புருஷோத்தமன் கூறும்போது, ‘‘ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக கடைப் பிடிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கோயில் வழிபாட்டுக்கான இடம் மட்டுமல்ல. மனித மேம்பாடு, நல்லிணக்கத்தை சமுதாயத்தின் இடையே உருவாக்கும் இடமாக இது இருக்கும்” என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் சுவாமி மகராஜ் மற்றும் அவரது பிரதிநிதிகளை அபுதாபியின் இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் சென்று வரவேற்றார்.
உலகம் முழுவதும் 4,200 மையங்களில் அமைந்துள்ள 1,200 கோயில்களின் தலைவராகவும், பீடாதிபதியாகவும் சுவாமி மகராஜ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *