செய்திகள்

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தமிழக அரசு தடை

சென்னை, டிச. 13–

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பான அரசாணை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்கொலையை தடுக்கும் நோக்கில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.

மோம்னோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர்பெத்ரின் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குளோரோபைரியாஸ் + சைபர்மெத்ரின் மற்றும் குளோரோபைரியாஸ் மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

எலி மருந்துக்கு

நிரந்தர தடை

மேலும் எலிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்கின்றனர்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் கடும் விதிமுறைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது.

1980 மற்றும் 1990களில் உலகிலேயே பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிக தற்கொலைகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கியது.

2015ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளதாகவும், அதில் 24 ஆயிரம் பேரின் இறப்புக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளே காரணம் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2012ம் ஆண்டு தென் கொரியாவில் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து தடைசெய்யப்பட்ட உடனேயே, அந்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை உடனடியாக குறைந்தது.

தமிழகத்தில் 2017–18ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தபோது 4 விவசாயிகள் மருந்தின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இது தமிழக விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. உண்மை கண்டறியும் குழு, பூச்சி மருந்து பாதிப்புகளால் இறந்த விவசாயிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *