சிறுகதை

அனுஷாவின் ஆசை-ஆவடி ரமேஷ்குமார்

தரகர் சாமியப்பன் சொன்ன விஷயத்தை கேட்டதும் விஸ்வமும் அவனின் தந்தை தர்மராஜூம் அம்மா பூங்கோதையும் அதிர்ச்சியடைந்தார்கள்.

” என்ன கொடுமைங்க இது’’.

அனுஷாவுக்கு கல்யாணமாகி

ஆறுமாசமிருக்குமா?” என்று கேட்டார் தர்மராஜ்.

” இருக்கும்ங்க” என்றார் சாமியப்பன்.

” அனுஷாவை கட்டினவருக்கு சின்ன வயதிலேயே ஹார்ட் அட்டாக்கா? ஆறே மாதத்தில் விதவையாகிவிட்டாளே அந்தப் பொண்ணு. ச்சே பாவம்!” என்று

அங்கலாய்த்தாள் பூங்கோதை.

” சரிங்க.விஸ்வத்துக்கு ஏத்த மாதிரி இப்போதைக்கு எந்த ஒரு பொண்ணோட ஜாதகமும் கைவசம் என்கிட்ட இல்ல. நான் புறப்படறேனுங்க” என்று கும்பிட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார் சாமியப்பன்.

விதவையாகிப் போன அனுஷாவை நினைத்து மிகவும் மனம் வருந்தினான் விஸ்வம்.

ஏழு மாதங்களுக்கு முன் ……..

தரகர் சாமியப்பன் அனுஷாவின் போட்டோவைக் காட்டினார். அனுஷாவை தர்மராஜ், பூங்கோதை, விஸ்வம் மூவருக்கும் பிடித்துப்போனது.

அனுஷாவின் ஜாதகம் மாற்றுத் திறனாளியான விஸ்வத்தின் ஜாதகத்தோடு ரொம்பவும் ஒத்துப்போயிருந்தது. அனுஷாவின் வீட்டில் கேட்டுச் சொல்லும்படி வேண்டுகோள் விடுத்தார் தர்மராஜ்.

சாமியப்பனும் விஸ்வத்தின்

ஜாதகம், போட்டோவை அனுஷாவின் வீட்டில் காண்பித்து ஓ.கே. வாங்கியிருந்தார்.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விஸ்வத்துக்கும் அனுஷாவுக்கும் பரஸ்பரம் பிடித்து போயிற்று.

இரண்டு வாரத்திற்குப்பின் தர்மராஜூம் பூங்கோதையும் அனுஷாவின் வீட்டுக்கு போய் முகூர்த்த தேதியை குறித்து பேச ஆரம்பித்தனர்.

அப்போது அனுஷாவின் அப்பா நல்லபெருமாள்,

” நீங்க ரெண்டு பேரும் எங்களை மன்னிக்கனும்….” என்று ஆரம்பித்தார்.

அவர் சொன்னது இது தான்:

அனுஷாவிற்கு முதலில் விஸ்வத்தை பிடித்திருந்தது உண்மைதான்.’ பிடித்துவிட்டது’ என்று சொன்ன மூன்று நாட்களுக்கு பிறகு தமது தூரத்து சொந்தத்திலிருந்து ஒரு வரன் வரவே, அது விஸ்வத்தை விட சிறப்பான வரனாக இருக்கவே..

‘ ஊனமான விஸ்வம் வேண்டாம்’ என்று கூறி விட்டாளாம் அனுஷா. ‘ தான் இனி அனுஷாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க இயலாது’ என்று கைகளை விரித்து விட்டார் நல்லபெருமாள்.

இதைக் கேட்ட விஸ்வம் குடும்பத்தினர் விதியை நொந்து கொண்டு வேறு பெண்ணை தேட ஆரம்பித்தனர்.

இப்போது அந்த அனுஷாவிற்கு திருமணம் நடந்து ஆறே மாதத்தில் விதவையான செய்தி மூவரையும் பரிதாபப்பட வைத்தது.

விஸ்வத்திற்கு மனது கேட்கவில்லை. உடனே அனுஷாவின் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு வந்தான்.

இதை அறிந்த தரமராஜூம் பூங்கோதையும் விஸ்வத்திற்கு

இது தேவையில்லாத வேலை என்று தங்களுக்குள் புலம்பினர்.

மாதங்கள் பல கடந்து போனது.

இன்னும் விஸ்வத்திற்கு

‘ பெண்’ அமையவில்லை.

தரகர் சாமியப்பன் அனுஷாவின் வீட்டில் அமர்ந்திருந்தார். நல்ல பெருமாள் தான் அவரை வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்திருந்தார்.

” என்ன விஷயமாய் என்னை

அழைச்சிருக்கீங்க?” கேட்டார் சாமியப்பன்.

” சாமியப்பன், உங்ககிட்ட ஒரு உதவி கேட்க விரும்புகிறாள்

எங்க பொண்ணு அனுஷா.

வாம்மா, வந்து கேளும்மா” என்று சொன்னார் நல்ல பெருமாள்.

சாமியப்பனுக்கு அருகில் வந்து நின்ற அனுஷா, சற்று தயக்கத்தோடு இப்படி கேட்டாள்.

” அங்கிள், அம்மாவும் அப்பாவும் எனக்கு மறுமணம்

செய்து வைக்க விரும்பறாங்க. நாங்க முன்ன

வேண்டாமனு நிராகரிச்ச அந்த விஸ்வம் சாரையே நான் கல்யாணம் பண்ணிக்கலாம்கிற முடிவுல இருக்கேன். அவர் என்னை மன்னிச்சு ஏத்துக்குவாரா?”

அனுஷாவின் ஆசை ஆச்சரியப்பட வைத்தது சாமியப்பனை.

” நிச்சயம்மா. நான் உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா சேர்த்து வைக்கிறேன்மா”

சாமியப்பனுக்கு தெரியும், விஸ்வத்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்று

அனுஷா ஆசையாய் இருந்த போது புது வரன் ஒன்று வரவே விஸ்வத்தை நிராகரித்தது நல்லபெருமாள் தான்; அனுஷா இல்லை என்பது.

இந்த மறைக்கப்பட்ட உண்மையை விஸ்வம் குடும்பத்தினரிடம் சொன்னால் நிச்சயம் அனுஷாவை ஏற்றுக்கொள்வார்கள் என்றும்

விஷயத்தை சொல்லிவிடுவது என்றும் உறுதியுடன் புறப்பட்டார்

சாமியப்பன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *