சிறுகதை

அந்த ஒரு பாடல் | ராஜா செல்லமுத்து

காற்றின் அலைவரிசையில் என் காதுகளைத்தேடி வந்து கொண்டிருந்தது. ஓர் உணர்வுப்பூர்வமான பாடல் எங்கெங்கோ அலைந்து கொ்ணடிருந்து என் மனது அந்தப்பாடலுக்கு நங்கூரம் அடித்தது போல நச்சென நிலை குத்தி நின்றது.

ஊருசனம் தூங்கிருச்சு

ஊதக்காத்தும் அடிச்சிருச்சு என்ற எஸ்.ஜானகியின் குரலில் இளையராஜாவின் இசையில் அந்தப்பாடல் என் செவிகளில் பட்டதும் சிவ்வென்று ஏறியது என் உடம்பு.

ஏன்? இந்த ஒரு பாடலுக்கு மட்டும் அப்படியொரு மநதிர சக்தி விழிகளில் நீர் திரள பாடலையும் என் மனதையும் ரீவைண்டு செய்கிறேன்.

அது பால்ய காலப்பருவம்…

இது தான் வாழ்க்கையென்று தெரியாத வயது. எதையும் பட்டென்று நம்பும் மனது. எதையும் பட்டென விட்டுவிடும் அசால்ட் . அப்படியொரு பருவத்தில் இருந்த போது எங்கள் நண்பர் பட்டாளத்தில் ஒட்டிக்கொண்டது தான் இந்த ‘ஊரு சனம் தூங்கிருச்சு’ பாடல் தேன் தடவித் தென்றல் வீசும் தேவாரம் என்ற கிராமத்தின் தெருவில் திருமாலம்மாள் காலனியில் ஒரு முறை இரண்டுமுறையல்ல ஒரு நாளைக்கு ஓராயிரம் முறை ஒலித்துக்கொண்டிருக்கும் ஊருசனம் தூங்கிருச்சு பாடல் நிறையக்குடும்பங்கள் குடியிருக்கும் பகுதி அது

‘‘ஏலேய்.. எடுபட்ட பயலுகளா? இந்த ஒத்தப்பாட்டையே பொழுதனைக்கும் திருப்பித் திருப்பிப் போட்டுக்கிட்டே இருக்கீங்களே.. இந்தப்பாட்டுல அப்பிடியென்ன இருக்குடா.. இன்னொரு தடவ இந்த பாட்டு கேட்டது அம்புட்டு தான். இவனுகளோட பெரிய ரப்சரா போச்சு என்று ஒரு பெரியவர் திட்டி வாய் மூடு வதற்குள் மறுபடியும்

ஊருசனம் தூங்கிருச்சு ஒலிக்கும்

‘‘ஏலேய் ஆஞ்சலீசு ..நீங்க அடங்கமாட்டீங்களா? அங்க செந்தில் இருக்கானா? அதாண்டா நீங்கெல்லாம் நாட்டாமைன்னு சொல்லுவீங்களே. அவன் இருக்கானா? சிவக்குமார் பாண்டியநேரு முத்து இவனுகளெல்லாம் அங்கதானே இருக்கானுக. இவனுக அம்புட்டு பேரும் இருந்தா தான் இந்த பாட்டு இத்தன தடவ கேக்கும். நான் சொல்றது சரிதானடா ஆஞ்சலீசு..என்று அந்தப்பெரியவர் சத்தம் போட

ஆமா தாத்தா நீங்க சொல்ற அம்புட்டு ஆளுகளும் இங்க தான் இருக்கோம் என்று ஆஞ்சலீசு சொன்னான்.

ம் க்கும் நான் நெனச்சது சரியா இருக்குடா. அம்புட்டு பேத்துக்கும் எப்பிடிடா இந்த ஒத்தபாட்டு பிடிக்குது.. அதுவும் இந்த ஒத்த பாட்டையே திரும்பத் திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க சலிக்கலையாடா.. என்று பெரியவர் கேட்டார்.

இல்ல தாத்தா.. என்று பாண்டியநேரு பதில் சொன்னான்.

இது யாரு பாண்டியப் பயலா? என்று பெரிவயர் பறுபடியும் கேள்வி கேட்டார்.

ஆமா தாத்தா. நானே தான் என்று பாண்டிய நேரு பதில் சொன்னான்

ம்ம் ஏய்யா பாண்டிய நேரு நீயாவது சொல்லுயா? ஏன் இந்த ஒத்த பாட்டையே திரும்பத் திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க? என்று பெரியவர் கேள்விக் கணைகளைத் தொடுக்க

தெரியலையே தாத்தா என்று பாண்டியநேரு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே

ஊரு சனம் பாடல் இதோடு இருபது தடவைக்கு மேல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ம்க்கும் ஏன் தாத்தா இந்த பாட்ட பத்தி தான் இவனுகிட்ட கேட்டுட்டு இருக்கீங்களா?என்று திருமாலம்மாள் காலனியில் இருந்த இன்னொருவர் கேட்டார்.

ஆமா தம்பி இவனுகளுக்கு போரடிக்குதோ? இல்லையோ? என் காதுல ஈயத்த காச்சி ஊத்துனது மாதிரி இருக்கு ஒரு தடவை ரெண்டு தடவ இல்ல பொழுதன்னைக்கும் இதே பாட்ட எப்பிடித்தான் கேட்டுட்டு இருக்கானுகளோ? இவனுக வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்கிறது குத்தமா தம்பி. எத்தன தடவ அதே பாட்ட திரும்பத் திரும்ப நானும் கேக்குறது. யப்பா தாங்க முடியல அட அதவிடுப்பா.. எதுக்குடா இந்த பாட்ட இத்தன தடவ கேக்குறீங்க.. இந்த பாட்டுல ஏதாவது விசேசம் இருக்கான்னு கேட்டா. அதையும் சொல்லித் தொலைய மாட்டேன்கிறானு.. அவனுக கேப்பானுக. நமக்கு என்ன தலையெழுத்தா.. இத்தன தடவ கேக்கணும்னு இன்னைக்கு ரெண்டுல் ஒண்ணு பாக்கணும். ஒண்ணு இவனுகளா? இல்ல நம்மளான்னு என்று அந்த பெரியவர் பேசினார்.

ஒனக்கு என்ன பிரச்சனை தாத்தா? என்றான் சிவா.

ஆமாடா.. பிரச்சினை தான் . நீங்க மனுசனா? இல்ல வேற ஜென்மமா? எத்தனை தடவ தான் இந்த பாட்ட கேப்பீங்க. அதுவும் சத்தமா..

எங்களுக்கு பிடிச்சுருக்கு தாத்தா. அதான் இந்த பாட்டக் கேக்குறோம் என்று முத்து சொல்ல

ம்ம் ஒங்களுக்கு புடிச்சிருந்தா அது உங்க வீட்டுக்குள்ள. உங்க காதுக்குள்ள தானே கேக்கணும். அது எங்க வீட்டுக்கு ஏன் வருது? என்று பெரிவர் சொன்னார்.

அது காத்துல பறந்து வருது தாத்தா என்று ஆஞ்சலீசு சொல்ல

ம்ம் எகத்தாளம்; என்னயை பாத்தா.. ஒங்களுக்கு எப்பிடித் தெரியுது.. ம்ம் இன்னைக்கு நீங்க இந்தப்பாட்ட மாத்தல அவ்வளு தாண்டா என்று ரொம்பவே கோபப்பட்டு நாக்கைத் துருத்தினார் பெரியவர்.

என்ன தாத்தா கோபப்படுற.. நாக்கத்துருத்துற? என்று ஆஞ்சலீசு எகிற

டேய்… நான் விடமாட்டேன்டா. இன்னைக்கு நான் ஒங்கள போலீஸ்ல கம்ப்ளைண்ட குடுத்து உள்ள தூக்கிப்போடல என்பேர மாத்திக்கிறேன்டா என்று கிழவன் முறுக்கிக்கொண்டு பேசும் போது பின்னணியில்

‘‘ஒத்தையிலே அத்த மக

ஒன்ன நெனச்சி ரசிச்ச மக

கண்ணு ரெண்டும் மூடலையே

காலம் நேரம் கூடலையே..’’

என்று பாடல் கேட்டுக்கொண்டிருந்தது.

அப்போது பாட்டின் சத்தத்தை மேலும் கூட்டினான் செந்தில்

இருங்கடா.. என்னைய கிண்டலா.. பண்ணுறீங்க.. என்று பெரியவர் காலனியை விட்டு வெளியே வந்தார்.நாங்கள் அத்தனை பேரும் விலா எலும்பு நோகச் சிரித்துக் கொண்டோம்.

நினைவுகள் நினைவில் வந்து நிற்க . இப்போது நான் கேட்ட ஊருசனம் பாடல் முடிந்து போயிருந்தது.

அந்தப் பாடல் எதற்கு எங்களுக்குப் பிடித்திருந்தது ஏன்? எதற்கு நாங்கள் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்ப கேட்டோம் என்பது எங்களுக்கு இன்றும் புரியாத புதிர். இன்றும் அந்தப்பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் எல்லாம் ஆளுக்கொரு திசையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் எங்கேயாவது இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *