போஸ்டர் செய்தி

அண்ணாநகர் பகுதியில் ஒரேநாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 90 ஆயிரம் வாகன ஓட்டிகள்

Spread the love

சென்னை, ஜூன்.12–

அண்ணாநகர் பகுதியில் ஒரே நாளில் 90 ஆயிரம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிநவீன கேமிரா மூலம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்ணா நகர் பகுதியில் சமீபத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளீர்களா அல்லது தவறான இடத்தில் யூ டார்ன் அடித்திருக்கிறீர்களா? ஆனாலும் பிடிபடவில்லை என்று மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டாம். உங்கள் வாகனத்தின் பதிவு எண் மற்றும் விதிமுறையை மீறியதற்கான புகைப்பட ஆதாரத்துடன் உங்கள் வீடு தேடி போக்குவரத்து போலீசாரின் அபராதம் விதிக்கும் செல்லான் வந்துசேர வாய்ப்புள்ளது.

அண்ணா நகர் பகுதியில் உள்ள 5 சந்திப்புகளில் கடந்த திங்கள்கிழமை மட்டும் 90 ஆயிரம் பேர் போக்குவரத்து விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர் ரவுண்டானா, சாந்தி காலனி, எஸ்டேட் சாலை, 18 வது பிரதான சாலை, அண்ணாநகர் காவல் நிலைய ஜங்கசன் ஆகிய இடங்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் உதவியுடன் பொறுத்தப்பட்டுள்ள 64 சக்திவாய்ந்த கேமிராக்கள் மூலம் இந்த விதிமுறை மீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கேமிராக்களில் தானியங்கி நம்பர் பிளேட் ரெககனேசன் சாப்ட்வேர், சில கேமிராக்களில் சிகப்பு விளக்கு எரியும்போது செல்பவர்களையும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களையும் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் பொறுத்தப்பட்டுள்ளது. விதிமுறை மீறல்களை அண்ணாநகர் ரவுண்டானா அருகே உள்ள கட்டுபாட்டு அறையில் இருந்து போக்குவரத்து போலீசார் கண்காணிப்பார்கள்.

நிறுத்த கோட்டை தாண்டுபவர்கள், ஹெல்மெட் போடாமல் பயணிப்பவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், சிக்னல்களை மீறி வாகனங்களை ஓட்டுதல், நோ என்ட்ரீயில் பயணிப்பவர்கள், ராங் சைடில் ஓட்டுபவர்கள் போன்ற விதிமுறைகளை மீறுபவர்களை கேமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி கூறும்போது, இதுபோன்ற அமைப்பை விரைவில் நகரம் முழுவதும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களை குறைப்பதும், வாகனத்தில் செல்பவர்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பதை நினைவுபடுத்துவதும் இதன் நோக்கமாகும். தேசிய தகவல் மைய சாப்ட்வேருடன் இணைக்கப்பட்டு விதிமுறை மீறியவர்களின் முழு விபரங்கள் சேகரிக்கப்படும். அவர்களின் இல்லத்துக்கு அபராதம் விதிக்கும் செல்லான்கள் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, வீடுகளில் செல்லானை பெற்றுக்கொண்டவர்கள் 24 மணி நேரத்தில் அபராதத்தை செலுத்த வேண்டும். சில வழக்குகளில் குற்றம் இழைத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகவும், தேவைப்படும் பட்சத்தில் வாகனம் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கவும் வேண்டியதிருக்கும். இ–செல்லான் மூலம் அபராதம் செலுத்த வேண்டும். குற்றம் இழைத்தவர்களின் முழு பட்டியல் தயார் செய்யப்பட்டு செல்லான்கள் அனுப்பப்படும். யாரும் அபராதம் கட்டாமல் தப்பித்து விடமுடியாது. அபராதம் செலுத்தாமல் செல்லானை புறக்கணிப்பவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றார்.

செகண்ட் ஹேண்ட் வாகனங்களை பொறுத்தவரை, அதன் உரிமையாளர் ஆவணங்களை மாற்றி கொடுக்காமல் இருந்தால் அவர்கள் அதற்கான விளைவை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *