வாழ்வியல்

அண்டார்டிகா பனிப்பகுதியில் தேங்கியுள்ள எரிமலை குழம்பு!

அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் பல அதிசயங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி வேகத்தில் பூமியின் புவியியல் அற்புதங்கள் இப்போதுதான் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் கொதிக்கும் எரிமலைக் குழம்பான லாவா, வழிந்துவிடாமல் ஏரிபோல தேங்கியிருக்கும் ஒரு படத்தை, செயற்கைக்கோள் எடுத்திருக்கிறது. தென் அமெரிக்காவுக்கு கீழே, தொலைதூரத்தில் பனி உறைந்த மலையின் உச்சியில் இந்த லாவா ஏரி இருக்கிறது.

உலகம் முழுவதும் நிலப்பகுதியிலும் கடலுக்கு அடியிலுமாக, ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. பனி உறைந்த பகுதிகளிலும் இதற்கு முன் ஏழு லாவா ஏரிகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிர் ஒன்று இருக்கிறது.

மற்ற எரிமலைகளில் குமுறும் லாவா வெளியேறி வழிந்து, பாறைகளாக இறுகிக் கிடக்கின்றன. ஆனால், அண்டார்டிகாவில் உள்ள எரிமலைகளில் இருந்து லாவா வெளியேறாமல், ஏரிபோல் தேங்கி பொங்கிக் கொண்டிருப்பது ஏன் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இவற்றை நெருங்கவும் வாய்ப்பில்லை என்கிறார்கள்.

2003 ஆம் ஆண்டு முதன்முதலாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லாவா ஏரியின் குறுக்களவு 300 அடியிலிருந்து 700 அடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கொதிக்கும் லாவாவின் வெப்பம் 1812 டிகிரி பாரன்ஹீட்டிலிருந்து 2 ஆயிரத்து 334 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *