சிறுகதை

அடையாள அட்டை | கே. அசோகன்

”அலைபேசி கிணுகிணுக்க…அதை எடுத்தான் நாராயணன்.

அடுத்த நிமிடம் ஆச்சர்யத்தோடு அதிர்ச்சியானான்.

மறுமுனையில் ராமு: ”என்னடா நாராயணா எப்படி இருக்கே? விசாரித்தான்.

நான் நல்லா இருக்கேன்டா என்று சுருக்கமாக முடிக்கப் போக.. டேய் இருடா ஒன்னயை நான் பார்க்கணுமே!” என்றான் நாராயணன்.

”ஒரு நிமிஷம்டா … செகரட்டரியக் கேட்டு சொல்றேன்டா!”

”டேய் நான் உன்னைத்தான் பார்க்க வரேன். ஒன் செகரட்டரிய இல்லேடா!

”அதில்லேடா இதெல்லாம் எங்க கம்பெனியோட பார்மாலிட்டிடா” என்றான்.

”என்ன பார்மாலிட்டியோ அலுத்து கொண்டான். ஒரு வாரம் கழித்து ராமுவைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்பட்டது.

பிரம்மாண்டமான கண்ணாடி பொருத்தப்பட்ட கட்டிடத்திற்குள் நுழைந்தான் நாராயணன். செக்ரியூரிட்டி வாசலிலேயே தடுத்தனர்.

விவரம் சொன்னான். இன்டர்காமில் தகவல் போனது. சற்று நேரத்திற்கு பின்பு உள்ளே நுழைந்தான்.

ரிஷப்சனில் .. ”ஸார் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா? ஒங்க விசிட்டிங் கார்டு இருக்கா கொடுங்க என்று கேட்டார்கள்.

விசிட்டிங் கார்டெல்லாம் இல்லே ராமுவிடம் தகவல் சொல்லுங்க… நான் நாராயணன் வந்திருக்கேன் என்றான். இன்டர்காமில் மீண்டும் தகவல்.. அனுமதிக்கு பின் அறைக்குள் நுழைந்தான்.

ஏ.சி அறையில் நாலைந்து தொலைபேசிகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவாறே “எஸ் கம்-இன் ”என்றான்.

”என்னடா ராமு எப்படி இருக்கே எங்கே ஒன் விசிட்டிங் கார்டு” என்று கேட்டான்.

விசிட்ட்டிங் கார்டா ? அதெல்லாம் இல்லேடா என்றான்.

”என்னடா விசிட்டிங் கார்டு இல்லையா? அதெல்லாம் ஒரு ஸ்டேட்டஸ்டா என்று அரைமணி நேரம் லெக்சர் கொடுத்தான். பின்பு இன்டர்காமில் டீ ஆர்டர் கொடுத்தான்.

”ஏலக்காய் மணக்க மணக்க டீ வந்தது. டீக் குடிக்க தயாரான போது ” இது மாதிரி டீ யெல்லாம் குடிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். எங்க கம்பெனி ஸ்பெஷல் பேவரைட் டீ டா” என்றான்.

நட்புக்கு மரியாதை கொடுத்து டீ குடித்த போதும் அந்த டீ ஏலக்காய் வாசம் போய் கசக்கத்தான் செய்தது. அவன் சொன்ன வார்த்தை. பொறுத்துக் கொண்டான்.

”அம்மா அப்பா எப்படி இருக்காங்க? நீ அதே ஓட்டு வீட்டுலதானே இருக்கே” அடுத்த அம்பை விட்டான்.

”இல்லேடா அந்த வீட்டை வித்துட்டு சிட்டிக்கு வந்துட்டோம் என்றான்.

என்னடா வேலை செய்யறே.

”ஏதோ ஒரு வேலை ”என்ற பதில் அலுப்பாக வெளிப்படுத்தினான்.

அதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை ராமு.

பேசிக் கொண்டிருந்ததில் மதியம் வந்து விட்டது. சரிடா நான் கிளம்பறேன் என்றான் நாராயணன்.

”என்னடா இவ்வளவு பெரிய கம்பெனிக்கு வந்துட்டு சாப்பிடாம போறதா? நோ. நோ சாப்பிட்டு விட்டுத்தான் போகணும்” வற்புறுத்தினான்.

”ஒரு டீயிலேயே அவனின் உபசரிப்பு எப்படி இருந்தது என்பதை உணர்ந்தும் நட்புக்காக பொறுத்துக் கொண்டான்.

ராமுவின் கேபின்லேயே விதவிதமான சாப்பாடு வந்தது. பரிமாறினர்.

சாப்பிட ஆரம்பிக்கும் போதே ! ”நல்லா சாப்பிடு நாராயண். இதே மாதிரி சாப்பாடு வாழ்க்கையில சாப்பிட்டு இருக்க மாட்டே! என்றான்.

”அறுசுவை உணவென்றாலும் ஒரு கவளம் கூட தொண்டைக் குழிக்குள் சுலபமாய் இறங்காமல் தடுத்தது அந்த வார்த்தைகள். இருந்தாலும் நட்புக்காக பொறுத்துக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்தவுடன் ”என்னடா ஒன் வாழ்க்கை ? என் வாழ்க்கைய பாரு எவ்வளவு பெரிய ஆபிஸ், கார் பங்களா இதற்கெல்லாம் கொடுத்து வைக்கணும்டா. ஒனக்குத்தான் அதிர்ஷ்டமில்லை. என்று எகத்தாளம் பேசினான். இருந்தாலும் நட்புக்காக பொறுத்து கொண்டான்.

இனியும் இருந்தால் கேவலம் என்று மனதில் நினைத்தவாறே என்று சரிடா நான் புறப்படறேன் என்றான் நாராயணன்.

… இரு இரு. என்று இன்டர்காமில் செக்ரியூட்டியை வரவழைத்து ”இவரை கேட்டுக்கு வெளியே விட்டுட்டு வா” என்று வழியனுப்பி வைத்தான். நட்புக்காக பொறுத்து கொண்டான்.

அன்றிரவு தூக்கம் வராமல் தவித்தான் நாராயணன்.

ராமுவின் ஒவ்வொரு வார்த்தையும் விஷஅம்புகளாய் அவன் நெஞ்சிற்குள் புகுந்து அவனை சின்னா பின்னமாக்கிகங கொண்டிருந்தது.

”நாம் செய்யும் தொழிலை விட அவன் தொழில் சிறந்ததா? விசிட்டிங் கார்டு இருந்தால்தான் மதிப்பா? கார் பங்களா இருந்தால்தான் சிறப்பா? என்று கேள்விகளாக கேட்டுக் கொண்டே இருந்த போதே சற்றே கண்ணயர்ந்தான்.

அப்போது தொலைக் காட்சியில் ”நாட்டின் உயர்ந்த தலைவர் நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பு என்று ”நம் நாட்டில் ஓரு தீய நுண்கிருமி ஒன்று புகுந்து மக்களை வாட்டுகிறது. இதனைப் போக்க சமுக இடைவெளியைக் கடைப்பிடிக்க ”வீட்டில் இருப்போம் தனித்திருப்போம்” ஊரடங்கு அமுலில் வருகிறது. அத்தியாவசிய காய்கறிகள் மட்டும் வாங்கலாம் என்று அறிவித்தார்.

மறுநாள் காய்கறி வாங்க ஒரு மஞ்சள் பையை எடுத்து கொண்டு வெளியே போனார் நாராயணன்.

போலீசார் ஒவ்வொருவரையும் பிடித்து விசாரித்தனர். காரணமின்றி சுற்றித் திரிவோர்க்கு அபராதம் விதித்தனர்.

நாராயணனையும் விசாரித்து பின்பு அனுப்பினர். காய்கறி வாங்கிக் கொண்டு திரும்பும் போது ஒரு ஆடம்பர கார் போலீசால் நிறுத்தப்பட்டது.

காரிலிருந்து இறங்கியவரை போலீஸ்காரர் விசாரித்தார்.

”காரிலிருந்து இறங்கிய நபர் தாம் மிகப் பெரிய கம்பெனியின் ஆபீசர் என்றார். ஆனால் போலீஸ் நம்பவில்லை.

”இதோ விசிட்டிங் கார்டு” என்று கொடுத்தார்.

”விசிட்டிங் கார்டை வாங்கி.. இதெல்லாம் யாருக்கு வேணும். அரசாங்க அடையாள அனுமதி அட்டை இருக்கா? அனுமதி இல்லாமல் தேவையில்லாமல் ஆடம்பரமா ஊர்சுற்றக் கூடாது” இதற்கு தண்டனையா போடு தோப்புக்கரணம் என்றார்.

வேறு வழியில்லாமல் தோப்புக்கரணம் ”ஒன்று… இரண்டு..” போட்டு கொண்ட்டிருந்தான்.

.. ”டேய் என்னடா இது? குரல் வந்த திசையைப் பார்த்தான். ராமு.

நாராயணன் நின்றிருந்தான்.

”ஸார்! இவர் நம்ம நண்பர்தான் பெரிய கம்பெனில ஆபீசர்”என்றான்.

”ஸார்! நீங்களா? நீங்க அந்த ஸ்கூல் டீச்சராத்தானே வேலை செய்யிறீங்க எலக்சன் டுட்டியில இருந்த போது பார்த்திருக்கேன். ஒங்களுக்காக இவர் ரெண்டு தோப்புக்கரணத்தோட தப்பிச்சாரு. இல்லேன்னா முட்டியை உடைச்சிருப்பேன்” என்று ராமுவை எச்சரித்து அனுப்பினார்.

அடையாள அட்டையின் மதிப்பை விட ஆசிரியர் வேலை உயர்வானது என ராமு புரிந்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *