சென்னை, டிச. 30
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறு வனமான கலைப்புலி இண்டர்நேஷனல், வி கிரியேஷன்ஸ் அதிபர் கலைப்புலி எஸ்.தாணு அகில இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக பொறுப்பேற்று பதவிக்கு பெருமை சேர்த்தவர். இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் திரைப்பயணத்தின் 50வது ஆண்டில் இந்தத் தேர்வு அவரது திரைத்துறை சேவைக்கான உயரிய அங்கீகாரம் என்றால் மிகையில்லை.
நடிகர்களின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கும் தமிழ்சினிமாவில் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் கதாநாயகர்கள் காத்திருக்கின்றனர் என்றார் தயாரிப்பாளர் காட்ரகட் பிரசாத். தமிழ் திரையுலகம் சார்பாக பழம்பெரும் தயாரிப்பாளர்கள்.எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக ஜனவரி 1ந் தேதி அன்று கலைப்புலி தாணு பதவியேற்க உள்ளார். இவருடன் தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாக சி. கல்யாண், சி.பி.விஜயகுமார், என்.எம். சுரேஷ், ஆனந்தா எல்.சுரேஷ், டி.பி.அகர்வால், செயலாளர்களாக ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர். ஜனவரி 1ந் தேதி முதல் ஒரு வருடத்திற்கு தலைவர் பொறுப்பில் இருப்பார் கலைப்புலி தாணு.