ஈகை பெருநாளில் ஏழைகளின் வாழ்வு உயர உதவும் கரங்களாவோம்

மனிதன் தன் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களையே அதிகம் எதிர்பார்க்கின்றான்.
அப்படி மகிழ்ச்சியான தருணங்கள் அமையப் பெற்றால் சிலபேர் தன் நிலையை மறந்துவிடுகிறார்கள். இன்னும் சிலபேர் அவன் தன்னோடு வாழும், சமூக மக்களின் நிலையை மறந்துவிடுகிறான். இன்னும் சிலபேர் படைத்த இறைவனையே மறந்துவிடுகின்றான்.

ஆதலால் தான் அல்லாஹ் மகிழ்ச்சி நிறைந்த இந்நன்னாளில் ஈகையை வெளிப்படுத்தும் விதமாக ஸதக்கத்துல் பித்ர் தர்மத்தையும், இனிய பெருநாள் தொழுகையையும் அழகிய வழிமுறையாக ஆக்கித்தந்து தன் நிலையை, தன்னோடு வாழும், சமூக மக்களின் நிலையை, தன்னை படைத்த ரப்பை, மறந்து வாழும் நிலைகளில் இருந்து காத்து அருள்புரிந்திருக்கின்றான்.

ஆகவே, குடும்பம், சுற்றம், நட்பு சகிதமாக சந்தோசத்தில் திளைத்திருக்கும் இந்த ஈகைத் திருநாளில் ஸதக்கத்துல் பித்ர் எனும் ஈகையை வழங்கிவிட்டு, இறைவனை தொழுதுவிட்டு அமர்ந்திருக்கிற உங்களின் கவனத்திற்கு ஈகைத் திருநாள் சிந்தனையாக இஸ்லாம் வலியுறுத்துகிற முக்கியமான 3 அம்சங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

1.   சுயமரியாதையோடும், கன்னியத்தோடும் பிறருக்கு ஈந்துவாழும் கொடைத் தன்மையோடும் வாழ்கிற நல்ல சந்ததியை உருவாக்க வேண்டும்.
சிறந்த ஸாழிஹான பெற்றோருக்கான தகுதிகளில் ஒன்றாக இஸ்லாம் சொல்கின்ற முக்கியமான அம்சங்களில் ஒன்று சந்ததிகளுக்கு, வாரிசுகளுக்கு, நிறைவான அல்லது வாழ்க்கைக்கு போதுமான அளவிற்கு சொத்து, செல்வங்களை சேர்த்து வைக்க வேண்டும்.

உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டும் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாகவிட்டு செல்வதே சிறந்ததாகும் என்ற நபிகளாரின் வார்த்தைகள் இங்கு கவனிக்க தக்கதாகும். (நூல்: புகாரி)

2. அல்லாஹ் தந்த செல்வங்களை கொண்டு மனநிறைவோடு வாழ பழகி கொள்ள வேண்டும். எந்த தருணத்திலும் எவரிடமும் கையேந்தாமல் வாழ பழகி கொள்ள வேண்டும்.

உலகில் சிலரை அல்லாஹ் சொத்து செல்வத்தோடு வீடு வாசலோடும், பொருளாதாரத்தோடும் வளமாக வாழ வைத்துள்ளான். இன்னும் சிலரை அல்லாஹ் கஷ்டத்தோடும், சிரமத்தோடும், ஏழ்மையோடும் வைத்துள்ளான்.

அல்லாஹ் உங்களில் சிலரை விட செல்வத்தில் மேன்மை படுத்தி இருக்கின்றான். (அல்குர்ஆன் 16:71)

கொடுக்கும் மேல்கை வாங்கும் கீழ் கையை விடச் சிறந்ததாகும் என்று நபியவர்கள் கூறினார்கள். நாமும் நமது சந்ததிகளை வாங்குபவர்களாக இல்லாமல் பிறருக்கு கொடுப்பவர்களாக உயர்த்துவோம்.

3.   அல்லாஹ்வால் வசதி வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள். வசதியால் குறைவாக உள்ள ஏழைகளின் வாழ்வு உயர உதவும் கரங்களாய் திகழ வேண்டும்.

அல்லாஹ்வால் வசதி வாய்ப்பு வழங்கப் பெற்றவர்கள் தங்களின் பொறுப்பின் கீழ் இருக்கின்றவர்களுக்கும் வழங்கி அவர்களும் இவர்களின் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்களாக ஆக்கிட முன்வருவதில்லை. (அல்குர்ஆன் 16:71)

இப்படி வழங்காமல் வாழ்ந்த பலர் தங்களின் மரண நேரத்தில் தான் அதை தவறென விளங்கி கொள்வார்கள்.ஏனெனில், மௌத்தின் போதுதான் தான தர்மங்கள் செய்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கமும், ஆசையும் பிறக்கும். என்ன செய்வது? அப்போது அந்த ஆசைக்கும், ஏக்கத்திற்கும் அல்லாஹ்விடம் மதிப்பேதும் அப்போது இருப்பதில்லை.
அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி) அவர்கள் மரண நேரத்தில் செய்த வளிய்யத்தில் என் செல்வத்தில் 50000 தீனாரை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்துவிடுங்கள். பத்ரில் கலந்து கொண்டவர்களில் இப்போது எவரெல்லாம் உயிருடன் இருக்கின்றார்களோ அவர்களில் ஒவ்வொருவருக்கும் 400 தீனார் வீதம் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி இருந்தார்களாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் தமது பொருளாதாரத்தில் சரிபாதியை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தார்கள்.

ஆகவே, கையேந்தாத நல்ல தலைமுறையை உருவாக்கிட இஸ்லாம் கூறுகிற நல்ல ஸாலிஹான பெற்றோராக நாம் அமைய பெறுவோம்.யா அல்லாஹ்! எங்களுக்கு நீ வழங்கிய உன்னுடைய நிறைவான பரக்கத்தை கொண்டு ஏழைகளுக்கும், வளிளோர்களுக்கும் வாரி வழங்குகின்ற வள்ளல்களாக எங்களை நீ ஆக்கியருள் புரிவாயாக ஆமீன்! ஆமீன்!! யாரப்பில் ஆலமீன்!

அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இன்னாள்போல் என்னாலும் இனிய நன்னாலாய் அமைய வாழ்த்துகிறேன்


  • மௌலவி ஹாபிழ் – எம்.எச்.முஹம்மது ஆரிப் (சிராஜி)
    இமாம், மஸ்ஜிதுல் நூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல், திருமறை நகர், போத்தனூர், கோவை –23.