மீனாட்சி –சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

3027மதுரை, ஏப்.30–
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 10ம் நாள் முக்கிய திருவிழாவான மீனாட்சி -– சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 9.23 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கல்யாணம் முடிந்ததும் கோவில் பிரசாதமாக வழங்கப்பட்ட திருமாங்கல்ய சரடுகளை ஏராளமான பெண்கள் ஆடி வீதிகளில் உட்கார்ந்து கட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு திருக்கல்யாண விருந்து மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்டது.
ஆடி வீதியில் 50 ரூபாய், 100 ரூபாய் திருமண மொய் பணம் வசூலிக்கப்பட்டது. அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கினார்கள். மீனாட்சி -– சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்துக்கு மொய் எழுத பக்தர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வந்து வந்து குவந்தனர்.
திருக்கல்யாண விழாவில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் வீரசண்முகமணி, கோவில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்பட லட்சகணக்கான பக்தர்கள் தரையில் அமர்ந்து திருக்கல்யாணத்தை தரிசித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளிலும் மாசி வீதிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர். விழாவின் 10-ம் நாள் திருவிழாவையொட்டி மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணி முதல் ஏராளமான பக்தர்கள் கோவில் அருகே திரண்டனர். 500 ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள் மேற்கு கோபுர வாசலிலும் 200 ரூபாய் டிக்கெட் எடுத்துவர்கள் வடக்கு கோபுர வாசலிலும் அனுமதிக்கப்பட்டனர். தெற்கு கோபுரவாசல் வழியாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதிகளில் பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட மின் விசிறிகளும், 250 டன் குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டிருந்தன.
ரூபாய் 10 லட்சம் செலவில்
மலர் அலங்காரம்
வடக்கு, மேல ஆடி வீதி சந்திப்பில் அமைக்கப் பட்டிருந்த திருமண மேடை 10 லட்சம் ரூபாய் செலவில் முல்லை, மல்லிகை, செவ்வந்தி, வெட்டிவேர் மற்றும் வெளிநாட்டு வண்ண வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
திருக்கல்யாண மேடைக்கு காலை 8.20 மணிக்கு திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரர் – பிரியாவிடை சாமியும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள். இதையடுத்து அண்ணன் பவளக்கனிவாய் பெருமாள் திருமண மேடைக்கு எழுந்தருளினார்.
காலை 8.35 மணிக்கு 25க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத திருமண சடங்குகள் தொடங்கின. மீனாட்சி அம்மனின் பிரதிநிதியாக விவேக் என்ற அழகு சுந்தரம் என்ற பட்டரும் சுந்தரேஸ்வரர் பிரதிநிதியாக சந்தோஷ் என்ற பட்டரும் இருந்து திருமண சடங்குகளை செய்தனர். முதலில் விநாயகர் பூஜை நடை பெற்றது. அதையடுத்து புன்னியாஜன பூஜை, கும்ப பூஜை போன்ற பூஜைகள் நடைபெற்றது. இதை அடுத்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமிகளின் பிரதிநிதியாக இருந்த சிவாச்சாரியார்கள் காப்பு கட்டிக்கொண்டு, சுவாமிகளுக்கும் காப்பு கட்டினர். இதையடுத்து பட்டாடை உடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் சார்பில் மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டாடையும், சுந்தரேஸ்வரருக்கு வெண் பட்டும் அணிவிக்கப்பட்டது. பிரியா விடை சுவாமிக்கு பச்சை பட்டாடையும் அணிவிக்கப்பட்டது.
தங்கத்தட்டில் திருமாங்கல்யம்
இதை அடுத்து மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமிகளின் இரண்டு பிரதிநிதி சிவாச்சாரியார்களும் மாலை மாற்றிக் கொண்டனர். அதே போல மீனாட்சி அம்மன் கழுத்தில் கிடந்த மாலையை சுந்தரேஸ்வரருக்கும், சுந்தரேஸ்வரர் அணிந்திருந்த மாலையை மீனாட்சி அம்மனுக்கும் மாற்றி அணிவித்தனர். அந்த சமயத்தில் தங்கத் தட்டில் திருமங்கல்யம் வைக்கப்பட்டு அங்கு கூடியிருந்த பக்தர்களிடம் ஆசிர்வாதம் வாங்கப்பட்டது. இதற்கிடையே பெண்களின் நவதான்ய சடங்கும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அண்ணன் பவளக் கனிவாய் பெருமாள் வெள்ளி செம்பிலிருந்த தண்ணீரை ஊற்றி தங்கை மீனாட்சியை சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து சரியாக காலை 9.23 மணிக்கு மங்கள இசை முழுங்க மீனாட்சி அம்மன் கழுத்தில் மங்கள திருமாங்கல்யம் பூட்டப்பட்டது. அப்போது அங்கு அமர்ந்திருந்த லட்சகணக்கான பக்தர்கள் மலர்களை தூவி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பிரியாவிடைக்கும் திருமாங்கல்யம் பூட்டப்பட்டது.
அக்னி வலம், அம்மி மிதித்தல்
திருமண நிகழ்ச்சி முடிந்ததும், மீனாட்சி – – சுந்தரேஸ்வரருக்கு பிரதிநிதியாக இருந்த சிவாச்சாரியார்கள் இரண்டு பேரும், தங்க கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை ஒருவருக்கொருவர் கையில் பூசிக்கொண்டனர். இதை போல் சுவாமிகளுக்கும் பூசி விட்டனர். பின்னர் இரண்டு சிவாச்சாரியார்களும் கைகோர்த்து 3 முறை அக்னி வலம் வந்தனர். தங்கத்தால் செய்யப்பட்ட அம்மி மிதித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் மேடையில் நடை பெற்றது. பன்னீர் செம்பில் இருந்த பன்னீரை சாமிகளுக்கு தெளிக்கப்பட்டது. இறுதியில் மீனாட்சி – சுந்தரேஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது ஆடி வீதிகளில் இருந்த பக்தர்கள் கையெடுத்து கும்பிட்டு தரிசனம் செய்தனர்.
இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா, இந்து சமய அறநிலைய துறை கமிஷனர் வீரசண்முகமணி, நீதிபதிகள், மதுரை நகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், துணை கமிஷனர் சம்ந்த்ரோஹன் ராஜேந்திரா உள்ளிட்ட லட்சகணக்கான பக்தர்கள் தரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக சித்திரை வீதிகளில் 3 பெரிய எல்.இ.டி. டிவிக்களும், கோவிலின் உள்ளே வடக்கு மேற்கு ஆடிவீதிகளில் தலா 2 எல்.இ.டி. டிவிக்களும் வைக்கப்பட்டு நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டன.
மீனாட்சி – சுந்தரரேசுவரர் திருக்கல்யாணம் முடிந்ததும் கோவில் சார்பில் திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு அடங்கிய பிரசாத பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கோவில் சார்பில் 30 ஆயிரம் பிரசாத பொட்டலங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இது தவிர ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் பேரில் திருமாங்கல்ய கயிறு பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினார்கள். சிலர் பிரசாதமாக லட்டு, பூந்தி, சர்க்கரை பொங்கல், புளியோதரை ஆகியவற்றை வழங்கினார்கள்.
திருக்கல்யாணம்முடிந்ததும் ஏராளமான பெண்கள் ஆடி வீதிகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து புதிய திருமாங்கல்ய கயிறுகளை கட்டிக் கொண்டு மகிழ்ந்தனர். திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கும் ஏராளாமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேல ஆடி வீதி, தெற்கு ஆடி வீதிகளில் கோவில் சார்பில் திருமண மொய் எழுதப்பட்டு ரசீதுகள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் 50 ரூபாய், 100 ரூபாய் என எழுதினார்கள். அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
50 ஆயிரம் பேருக்கு
திருக்கல்யாண விருந்து
மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு திருக்கல்யாண விருந்து காலை முதல் மாலை வரை வழங்கப்பட்டது. கற்கண்டு சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், சாம்பார் சாதம், வடை, பூந்தி, கூட்டு பொறியல் ஆகியவை வழங்கப்பட்டது. சாப்பாடு முடிந்ததும் வெற்றிலை பாக்கும் வழங்கப்பட்டது. பழைய திருக்கல்யாண மண்டபத்தில் குண்டோதரனுக்கும் விருந்தும் கொடுக்கப்பட்டது.
திருமண நிகழ்ச்சியை காண வந்த பக்தர்களுக்கு நான்கு கோபுர வாசல்களிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் ஏராளமானோர் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.