சிறுகதை

பழைய போனக் கொடு (அ.வேளாங்கண்ணி)

பழைய பட்டன் போனிலிருந்து டச் ஸ்கிரீனுக்கு தாத்தாவும் மாறவேண்டும் என பேத்தி அடம்பித்த காரணத்தால் தாத்தா கில்பர்ட்டிற்கு புதிய போன் கிடைத்தது.
ஆனால் தாத்தாவால் தனது புதிய போனை எப்படி உபயோகிப்பது எனத் தெரியவில்லை. எல்லாவற்றையும் ஆறு வயது பேத்தி சுருதி தான் சொல்லிக் கொடுத்தாள்.
தினமும் பள்ளி விட்டு வந்ததும் தாத்தாவுக்கு செல்போன் பாடம் நடத்துவது சுருதிக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. அம்மாவோ அப்பாவோ.. சாப்பிட இல்லை படிக்க கூப்பிடும் வரை செல்போன் கிளாஸ் தொடரும் .
தாத்தா கில்பர்ட்டும் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாகக் கற்றுத் தேர்ந்தார். பல புதிய எண்களை மொபைலில் சேர்த்து வைத்தார் . பேஸ்புக் வாட்ஸ்அப்பிலும் “உள்ளேன் ஐயா” என்றவாறு தனது அட்டென்டன்ஸை தினமும் போட்டு வைத்தார்.
சுருதி பள்ளிக்கு சென்று விடும் தருணங்களில் செல்போனை நோண்டுவது தாத்தாவின் பேவரேட் பொழுதுபோக்கு
ஒரு நாள் சுருதி தாத்தாவிற்கு பேட்டர்ன் கற்றுக்கொடுத்தாள்.
பேட்டர்னில் ஒரு வட்டம் போட்டு இப்படிப் போட்டால் தான் போன் ஓப்பனாகும் எனச் சொல்லிக் கொடுத்தாள் தாத்தாவிற்கு அது மிகவும் பிடித்திருந்தது.
சாயந்தரம் வந்ததுமே தாத்தாவிடம் கேம்ஸ் விளையாட போன் வாங்கிக் கொண்டாள் சுருதி. இப்போதெல்லாம் பாடம் நடத்துவது இல்லை. எல்லாவற்றிலும் தேறிவிட்டார் தாத்தா.
போனை வாங்கி வந்ததுமே காலையில் சொல்லிக் கொடுத்த பேட்டர்ன் போட்டாள் சுருதி. ஆனால் போன் ஓப்பன் ஆகவில்லை. இன்னும் ஒரு முறை ட்ரை பண்ணினாள். ம்கூம் அப்போதும் ஓப்பன் ஆகவில்லை.
“தாத்தா …… தாத்தா…”
“என்ன சுருதி ….. என்னாச்சு?” என்று தன்னிடம் விட்டு நகராமல் பொறுமையாகக் கேட்டார் தாத்தா.
வேகமாக அவரருகே ஓடி வந்த சுருதி,
“தாத்தா பேர்ட்டர்ன் போட்டேன்… ஓப்பன் ஆக மாட்டேங்குது”
“அது ஓப்பன் ஆகாது”
“ஏன் தாத்தா…. ஏன் ஆகாது?”
“ஏன்னா… நான் தான் பேட்டர்ன் மாத்தி வச்சுட்டேன்”
“என்ன தாத்தா சொல்றீங்க? பேட்டர்ன மாத்தீட்டிங்களா?
சரி சரி….. அது என்ன பேட்டர்னு சொல்லுங்க? நான் கேம் விளையாடனும்”
“குடு நான் போட்டுத் தரேன் அது சீக்ரெட்”
“தாத்தா இது ரொம்ப ஓவர். சொல்லிக் கொடுத்த டீச்சருக்கு இது தான் மரியாதையா?”
” சரி ….. கோவிச்சுக்காத. போனக் கடு நான் பேட்டர்ன் போடறேன் நீ பார்த்துக்கோ”
“சரி இந்தாங்க”
வாங்கிய தாத்தா ஒரு புதிய பேட்டர்ன் போட…. போன் இது ராங் பேர்ட்டர்ன் என்று சொல்லியது.
கோபமாக சுருதி தாத்தாவைப் பார்த்தாள்.
தாத்தா விளையாடாதீங்க சரியான பேட்டர்ன போடுங்க
நான் விளையாடல சுருதி இதே மாதிரி தான் பேட்டர்ன் செட் பண்ணேன்”
என்ன இதே மாதிரியா? அப்ப இது இல்லியா?”
“இது தானு நினைக்கிறேன். சரி இரு… இன்னொரு வாட்டி போட்டுப்பார்க்கறேன்”, என்று வாங்கி மறுபடியும் ட்ரை பண்ண சேம் ரிசல்ட்
“என்ன தாத்தா இப்படி போனில் ஒரு ரிங் வந்தது. ஏதோ புதிய நம்பர்.
“ஹைய்யா….. ஒப்பன் ஆயிருச்சு” என்றவாறே சுருதியிடம் வாங்கி “ஹலோ” என்றார்.
மறுமுனையில் யார் என்று தெரியவில்லை. ரொம்ப உற்சாகமாகப் பேசினார். “ம்… நானே பண்றேன்” என்றவாறு போனை கட் செய்தார்.
“யார் தாத்தா?
“ம்….. என்னோட பள்ளிக்கூட ப்ரெண்டு. ரொம்ப நாளா தொடர்பு இல்ல. இப்பத்தான் எப்படியோ என் நம்பர் யாருக்கிட்டையோ வாங்கி பண்ணான். சீக்கிரமா என்னைப் பார்க்க வரேனு சொன்னான். சரி நானே பார்க்க வரேன். வர்றப்ப போன் பண்றேனு சொன்னான். அந்த நம்பர சேவ் பண்ணனும் என்றவாறு டச் ஸ்கிரீனை ட்ச் செய்தவர்.. மீண்டும் அதிர்ந்தார். அது முன்பைப் போலவே லாக்காகி இருந்தது.
“என்னம்மா ஸ்ருதி ….. மறுபடியும் லாக் ஆயிடுச்சி”
“அப்படித்தான் போல தாத்தா போன் வந்தா பேசலாம். நார்மலா
பேச போன்ல கரெக்ட் பேட்டர்ன் போட்டு ஓப்பன் பண்ணனும்
“ஓ. சரி…சரி கொடு” கொஞ்சம் யோசித்துப் பார்த்து ட்ரை பண்றேன்” என்று கூறியவாறு போனை வாங்கியவர் ஒவ்வொரு புதிய புதிய பேட்டர்னாகப் போட்டு ட்ரை பண்ண ஆரம்பித்தார்.
மூன்று நான்கு ட்ரை வரைக்கும். தவறு தவறு என்று சொன்ன போன் அதற்கடுத்த ட்ரைக்கு “இன்னும் ஐந்து நிமிடம் பொறுத்திருக்கவும் சொன்னது
மீண்டும் தவறாக, “இன்னும் பத்து நிமிடம் பொறுத்திருக்கவும்” என்று சொன்னது.
சுருதி கேம் விளையாடும் மூடே போய்… அம்மாவிடம் ஹோம் வொர்க் செய்யச் சென்று விட்டாள் .
தாத்தாவின் முயற்சி தொடர்ந்தது. அவருக்கு என்ன பேட்டர்ன் என்றே நினைவுக்கு வரவில்லை.
எங்கு பார்த்தாலும் பேட்டர்ன் பேட்டனாகத் தெரிய, அவருக்கு தலையைச் சுற்றியது.
போனோ அவரது நிலை அறியமால் நேரத்தை அதிகமாக்கிக் கொண்டே போய் இப்போது “வெயிட் பார் டுவன்டி போர் அவர்ஸ்” சில் போய் நின்றது.
மகன் ஆபிஸிலிருந்து வந்ததும் போனைத் தூக்கிக் கொண்டு ஓடினார்.
“என்னப்பா….மைக்கேல்… இப்படி ஆயிடுச்சு….பேட்டர்ன் மறந்து போச்சு… இப்ப ஓப்பன் பண்ண வழியே இல்லையா?”
முன்னமே மருமகள் ரோஸியிடம் புலம்பியிருந்தார்.
“இல்லேனு தான் நினைக்கறேம்ப்பா…. போன புல்லா ரீசெட் பண்ண வேண்டியிருக்கும்”
“அப்படி பண்ணா என்னாகும்?”
“என்னாகும்… போன் வாங்கின போது எப்படி இருந்துச்சோ அது மாதிரி ஆகிரும்.”
“அப்ப நான் இது வரைக்கும் தேடித்தேடி சேர்த்து வச்ச நம்பர் எல்லாம்”
“அவ்ளோ தான். ஒண்ணு பண்ண முடியாது”
“என்னப்பா… இப்படிச்சொல்லிட்ட?” தலையில் இடி விழுந்தவாறு நினைத்தவராய் கலவரமானார் கில்பர்ட்
“நான் பாட்டுக்கு ஒரு சூப்பர் போன வச்சுக்கிட்டு இங்கா இருந்தேன். எனக்கு டச் போன வாங்கிக் கொடுத்து அன்லிமிட்டடு டேட்டா கொடுத்து, பேஸ்புக், வாட்ஸ் அப்புன்னு கிணத்துல இறக்கிவிட்டு, ஜாலியா ஆடிக்கிட்டு இருக்கும் போது திடீர்னு இனிமே ஒன்னுங் கிடையாது. இந்த நாட்டை விட்டுப் போன்னு மொழி தெரியாத எதோ வௌிநாட்டுக்கு, நாடு கடத்தின மாதிரி இருக்குப்பா.
“ஆமாப்பா நீங்க சொல்றது சரிதான். இந்த டெக்னாலஜி எல்லாம்… எல்லா வசதிகளையும் கொடுத்து ஆசை காட்டிட்டு, அப்பறம் ஒரு நாள் இல்லேன்னாலும் ரொம்ப கஷ்டமாயிடுது. இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க?
“இந்தா…. இந்தப் போன நீ என்ன வேணா பண்ணிக்க. எனக்கு என்னோட பழைய போனக் கொடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *