முழு தகவல்

இஸ்ரேல்-அரபு நாடுகள்: பிணக்கும் உறவும்!

இஸ்ரேல்-அரபு நாடுகளுக்கு இடையிலான பிணக்குகள், சற்றொப்ப ஒரு நூற்றாண்டு வரலாறு கொண்டது. அந்த வரலாற்றை நாம் தெரிந்து கொண்டால் மட்டுமே, இப்போது, அமெரிக்காவின் ஏற்பாட்டில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், அபுதாபி ஆகிய நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தங்கள், பத்திரிகைகளிலும், உலக அரங்கிலும் ஏன் பேசு பொருளாகி உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தற்போதைய இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் உள்ள பிரதேசம், பழங்காலங்களில், அசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகத்தினர், மாசிடோனியர்கள் பின்னர் ரோமானியர்கள் என்று பலதரப்பட்டவர்களால் போர் தொடுக்கப்பட்ட ஒரு பகுதி. கி.பி ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் உருவானதை அடுத்து, பாலஸ்தீனப் பகுதி அரேபியர்கள் கைக்கு வந்தது. பின்னர் ஐரோப்பிய சிலுவைப் போராளிகளும் இதன் மீது போர் தொடுத்தனர்.

இப்போது இஸ்ரேல் நாடு இருக்கும் பகுதி உள்ளிட்ட பாலஸ்தீனப் பிராந்தியம், உதுமானியப் பேரரசு  ஓட்டோமான் பேரரசின் (Ottoman Empire) கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த பேரரசு கி.பி. 1299 களில் தொடங்கி 1922 கள் வரை, முதலாம் உலப்போர் முடிவுக்கு வரும் வரை ஏறத்தாழ 600 ஆண்டுகள் பெரும் பேரரசாக விளங்கி உள்ளது. இப்போதைய இந்தியாவை போல் ஒன்றரை மடங்கு நிலப்பரப்பை கொண்ட நாடுகள், உதுமானிய பேரரசின் கீழ் (55லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ) இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யூதர்களின் பாதிப்பும் எழுச்சியும்!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியாவில் வாழ்ந்த யூதர்கள், ஐரோப்பியர்களிடம் அனுபவித்த யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால் உத்வேகம் பெற்று, யூதர்களுக்கு ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு சொந்த நாடொன்றை நிறுவும் நோக்கில் சையோனிய இயக்கம் உருவானது. அந்த நிலையில், தற்போது, பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்சினைகளில் ஒன்றான ஜெருசலேம் பகுதி, முஸ்லீம்கள், யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் என்ற மும்மதத்தினராலும் புனிதமான இடமாகக் கருதப்பட்டது.

ஆனால், யூத பாரம்பரியம் நவீன இஸ்ரேலை, பைபிளில் வரும் மூன்று நாயகர்களில் முதல்வரான, ஆப்ரகாம் மற்றும் அவரது வழித்தோன்றல்களுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில் உருவான நாடாகக் கருதுகிறது. யூதர்களைப் பொறுத்தவரை, பழைய பாலத்தீனத்துக்குத் திரும்புவது என்பது, தங்களுக்கு பைபிளில் உறுதியளிக்கப்பட்ட நிலத்துக்குத் திரும்புவதாக அர்த்தம்.

யூத-முஸ்லீம் முரண்கள்

எனவே, சையோனிய இயக்கத்தால் உந்தப்பட்ட யூதக் குடியேற்றத்துக்கு, உதுமானிய பேரரசின் கீழ் இருந்த பாலஸ்தீன பகுதியே சரியானது என்று திட்டமிட்டு, ஐரோப்பியாவில் துன்பம் அனுபவித்த யூதர்கள், இந்த பகுதியில் குடியேறினர். இதனால், அந்த பகுதியில் பெரும்பான்மையாக இருந்த அரபு மற்றும் பிற முஸ்லீம் சமூகங்களிலிருந்து யூதர்களுக்கு எதிர்ப்பு எழத்தொடங்கியது.

உதுமானிய பேரரசு முதலாம் உலகப்போரின் முடிவில் வீழ்ந்த நிலையில், ஐநா மன்றத்தின் முன்னோடியாக உருவான சர்வதேச நாடுகளின் லீக் என்ற அமைப்பு, பிரிட்டனுக்கு பாலத்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பைத் தந்தது. பிரிட்டிஷ் அரசு, முதலாம் உலகப்போரின் போதும் அதற்கு முன்னரும் அரபுகளுக்கும் யூதர்களுக்கும் பல்வேறு வகையான உறுதிமொழிகளைத் தந்திருந்தது. ஆனால் அவை எதையும் அது நிறைவேற்றவில்லை.

இதற்குக் காரணம், மத்தியக்கிழக்குப் பகுதியே பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகளின் கட்டுப்பாட்டில் பிரித்து வைக்கப்பட்டிருந்ததுதான். இந்த இரு நாடுகளும் மத்தியக் கிழக்கு பிரதேசத்தை தத்தம் செல்வாக்குக்குட்பட்ட வலயங்களாகப் பிரித்துக்கொள்ள உடன்பட்டிருந்தன. இந்நிலையில், அரபு தேசியவாதிகளுக்கும் யூத சையோனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதல்கள், யூத மற்றும் அரபு ஆயுதக் குழுக்களுக்கிடையேயான மோதல்களாலாக வலுப்பெற்றன.

மேலும் அறிய… https://tinyurl.com/y5q3vq58

இஸ்ரேல் நாடு உருவாக்கம்!

1947ம் ஆண்டு நவம்பர் 29ம் நாள், ஐநா மன்ற பொதுச்சபை, பாலத்தீனத்தைப் பிரிக்கும் ஒரு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இது அரபு நாடு, ஒரு யூத நாடு, ஜெருசலேத்துக்கென்று சிறப்பு திட்டம் என்று மூன்று விஷயங்களை பரிந்துரைத்தது. இஸ்ரேலியர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் அரேபியர்கள் இது தங்கள் நிலத்தைப் பறிக்கும் ஒரு முயற்சியாகக் கருதி, இதை ஏற்றுக்கொள்ளவிலை. எனவே இத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இரண்டாம் உலகப்போரின் போது, நாஜிக்களால் நடத்தப்பட்ட யூத இனப்படுகொலையில் பல லட்சம் ஐரோப்பிய யூதர்கள் மாண்ட பிறகு, யூத நாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும், என்று அங்கீகரிக்க சர்வதேச அழுத்தம் அதிகரித்தது. பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை பாலத்தீனர்களுக்கும் யூதர்களுக்குமிடையே பிரித்துத் தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி 1948 மே 14ம் தேதி இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவாகக் காரணமாயிருந்தது. ஆனாலும் இன்றும் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளாத நாடுகள் உலகில் உள்ளன.

இஸ்ரேல்: இந்தியாவின் நிலைப்பாடு!

இந்தியாவும், இஸ்ரேலும் ஒன்பது மாத இடைவெளியில் சுதந்திரம் பெற்ற நாடுகள். இந்தியா 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் பெற்றால், இஸ்ரேல் 1948, மே 14இல் சுதந்திரம் பெற்றது. 1948 மே 14ஆம் தேதியன்று இஸ்ரேல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டபோது, ஐக்கிய நாடுகள் சபை அதே நாளில் இஸ்ரேலை அங்கீகரித்தது. அதேபோல், இஸ்ரேல் சுதந்திரம் பெற்ற அன்றே அதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் அங்கீகரித்தார். அப்போது முதல், இஸ்ரேலின் நிரந்தர நண்பனாக அமெரிக்கா இருந்து வருகிறது.

அப்போது இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக இருந்தது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவாக விரும்பாத இந்தியா, அதற்கு எதிராக ஐ.நா.வில் வாக்களித்தது. ஆனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரண்டு நாடுகளை உருவாக்கும் முன்மொழிவு ஐ.நா சபையில் மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று, புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நேருவுக்கு கடிதம் எழுதினார். இஸ்ரேலை உருவாக்குவதில் அவருக்கு என்ன ஆர்வம்? என்றால், ஐன்ஸ்டீன் ஒரு யூதர் என்பதுடன், ஐரோப்பாவில் யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை கண்டார். யூதர்களின் படுகொலைகளுக்கு ஐன்ஸ்டீன் நேரடி சாட்சியாகவும் இருந்தார்.

“யூதர்களுக்கு எதிரான கொடுமைகள், அட்டூழியங்களின் வலி மற்றும் வேதனையை நேரு அறிந்திருந்தார். அவர் எதிர்த்தது பாலஸ்தீன பிரிவினையையே தவிர, யூதர்களை அல்ல. மேலும், இஸ்ரேல் உருவான சமயத்தில், பிரிவினையால் ஏற்பட்ட பிரச்சனைகளை இந்தியா நேரடியாக அனுபவித்துக் கொண்டிருந்தது என்பதே நேருவின் இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு காரணம். பிரிவினை பிரச்சனைகளை, சிக்கல்களை, கொடுமைகளை இந்தியாவில் நிதர்சனமாய் கண்ட நேரு, அதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாவார்கள் என்பதை புரிந்துக்கொண்டே எதிர்த்தார்.

இரண்டு ஆண்டுகள், நிலைமைகளை உற்றுநோக்கிய நேரு, இறுதியாக, 1950 செப்டம்பர் 17அன்று, இஸ்ரேலை இறையாண்மை நாடு என்பதை இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. 1950 இல், இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தாலும், அதன்பின் 42 ஆண்டுகளுக்கு பிறகே, 1992 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் இரு நாடுகளுக்கும் அரசுநிலையிலான உறவுகளுக்கு அடித்தளமிட்டார்.

ஐன்ஸ்டீன்-நேரு கடிதங்கள்

ஐன்ஸ்டீன் யூத மதத்திற்கு பெரும் ஆதரவாளராக இல்லை என்றாலும், யூதர்களுக்காக ஒரு தனி நாட்டை உருவாக்கும் கோரிக்கையை முன்னெடுத்தார். யூத நாடு உருவானால், யூதர்களும், அவர்களின் கலைப்பண்பாடும் பாதுகாக்கப்படும் என்று நம்பிய ஐன்ஸ்டீன், உலகம் முழுவதும் சிதறிப்போயிருக்கும் யூத அகதிகளுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் கிடைக்கும் என்று நம்பினார். அரேபியர்களும், யூதர்களும் இஸ்ரேலில் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினர் ஐன்ஸ்டீன். எனவே, இஸ்ரேல் அதிபராக தன்னை முன்மொழிந்த இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் க்யூரியவின் விருப்பத்தையும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிராகரித்தார்.

1947 ஜூன் 13ஆம் தேதி ஐன்ஸ்டீன் நேருவுக்கு எழுதிய நான்கு பக்க கடிதத்தில், “யூதர்கள் பல நூற்றாண்டுகளாக நாடோடிகளாக இருக்கிறார்கள், லட்சக்கணக்கான யூதர்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய இடம் உலகில் எங்கும் இல்லை. உங்களுடைய சமூக மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தை போன்றதே யூதர்களின் இயக்கமும். நீங்கள் யூதர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

யூதர்களின் சரித்திரத்தை முழுமையாக அறிந்திருந்த நேரு, இஸ்ரேல் விவகாரம் பற்றி பலவிதமாக சிந்தித்தவர். ஐரோப்பாவில் யூதர்களுக்கு நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்து எழுதினார், தொடர்ந்து குரல் எழுப்பினார். ஆனால் பாலஸ்தீனத்தை பிரிப்பதில் நேருவுக்கு உடன்பாடில்லை. பல நூற்றாண்டுகளாக அரேபியர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வருவதாக கூறிய அவர், யூத நாடு உருவானால் அவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள் என்று அஞ்சினார். இதையே ஐன்ஸ்டீனின் கடிதத்திற்கு பதிலாக்கினார்.

கடிதங்கள் எழுதுவதில் புகழ்பெற்ற நேரு, ஐன்ஸ்டீனின் கடிதத்திற்கு ஒரு மாதம் பதிலளிக்கவில்லை. பிறகு எழுதிய கடிதத்தில்,”யூதர்கள் பாலஸ்தீனத்தில் செய்துள்ள அற்புதமான பணியையும், மகத்தான பங்களிப்பையும் மதிக்கிறேன். இத்தனைக்கு பிறகும், அரபு நாடுகளில் யூதர்கள் மீது நம்பிக்கை ஏன் ஏற்படவில்லை? என்ற கேள்வியோடு, அரேபியர்கள் பற்றியும் நான் அனுதாபம் கொள்கிறேன். யூதர்களின் நிலைமைக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கும் இந்தியா, யூதர்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்ய தயார். பொதுவாக, எந்த நாட்டின் “தேசியக் கொள்கைகளும் அடிப்படையில் சுயநல கொள்கைகளே” என்பதை மறுக்கமுடியாது என்று நேரு எழுதினார்.

மேலும் அறிய… https://tinyurl.com/y46c78ob

அரபு நாடுகள்- இஸ்ரேல் மோதல்

இதனைத் தொடர்ந்து, எகிப்து, ஜோர்டான், சிரியா மற்றும் இராக் ஆகிய நாடுகள், பிரிட்டிஷாரின் முந்தையக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தின. இதுதான் முதல்முதலாக அரபு-இஸ்ரேலிய யுத்தம் உருவாகக் காரணமாக இருந்தது. இதைத்தான் யூதர்கள் சுதந்திரப் போர் அல்லது விடுதலைக்கான போர் என்று குறிப்பிடுகிறார்கள். அடுத்து இஸ்ரேல் என்ற புதிய நாடு, ஐநா மன்ற உறுப்பினராக விண்ணப்பித்தது. இந்த அந்தஸ்தை அடுத்த ஆண்டில் அது பெற்றது. தற்போது ஐநா மன்றத்தில் சுமார் 83 சதவீத உறுப்பு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்துள்ளன.

இந்த மோதலுக்குப் பின்னர், அரபு நாடு என்ற ஒன்றுக்காக ஐநா முதலில் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பு பாதியாகக் குறைக்கப்பட்டது. ஆனால் இதை பாலத்தீனர்கள் “நக்பா” அல்லது பேரழிவு என்ற ஒன்று தொடங்கிவிட்டதாகக் கருதினார்கள். இதன் தொடர்ச்சியாகவே, 1948 முதல் அரேபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே, போர்களும் மோதல்களும் தொடர்ந்துநடந்து வந்தது. இதில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்கு சென்று விட்டனர்.

1967ல் நடந்த ஆறு நாள் போரில், இஸ்ரேல் பெற்ற பெருவெற்றி, காசா நிலப்பரப்பையும் சைனாய் தீபகற்பத்தையும் கைப்பற்ற உதவியது. இவை 1948லிருந்து எகிப்து கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரை ஜோர்டான் கட்டுப்பாட்டில் இருந்தது. கோலான் குன்றுகள் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவை அனைத்தையும் இஸ்ரேல் கைப்பற்றிவிட்டது.

யாசர் அராபத் – பாலஸ்தீனம்!

1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலத்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து நடந்த அரபு-இஸ்ரேல் போரின் போது, யாசர் அரபாத்தின் தந்தை கொல்லப்பட்டார். 2 ஆம் உலகப் போரின்போது பிரிட்டிஷார் எகிப்தியப் பாலைவனங்களில் கைவிட்ட ஆயுதங்களைத் தேடி எடுத்து, ராணுவப் பயிற்சி மேற்கொண்ட யாசர் அராபத், பிறகு, எகிப்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று, சூயஸ் கால்வாய்ப் போர் மற்றும் அதற்குப் பிறகு நடந்த அரபு-இஸ்ரேல் போர் ஆகியவற்றில் களத்தில் செயல்பட்டார். இக்கால கட்டத்தில்தான், அதாவது 1958-ஆம் ஆண்டு, அல்-பத்தா என்ற அரசியல் அமைப்பையும் நிறுவினார்.

1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள் தோற்றன. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்டான் நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அராபத்தின் அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, யாசர் அராபத் பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக ஆனார். 1974-ஆம் ஆண்டு, பரபரப்பான சூழ்நிலையில், ஐநா மன்றப் பொதுச்சபையில் நுழைந்து அவர் உரையாற்றினார்.

தம் ஒரு கையில் ஆலிவ் கிளையும், இன்னொருகையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளது. எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்க வேண்டும் என்று அராபத் அன்று ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. 1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலத்தீனப் பகுதிகளில் “இன்டிபாடா” என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து, பாலத்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றது.

1993-ஆம் ஆண்டு, நார்வே நாட்டின் ஏற்பாட்டின் பேரில் உடன்பாடு ஏற்பட்டு, ஆஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை அடுத்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வைத்து இஸ்ரேலியப் பிரதமர் இட்சக் ராபினுடன் யாசர் அரபாத் கைகுலுக்கினார். சமரச உடன்பாட்டை அடுத்து, அரபாத், ராபின், இஸ்ரேலிய அமைச்சர் ஷிமோன் பெரஸ், ஆகியோருக்குக் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

சமரச உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசை, பாலத்தீனம் விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால், இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகள், ஜெரூசலேம் நகரின் எதிர்கால நிலை, பாலத்தீன அகதிகள் நாடு திரும்புவது ஆகிய பிரச்னைகள் கிடப்பில் போடப்பட்டன. ஆனால், சமரச உடன்பாடு, முறையாகச் செயல்படவில்லை. இந்த அங்கீகாரத்தை ஹமாஸ் அமைப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்!

இஸ்ரேல் மேற்குக்கரையிலிருந்தும், காசாவிலிருந்தும் அதன் யூதக் குடியேற்றங்களை படிப்படியாக விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது. இதன் மூலம் பாலத்தீனர்கள் ஒரு சுதந்திரமான நாடாக உருவாக ஒப்புக்கொண்டது. ஆனாலும் இஸ்ரேல் ஒரு போதும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும் இந்த ஒப்பந்தங்களின் விளைவாகத்தான் பாலத்தீனர்களை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும், பாலத்தீன தேசிய நிர்வாக அமைப்பு உருவானது. அதன் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் தனது பிரதமரையும், கேபினட் அமைச்சர்களையும் தேர்ந்தெடுக்கிறார்.

கடந்த 2012 நவம்பர் 29ம் தேதி, ஐநா மன்றப் பொதுச்சபை பாலத்தீனர்களின் பிரதிநிதித்துவ அந்தஸ்தை, “உறுப்பினரல்லாத பார்வையாளர் நாடு” என்ற தரத்துக்கு வாக்களிப்பு மூலம் உயர்த்தியது. இந்த மாற்றம், பாலத்தீனர்களை, பொதுச்சபை விவாதங்களில் பங்கேற்கவும், அது பிற ஐநா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் உறுப்பினராகு வாய்ப்புகளைக் கூட்டவும் உதவியது.

ஆனால் பாலத்தீனத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து இன்னும் ஐநா மன்றத்தால் தரப்படவில்லை என்றாலும், ஐநா பொதுச்சபையில் உள்ள உறுப்பு நாடுகளில் ஏறக்குறைய 70 சதவீதத்தினர் பாலஸ்தீனத்தை ஒரு நாடாகவே அங்கீகரிக்கின்றனர். 2015 செப்டம்பர் மாதத்தில் ஐநா மன்றத்தின் பொதுச்சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள், பாலத்தீனக் கொடியை ஐநா மன்ற தலைமையகத்திற்கு வெளியே பறக்கவிட அனுமதித்து வாக்களித்தனர்.

ஒரு நகரம்-இருவர் உரிமை!

இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கும் பெயர் ஜெரூசலேம். உலகின் புராதன நகரங்களில் ஒன்றான ஜெரூசலேம், இஸ்லாம், கிறித்துவம் மற்றும் யூத மதத்தினரின் புனித தலமாக கருதப்படுகிறது. ஜெருசலேத்தை பாலத்தீனர்கள் தங்கள் வரலாற்று ரீதியான தலைநகராகக் கருதுகிறார்கள். ஜெருசலேம் நகரின் மீது, இஸ்ரேல் இறையாண்மை கொண்டாடுகிறது.

1967ல் கிழக்கு ஜெருசலேத்தைப் பிடித்ததிலிருந்தே, அது இந்நகரை தனது தலைநகராகக் கருதுகிறது. இது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. பாலத்தீனர்களும் கிழக்கு ஜெருசலேத்தை தங்கள் தலைநகராக விரும்புகிறார்கள்.

இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் புனித நகராக திகழும் ஜெரூசலேம், நகர் மட்டும் மிகவும் புராதனமானது அல்ல அதைப் பற்றிய சர்ச்சைகளும் பழமையானவையே. இஸ்லாம், கிறித்துவம், யூதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் புனித்ததலம் ஜெரூசலேம்.

இதனாலேயே பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஜெரூசலேமிற்கு உரிமை கொண்டாடுகின்றனர்.

மேலும் அறிய… https://tinyurl.com/yagdr7ce

ஜெருசலேம்-பழைமை சிறப்பு!

நகரின் மையப் பகுதியில் பழைய ஜெரூசலேம் என்று அழைக்கப்படும் புராதன நகரம் அமைந்திருக்கிறது. இது, உலகப் பாரம்பரியச் சொத்தாக (World Heritage) வகைப்படுத்தப்பட்டுள்ளது. அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது பழைய ஜெரூசலேம். இதில் இரண்டு பகுதிகள் கிறித்துவர்களுக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் அர்மீனியர்களும் கிறித்துவர்களே. நான்கு பகுதிகளிலும் மிகவும் பழமையானது அர்மீனியக் குடியிருப்பு பகுதிதான்.

பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது, இறந்தது, உயிருண்டு எழுந்தது அனைத்துமே ஜெரூசலேமில்தான். கிறித்துவ மரபுகளின்படி, இந்த இடம் கல்வாரி மலை என்று கூறப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட கல்லறை இங்குதான் இருக்கிறது. அவர் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்ததும் இங்கிருந்துதான் என்று நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் கல்லறைக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

மசூதியும்-கோட்டைச் சுவரும்

ஜெரூசலேமின் நான்கு குடியிருப்புகளில் மிகப்பெரிய குடியிருப்பு பகுதி இஸ்லாமியர்களுடையதுதான். பாறைக் குவிமாடம் மற்றும் அல் அக்ஸா மசூதி இங்கு அமைந்துள்ளது. யூதர்களின் பகுதியில்தான், கோட்டை அல்லது மேற்கு சுவர் அமைந்துள்ளது. அல் அக்ஸா மசூதியின் சுற்றுமதிலின் ஒருபகுதியாக அமைந்திருக்கும் மேற்கு சுவர், சிதைந்துபோன நீண்ட சுவரின் எஞ்சியிருக்கும் பகுதியாகும். இந்த இடத்தில் யூதர்களின் புனித கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது. நபி இப்ராஹீம் தனது மகன் இஷாக்கை தியாகம் செய்யத் தயாராக இருந்த இடம் என்றும் யூதர்கள் நம்புகின்றனர்.

உறவுக்கான புதிய அத்தியாயம்!

இந்நிலையில், ஜெரூசலேத்தில் தனது புதிய தூதரகத்தை அமெரிக்கா திறந்துள்ளது. தூதரக திறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மகள் இவாங்கா டிரம்ப், தனது கணவர் ஜாரெட் குஷ்னெர் மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதேபோல் இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அதிகாரப்பூர்வ விமானம் சென்றிருப்பது, ஒரு வரலாற்று நிகழ்வாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கையின் பின்னணியில் பரஸ்பர உறவுகளை இயல்பாக்குவதற்கான முதலாவது முறைப்படியான மற்றும் முக்கியமான நடவடிக்கையாகும் இது.

இஸ்ரேலிய அதிகாரிகளோடு கூடவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரும் விமானத்தில் இருந்தார். விமானத்தில் இருந்து கீழே இறங்கிவரும்போது, “மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) க்கான புதிய அத்தியாயம் இது” என்று கூறினார். இந்த புதிய அத்தியாயத்தை எழுத உதவிய ஜாரெட் குஷ்னர் ( அவர் ஒரு யூதரும் கூட), இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எப்போதும் உடனிருந்தார். இந்த உடன்படிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசியல் அட்டவணைகளில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயனடைகின்றன. இஸ்ரேலின் அங்கீகாரம், பிராந்தியத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும். பாதுகாப்பு மற்றும் சைபர் சூப்பர் பவர் துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இஸ்ரேலின் உதவி கிடைக்கும். கூடவே, நவம்பர் 3 அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர்களுக்கு முன்னால், மத்திய கிழக்கின் அமைதி தூதராக டொனால்ட் ட்ரம்ப் தம்மை முன்னிறுத்திக்கொள்வார்.

இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யும் 3 மற்றும் 4வது இஸ்லாமிய நாடாக ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் உருவெடுத்துள்ளது. இதற்கு முன் எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகள் 1979 மற்றும் 1994ல் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற ஒப்பந்தத்தில் பெரிய அளவில் பாலஸ்தீனம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. பாலத்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்கும் அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெற வில்லை. ஆனால் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை இனி அமெரிக்கா அனுமதிக்காது என்பது மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது.

மேலும் அறிய… https://tinyurl.com/y2lko93p

மேலும் அறிய…  https://tinyurl.com/y3ubupgt

கைவிடப்பட்டதா பாலஸ்தீன நலன்?

1948-ல் இஸ்ரேல் ஒரு நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அரபு-இஸ்ரேலிய உறவு மிக மோசமானதாகவே இருந்துவந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் அரபு-இஸ்ரேலிய உறவுக்கு நீடித்த நன்மை தரும் என்றாலும், பாலஸ்தீன விவகாரத்திலிருந்து அரபு நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களைத் துண்டித்துக்கொள்வதும் புலனாகிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது குறித்து இந்த ஒப்பந்தத்தில் எந்தப் பேச்சும் இல்லை. இஸ்ரேல் தனது 1967 வருடத்திய எல்லைக்குத் திரும்புவது குறித்து எந்த முடிவும் எடுக்காமலேயே ஒரு அரபு நாட்டுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறியிருக்கிறார்.

பாலஸ்தீன எல்லைகளை மனிதாபிமானத்துக்கு விரோதமாகவும் முறையற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதைக் கைவிட்டுவிட்டு, பாலஸ்தீனத்துடன் அது பேச்சுவார்த்தை நடத்துமாறு அழுத்தம் கொடுக்க அமீரகத்தால் முடியுமா என்பதுதான். அப்படிப்பட்ட அழுத்தத்தை அமீரகம் கொடுக்கவில்லை என்றால், இஸ்ரேலுடன் அந்த நாடு செய்துகொண்ட ஒப்பந்தத்தால் பாலஸ்தீனத்துக்குக் கொஞ்சமும் பலனளிக்காமல் போய்விடும். ஆனால், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் எந்த இடைவெளியும் இன்றித் தொடரப்போகிறது என்பது மட்டும்தான் வருத்தமளிக்கும் அந்த யதார்த்தம்.

மேலும் அறிய… https://tinyurl.com/yyfopolq

எழுத்து-தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *