செய்திகள்

9 தமிழக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, அக்.3-–

நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமையை ஏற்படுத்தி கொடுத்த 9 தமிழக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பவர்களை தமிழக அரசு தொடர்ந்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழர்களை பெருமைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது.

அதன்படி சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் உயர்கல்வித்துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா நேற்று நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன், சந்திரயான்-–1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துசக்தி மையத்தின் இயக்குனர் வி.நாராயணன், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ஏ.ராஜராஜன், யு.ஆர்.ராவ். செயற்கைகோள் மைய இயக்குனர் எம்.சங்கரன், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஒருங்கிணைத்த உயர் தொழில்நுட்ப குழு விஞ்ஞானி ஆசிர் பாக்கியராஜ், சந்திரயான்-–2 திட்ட இயக்குனர் வனிதா முத்தையா, சூரியனை ஆய்வு செய்ய விண்ணுக்கு ஏவப்பட்டுள்ள ஆதித்யா- எல்–1 விண்கலம் திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி, சந்திரயான்-–3 விண்கலத்தின் திட்ட இயக்குனர் ப. வீரமுத்துவேல் ஆகிய 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, சான்றிதழும், திருவள்ளூவர் சிலையையும் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சந்திரயான்-–3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாக பரவியது. இப்படிப்பட்ட பெருமையை தமிழ்நாட்டுக்கு தேடித்தந்த அறிவியல் மேதைகளான உங்களை தமிழ்நாடு முதலமைச்சராக கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

9 விஞ்ஞானிகளில் 6 பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள். முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக 2 பேர் பெண்கள். தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தினர் இவர்களை தங்கள் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.

இஸ்ரோவில் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். இவர்களை கவுரவிக்கும் வகையில், 2 அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். முதல் அறிவிப்பு, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமையை ஏற்படுத்திக்கொடுத்த, இனியும் ஏற்படுத்திக்கொடுக்கப் போகிற அறிவியல் மேதைகளான இந்த 9 பேருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

2-வது அறிவிப்பு என்னோட கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் மட்டும் போதும் என்று நினைக்காமல் கல்வியில், அறிவாற்றலில், சிந்திக்கின்ற திறனில், பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக உருவாக்க நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறோம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாணவர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த கல்வி உதவித்தொகைக்காக, ரூ.10 கோடி தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.

இந்த 9 விஞ்ஞானிகளை போன்று ஆளுமைகள் இன்னும் அதிகமாக உருவாக வேண்டும். மாணவர்கள் அறிவியல் ஆர்வத்தையும், ஆளுமைத் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய மாணவர் சமுதாயத்திலிருந்து இந்த மேடையில் இருக்கின்ற ஆளுமைகளைப் போன்ற அறிவியல் மேதைகள் உருவாகவேண்டும். அதுதான் இந்த திராவிட மாடல் அரசின் இலக்கு. இவர்கள், அறிவியலாளர்களாக மட்டும் இல்லாமல், அறிவியல் வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள்.

கூட்டு முயற்சியால் அனைத்தும் நிகழ்த்திக்காட்டப்பட்டிருக்கிறது. இஸ்ரோ தலைவர் சோம்நாத்க்கும் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். பூமிக்கு அப்பால் உள்ள அனைத்து ஆராய்ச்சிகளும் தொய்வின்றித் தொடரட்டும். சூரியன் பற்றியும் நிலாவை பற்றியும் எல்லா ஆய்வுகளும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். மனிதரை விண்வெளிக்கு அனுப்புகின்ற வரை அனைத்து அறிவியல் முயற்சிகளும் வெற்றிகரமாக நடைபெறட்டும். இந்திய நாட்டைக் காப்போம். நாட்டுக்கு அப்பால் உள்ள உலகத்தையும் கற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் வி.நாராயணன், வனிதா முத்தையா, நிகார் ஷாஜி மற்றும் வீரமுத்துவேல் ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கி பேசினர். விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, பொன்முடி, மு.பெ.சுவாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் வினய் உள்பட ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா வரவேற்றார். உயர்கல்வித்துறை முதன்மைச்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *