செய்திகள்

சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை, டிச.12-

சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிக்ஜாம் புயல், பெருமழைக்கு பின்னர் சென்னை மாநகரம் தற்போது மீண்டெழுந்து உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதலமைச்சர் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் அவரது ஈடுபாட்டின் காரணமாக சென்னைக்கு வர இருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

புயலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இன்றைக்கு பெருமளவு இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் இருக்கும் சில எதிர்க்கட்சிகள் அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் கொரோனா பேரிடரில் எப்படி முன்னணியில் இருந்தாரோ, அதே போன்று இந்த பேரிடரிலும் முதலமைச்சர் முழுமையாக களத்தில் இருந்தார். சென்ற ஆட்சியில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படத்தையோ போட்டு நிவாரண பொருட்கள் வழங்கியது போன்று இந்த ஆட்சியில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடிய வேலைகளை செய்யாமல் நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருக்கிறோம்.

2015-ம் ஆண்டு மழை நிவாரண பணிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 250 கோடி நிதி வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் கேட்டார். அன்றைக்கு அவர் மக்களுக்கு வழங்கிய நிவாரணத்தொகை ரூ.5 ஆயிரம். இன்றைக்கு நாம் ரூ.5,200 கோடிதான் கேட்டிருக்கிறோம். ஆனால் ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்குகிறோம். இந்த நிவாரணத்தை மத்திய அரசு தான் வழங்குகிறது என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.

அரசியல் உள்நோக்கத்துக்காக

எதிர்க்கட்சியினர் அவதூறு

வெள்ளம் வந்தபோது கமலாலயத்தின் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தவர்கள் எல்லாம், வெள்ளம் வடிந்த பின்னர் வெளியே வந்து அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுக் கொண்டு பேட்டியளித்துவிட்டு சேலத்துக்கு சென்றுவிட்டார்.

இன்றைக்கு அவர்கள் இந்த நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நான் அண்ணாமலையிடம் கேட்டு கொள்வது, நீங்கள் மத்திய அரசிடம் பேசி தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிதியை பெற்றுத்தரும் வேலையை முதலில் செய்துவிட்டு, அதற்கு பின்னர் விமர்சனங்களை முன் வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கு களத்தில் நின்று பணியாற்றி உயிர் சேதங்களை தி.மு.க. அரசு தவிர்த்து இருக்கிறது. ஆனால் அரசியல் உள்நோக்கத்துக்காக எதிர்க்கட்சியினர் அவதூறு பிரச்சாரத்தை செய்கிறார்கள்.

மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு நடைபெற்றது என்பதை அமைச்சர் கே.என்.நேரு விரிவாக சொல்லி விட்டார். நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. எங்களுடைய பணி வெளிப்படையானது. எனவே இதில் வெள்ளை அறிக்கை கேட்பது என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

கஷ்டத்தில் இருக்கும்

மக்கள் கையில் பணம்

பின்னர் நிருபர்களிடம் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறியதாவது:-

கேள்வி:- சென்னையை பொறுத்தவரையில் எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை கிடைக்குமா?

பதில்:- சென்னையை பொறுத்த வரையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த நிவாரண தொகை வழங்கப்படும். இதற்கு ‘டோக்கன்’ வழங்கும் பணி 16-ந்தேதி தொடங்கும். அடுத்த 10 நாட்களில் இந்த பணி நிறைவடையும். மற்ற மாவட்டங்களை பொறுத்த வரையில் (திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு) பாதிக்கப்பட்ட வட்டங்களில் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை கிடைக்கும்.

கேள்வி:- சென்னையில் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த பலரிடம் ரேஷன் அட்டை இருக்காது. அவர்களுக்கு எப்படி நிவாரணம் வழங்கப்படும்?.

பதில்:- நிவாரண தொகை வழங்குவதற்கான ஆதாரமாக தற்போது ரேஷன் அட்டை முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்கள் அரசிடம் முறையீடு செய்யலாம்.

கேள்வி:- நிவாரண தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தலாமே…

பதில்:- மகளிர் உரிமையை வங்கி கணக்கில் செலுத்தியபோது புகார்கள் வந்தது. ஏதேனும் கடன் இருந்தால் வங்கிகள் அந்த தொகையை பிடித்தம் செய்துகொள்கிறார்கள். தற்போது கஷ்டத்தில் இருக்கும் மக்கள் கையில் பணம் நேரடியாக போய் சேர வேண்டும். வங்கிகளில் பணம் செலுத்தி அவர்கள் பிடித்தம் செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையாது என்பதால்தான் நேரடியாக கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *