செய்திகள்

2 திருமணம் செய்து கொள்ளாத ஆண்களுக்கு சிறை தண்டனையா?

அஸ்மாரா, அக். 14–

எரித்திரியா நாட்டில் நிலவி வரும் உள்நாட்டுப் போர் காரணமாக, ஆண்களின் மக்கள் தொகை குறைந்துள்ளதால் ஆண்கள் இரண்டு திருமணங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பொய்யானது என்று கூறப்படுகிறது.

திடீரென்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் எரித்திரியா நாட்டின் ஆண்கள் குறைந்தது 2 பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவு சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல பேர் இந்த பதிவை கேலி செய்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

பொய்ச் செய்தி

எரித்திரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக, ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், ஆண்களை விட பெண்களின் மக்கள்தொகை அதிகமாக இருப்பதால், அரசாங்கம் இரண்டு திருமணம் என்ற பழங்கால பாரம்பரியத்தை அங்கீகரித்து அதை சட்டமாக்கியுள்ளது என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவு அனைத்து சமூக ஊடக தளங்களில் மட்டுமல்ல, முக்கிய ஊடகங்களின் பல டிஜிட்டல் தளங்களிலும் வைரலானது.

இருந்தபோதிலும் இந்த செய்தி பொய்யானது என தெரியவந்துள்ளது. பிபிசி அறிக்கையின்படி, இரண்டு முறை திருமணம் செய்து கொள்ளாத ஆண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எரித்திரியா அரசாங்கம் எந்த சட்டத்தையும் இயற்றவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

எரித்திரியா போலவே ஈராக் மற்றும் சூடான் நாட்டிலும் இது போன்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக ஏற்கனவே சமூக ஊடக பதிவுகள் வைரலாகின. ஆனால் அது போன்ற சட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அந்நாடுகள் மறுப்பு தெரிவித்தன. உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நாடுகளை குறிவைத்து இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *