செய்திகள்

சென்னையில் பிரதமர் மோடி 9–ந் தேதி ‘ரோடு–ஷோ’ 6–வது முறையாக தமிழகம் வருகை

சென்னை, மார்ச் 31–

சென்னையில் பிரதமர் மோடி 9–ந்தேதி ரோடு–ஷோ நடத்துகிறார்.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி 5 தடவை தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் செய்தார்.

கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுக்கூட்டங்களிலும் பேசினார்.கோவையில் சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவும் நடத்தினார்.

மீண்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி வருகிற 9ந்தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சென்னை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கான பயண திட்டம் தயாராகி ஓரிரு நாளில் முடிவாகிவிடும்.

9-ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். தென்சென்னையில் பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்கள். தென்சென்னைக்கு மேற்கு மாம்பலம், மத்திய சென்னைக்கு பாண்டி பஜார் ஆகிய இடங்களை இணைக்கும் வகையிலும், இதே போல் மேலும் 2 இடங்களையும் தேர்வு செய்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களின் முடிவை பொறுத்து இடம் உறுதி செய்யப்படும்.

வேலூர், பெரம்பலூர்

வடசென்னை தொகுதி மற்றும் திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவில் ஆகியவற்றையும் பயண திட்டத்தில் சேர்க்கவும் கோரிக்கை வைத்துள்ளார்கள். சென்னை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விமானத்தில் திருச்சி செல்கிறார்.அன்றைய தினமே வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் கேரளா செல்கிறார்.அதன் பிறகு மீண்டும் சில தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வருவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ராகுல்காந்தி 11-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்குள் ஒருநாள் தமிழகம் வருவதற்கு ஒத்துக்கொண்டு உள்ளார். ஒரே நாளில் 3 அல்லது 4 இடங்களில் பிரச்சாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாராகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் நெல்லையில் ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்கிறார். கடலூர், மயிலாடுதுறையை இணைத்து ஒரு இடத்தில் பேசுகிறார்.மேலும் திருவள்ளூர், கரூர் ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வருகிறார். அவர் வரும் தேதி இன்னும் உறுதியாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *