செய்திகள்

9 நாட்களுக்கு பிறகு சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு

சென்னை, டிச. 10–

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் குடியிருப்புகளில் இருக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நிவாரண முகாம்களாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டன. இதனை கருத்தில் கொண்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கடந்த 4–ந்தேதி முதல் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது.

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டினர். இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளும் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியது. இதனையடுத்து பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் மூடப்பட்ட பள்ளிகள் 9 நாட்கள் கழித்து மீண்டும் 11–ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி வெளியிட்ட அறிக்கையில், பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். சுற்றுச்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மாணவர்களை அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட வகுப்புகளை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும்.

இடிக்க வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் அவற்றை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். வகுப்புகளில் உள்ள இருக்கைகளில் பூஞ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பள்ளிகளுக்கு தேவையான வேறு சில அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

பள்ளிகள் திறப்புதற்கு தயரான நிலையில் 7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.

சென்னை மாநகராட்சி உள்ள 6 அரசு பள்ளிகள், போரூர், ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள 8 அரசு பள்ளிகளில் இன்னும் மழைநீர் வடியாததால் 14 பள்ளிகள் மட்டும் நாளை திறக்கவில்லை. இந்த பள்ளிகளின் சீரமைப்பை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.இதனிடையே பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு கடந்த 7–ந்தேதி முதல் அரையாண்டு தேர்வு நடத்த அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. கனமழையால் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *