செய்திகள்

வைகை அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

தேனி, டிச. 19–

வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகாரிக்கப்படுவதால் 5 மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. ஏற்கனவே அணையின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை நெருங்கியதில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 9-ந்தேதி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.09 அடியாக உள்ளது. அணைக்கு 12955 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3169 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று மதியம் அல்லது மாலைக்குள் அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் மதகுகள் வழியாகவும், கால்வாய் வழியாகவும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை ஏற்கனவே நிரம்பி முழு கொள்ளளவை எட்டி விட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 56.30 அடியில் இருப்பதால் அணைக்கு வரும் 345 கன அடி முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் சோத்துப்பாறை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.73 அடியில் இருப்பதால் அணைக்கு வரும் 681 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேகமலை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சண்முகாநதி அணையும் முழு கொள்ளளவை எட்டி விட்டதால் அணையில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *