செய்திகள்

ரஷ்யா–இந்தியா இடையேயான உறவு வலுவாக உள்ளது: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

மாஸ்கோ, டிச. 28–

ரஷ்யா–இந்தியா இடையேயான உறவு வலுவாக உள்ளது என ரஷபுய அதிபர் புதினைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள்கள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவர் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் கிரெம்ளினில் சந்தித்து உரையாற்றினார். இந்த சந்திப்பின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “உக்ரைன் – ரஷ்யா நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க பிரதமர் மோடி தன்னால் இயன்றதைச் செய்யத் தயாராக இருப்பது எனக்குத் தெரியும். உக்ரைன் நெருக்கடியை எப்படி அமைதியான முறையில் தீர்ப்பது என்பது குறித்த தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள ரஷ்யா தயாராக இருக்கிறது.

எனவே, இப்போது அதை ஆழமாக ஆராய்ந்து, கூடுதல் தகவல்களை உங்களுக்கு வழங்குவோம். பிரதமர் மோடி அடுத்த ஆண்டு ரஷ்யா வரவேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த சந்திப்பிற்குப் பிறகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

வலுவான உறவு

அப்போது,” பிரதமர் மோடியும், அதிபர் புதினும் அடுத்த ஆண்டு வருடாந்திர உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள் என்று நம்புகிறேன். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கின்றனர். இதுவரை, 21 ஆண்டுகள் உச்சி மாநாடுகள் இந்தியாவிலும் ரஷ்யாவிலும் நடந்துள்ளன. கடைசி உச்சி மாநாடு 2021 டிசம்பரில் டெல்லியில் நடந்தது. ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் உயர் தொழில்நுட்ப வர்த்தகம் அதிகரித்து வருவதாக அதிபர் புதின் தெரிவித்தார்.

இந்தியா – ரஷ்யா இடையே வர்த்தக ஒப்பந்தம் இரண்டாவது ஆண்டாக நிலையான வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகமாகவே இருக்கிறது. ரஷ்யா – இந்தியா இடையேயான உறவு வலுவாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *