செய்திகள்

மோடியின் தேச துரோகத்தை மறைக்க கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார்

பாஜக மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை, ஏப். 02–

பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் இந்தியாவிலேயே மிக அதிகமாக தமிழ்நாடு வெறுப்பதால், சகித்துக் கொள்ள முடியாமல் ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பரப்புகின்றனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிற போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. மோடி ஆட்சி அமைந்த 2014 முதல் 2024 வரை 400 படகுகள் பறிமுதலும், 3179 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கிடையே அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக்குழு 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறை கூட கூடவே இல்லை. தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமைக்கப்பட்ட இக்குழுவை பா.ஜ.க. அரசு ஏன் கூட்டவில்லை?

கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு கச்சத்தீவு குறித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் ‘கச்சத்தீவை திரும்ப எப்படி மீட்க முடியும்? அப்படி மீட்க வேண்டுமென்றால் போர் தொடுத்து தான் மீட்க முடியும். வேறு எந்த வகையிலும் மீட்க முடியாது” என்று கூறிய பிறகு, கச்சத்தீவு பற்றி பா.ஜ.க.வினர் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?

தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரியமாக மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தருவதற்கு கையாலாகாத பா.ஜ.க. அரசு கச்சத்தீவை பற்றி பேசுவது பிரச்சினையை திசைத் திருப்புகிற செயலாகும்.

இப்பிரச்சினையில் 10 ஆண்டுகளாக ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதவி பிரமாணத்தில் எடுத்துக் கொண்ட ரகசிய காப்பு உறுதிமொழியை அப்பட்டமாக மீறுகிற வகையில் கருத்து கூறியிருக்கிறார்.

மோடியின் தேச துரோக செயல்

285 ஏக்கர் பரப்பளவு கொண்ட மனித நடமாட்டம் இல்லாத கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், இந்தியாவுக்கு சொந்தமான லடாக் பகுதியில் 38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பையும், அருணாசல பிரதேசத்தில் இந்திய – சீன எல்லையில் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனா ஆக்கிரமித்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி இந்திய எல்லைப் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கருத்து கூறியதை விட தேசதுரோகச் செயல் வேறு என்ன இருக்க முடியும்?

சீன ஆக்கிரமிப்பு குறித்து தட்டிக் கேட்க முடியாத பலகீனமான நிலையில் உள்ள பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ? 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கோ, தமிழ்நாட்டு மீனவர்களின் கைது நடவடிக்கை, படகுகள் பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த முடியாத பிரதமர் மோடியின் சுயரூபத்தை தமிழ்நாட்டு மீனவர்கள் நன்கு அறிவார்கள்.

இன்றைய நிலையில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க எந்த அரசியல் கட்சியும் முன்வராத நிலையில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து எதிர்கட்சிகளை ஒடுக்குகிற முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். 2014 முதல் 2022 வரை அமலாக்கத்துறை 5493 வழக்குகள் போட்டிருக்கிறது. இதில் 90 சதவிகித வழக்குகள் எதிர்கட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. விசாரணையில் இருப்பவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்தால் அவர்களது சலவை எந்திரத்தின் மூலம் தூய்மையானவர்களாக ஆக்கப்பட்டு அமைச்சர் பதவி தரப்படுகிறது. இதுதான் மோடியின் ஊழல் ஒழிப்பு நாடகமாகும்.

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு விரோத போக்கிற்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பதவி பிரமாண உறுதிமொழியை மீறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கையில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *