செய்திகள்

மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலி யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

மேட்டுப்பாளையம், மார்ச் 5–

மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலியானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்து அங்குள்ள பயிர்களை தின்றும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.தொடர்ந்து அந்த யானையை மயக்கஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை திடீரென அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுவிட்டதால் வனத்துறையினர் தற்காலிகமாக தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.

இந்த நிலையில் பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. மேட்டுப்பாளையம்- – கோத்தகிரி ரோட்டில் மதியம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பாகுபலி யானை திடீரென மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது. இதனை பார்த்து வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே ரோட்டை கடக்க முயன்ற யானை திடீரென அங்கு நின்றிருந்த ஒரு காரை லேசாக முட்டி தள்ளி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. பின்னர் மேட்டுப்பாளையம் ரோடு வழியாக சிறுமுகை காட்டுக்குள் சென்று விட்டது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், மேற்குதொடர்ச்சி மலையில் கோடைக்காலம் காரணமாக கடும் வறட்சி நிலவுவதால் பாகுபலி யானை தண்ணீர் மற்றும் உணவு தேடி அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியேறி வந்து உள்ளது. வனப்பகுதியில் கோடைமழை பெய்து பசுமை திரும்பினால் காட்டு யானைகள் மீண்டும் மலைஅடிவாரத்துக்கு வரும் நிலைமை ஏற்படாது. மேலும் அடர்ந்த காட்டுக்குள் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *