செய்திகள்

மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகை

நாளை முதல் 2 நாட்கள் ஆய்வு

சென்னை, டிச. 11–

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழு இன்று மாலை சென்னை வருகிறது. நாளை முதல் 2 நாட்கள் நான்கு மாவட்டங்களில் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்கின்றது.

வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த 3 மற்றும் 4ந் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன. வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7ந் தேதி சென்னை வந்தார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதத்தை பார்வையிட்ட அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதி அளித்தார்.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்கட்ட நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க மத்திய அரசை வலியுறுத்தினார். மத்திய அரசும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.450 கோடியை வழங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில், புயல் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது.இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றிருக்கின்றனர்.மத்திய குழுவினர் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்.

ஆய்வு பணிகள் முடிந்ததும் வரும் 14ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

அதன் பின்னர் டெல்லி புறப்பட்டு செல்லும் மத்திய குழுவினர், சேத மதிப்பு இறுதி அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *