செய்திகள்

மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தி.மு.க. தேர்தல் அறிக்கை இருக்கும்: கனிமொழி எம்.பி. பேட்டி

சென்னை, ஜன.24-–

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தி.மு.க. தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தி.மு.க.வில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர்-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டம் முடிந்தவுடன் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு இருக்கிற கூடிய தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிவோம். பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்து இந்த தேர்தல் அறிக்கையை முடிவு செய்வதற்கான பணிகளை தொடங்குவோம்.

தற்போது எந்தெந்த ஊர்களுக்கு முதலில் பயணம் செய்கிறோம் என்ற அந்த பட்டியலை இன்று முடிவு செய்து இருக்கிறோம். இந்த பட்டியலை முதலமைச்சரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்ற பின்னர் அந்த ஊர்களுக்கு பயணம் செய்வோம்.

தேர்தல் அறிக்கையை முதல்-அமைச்சரிடம் கொடுத்து அவர் வெளியிடும்போது அதில் உள்ள அம்சங்கள் உங்களுக்கு தெரிய வரும். தேர்தல் அறிக்கைக்கு பொதுமக்கள் யோசனை தெரிவிக்க தொலைபேசி எண், இ-மெயில் முகவரி போன்றவை ஒரிரு நாளில் அறிவிக்கப்படும்.

இந்த முறை தி.மு.க. தேர்தல் அறிக்கை, இந்த தேர்தலுக்கான கதாநாயகியாகவும் இருக்கலாம். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *