சிறுகதை

அமாவாசை – ராஜா செல்லமுத்து

அன்று அமாவாசை என்பதால் பாலசுப்பிரமணி தன் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்காக நீர் நிலை இருக்கும் கோயிலுக்குப் போய்த் திரும்பியிருந்தான்.

அன்று காகத்திற்கு உணவு வைக்க வேண்டும் என்று வீட்டில் சுத்தபத்தமாக சமைத்து இருந்தார்கள்.

தர்ப்பணம் முடித்த கையோடு வீட்டிற்கு வந்த பாலசுப்பிரமணி மனைவி வத்சலா சமைத்து வைத்திருந்த காகச் சாப்பாட்டைப் பரிசோதனை செய்தான்.

அப்படியெல்லாம் என்னைய சந்தேகப்படாதீங்க. கரெக்டா தான் நான் செஞ்சு வச்சிருக்கேன். எனக்கு தெரியாதா என்ன? ஒவ்வொரு அமாவாசைக்கும் நீங்க எப்படி எல்லாம் தர்ப்பணம் கொடுத்துட்டு வந்து காகத்துக்கு சோறு கொடுப்பீங்கன்னு? இவ்வளவு வருஷமா உங்க கூட குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். இது கூட தெரியாதா எனக்கு? என்று பாலசுப்பிரமணியுடன் கொஞ்சம் கோபமாக பேசினாள் வத்சலா.

அப்படி இல்ல நான் ஒருதடவ பாத்துட்டா ஒரு திருப்தியா இருக்கும். அதுக்காகத்தான் ஒருமுறை பார்த்தேன். நீ ஒன்னும் கோவிச்சுக்காத. என் பொண்டாட்டி செஞ்சா தப்பா இருக்குமா என்ன? என்று வத்சலாவின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி தன் அன்பை வெளிப்படுத்தினான் பாலசுப்பிரமணி

காகம் வெறும் காகம் மட்டுமில்ல.அது நம்ம மூதாதையர்கள் அதுக்குள்ள நம்ம சொந்த பந்தங்கள் எல்லாம் இருக்காங்க. அப்ப அவங்களுக்கு கொடுக்கும் போது அவங்க என்ன சுவைல சாப்பிடுவாங்களோ அதைப் பண்ணி குடுப்பது தானே நம்முடைய கடமை. அது தான் சோதனை பண்ணேன். உன்னை நான் சந்தேகப்படவில்லை என்று மறுபடியும் தன் மனைவிக்கு நற்சான்றிதழ் வழங்கினான் பாலசுப்பிரமணி.

அப்போது வீட்டிற்கு வெளியே அம்மா தாயே ஏதாவது பிச்சை போடுங்க என்று ஒரு குரல் கேட்டது. அப்பப்பா அமாவாசை ஆயிட்டா போதும் இந்த பிச்சைக்காரங்க தொல்லை தாங்க முடியல. ஐயா நான் காகத்துக்கு சோறு வெச்சிட்டு தான் மத்தவங்களுக்கு சாப்பாடு கொடுப்பேன். அதனால போயிட்டு அப்புறமா வா என்று வெளியில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தவரை விரட்டி அடித்தான் பாலசுப்ரமணி.

ஐயா பசிக்குது ஏதாவது குடுங்க என்று மறுபடியும் அந்த யாசகன் குரல் கொடுக்க, இதற்கு முன்னால் பேசிய தாெனியை விட இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சத்தத்துடன் பேசி அந்த யாசகனை விரட்டி விட்டான் பாலசுப்பிரமணி.

அதான் சொல்றேன்ல போயா என்று உரக்க குரல் கொடுக்க அந்த இடத்தை விட்டு நடந்தார் அந்த யாசகர் .

சரி போய்ட்டான் போல நம்ம காகத்துக்கு வைக்கிற சாப்பாட்டை எடு என்று பாலசுப்பிரமணி மனைவியிடம் கேட்டு வாழை இலை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போய் காகத்திற்குச் சாப்பாட்டை வைத்தான். முன்பெல்லாம் சாப்பாடு வைப்பதற்கு முன்பே பறந்து வந்து சாப்பிடும் காகங்கள் இப்போது ஒன்று கூட வரவில்லை. பாலசுப்பிரமணியத்திற்கு ஆச்சரியமாக இருந்தது .

என்ன இது ஒரு காக்கையைக் கூடக் காணோமே? என்று கா… கா என குரல் கொடுத்து கூப்பிட்டான்

கா……..கா… என்று கத்திப் பார்த்தான். வானம் பார்த்தான். ஒரு காகம் கூட உணவு எடுக்க வரவில்லை. அமாவாசை அன்று வருத்தப்பட்டு அந்த வெயிலில் நின்று கொண்டிருந்தான் பாலசுப்பிரமணி.

நீண்ட நேரமானது .ஒரு காகம் கூட வரவில்லை. சலித்தபடியே மாடியில் இருந்து கீழே இறங்கினான்.

என்ன ஆச்சு ?காக்கா சாதம் எடுத்ததா ?என்று மனைவி கேட்க

இல்ல இன்னைக்கு என்னவோ ஒரு காக்கை கூட காணோம். நானும் கத்தி கூட பாத்தேன் ஒன்னும் வரல என்று சோர்வாகச் சொன்னான் பாலசுப்ரமணி

அப்போது மறுபடியும் யாசகம் கேட்பவர் வேறொருவர் குரல் கேட்டது. இதை எதுவும் சட்டை செய்யாத பாலசுப்பிரமணி

நானே காகம் சாதம் எடுக்கலன்ற கோபத்தில இருக்கேன். இவனுக வேற வந்து டார்ச்சர் பண்ணிட்டு இருக்காங்க. சோறும் இல்ல ஒன்னும் இல்ல போயா என்று வந்த யாசகர்களை விரட்டி அடித்தான் பாலசுப்பிரமணி.

அவர்களை விரட்டியடித்து விட்டு மறுபடியும் மொட்டை மாடிக்கு போய் தான் வைத்த உணவை பார்த்தான்.

ஒரு காகம் கூட வந்து உண்ணவில்லை. மனச்சோர்வடைந்த பாலசுப்ரமணி கீழே இறங்கினான்.

அந்த அமாவாசையில் காகத்திற்குப் பதிலாக அவனின் மூதாதையர்கள் யாசகம் கேட்கும் மனிதர்களாக வந்திருக்கிறார்கள் என்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.

காகம் வரும், வரும் என்று காத்திருந்தான் .

ஒரு காகமும் வரவில்லை .

அந்த அமாவாசை அவனுக்கு இருட்டாக இருந்தது.

அதே நேரம் அவனால் விரட்டப்பட்ட இரண்டு பிச்சைக்காரகளும் மீண்டும் திரும்பிவந்து ஐயா பசிக்குது என்றார்கள்.

பாலசுப்பிரமணி மூளையில் புதிய ஒளி பிறந்தது. வீட்டுக்குள் ஓடிச்சென்றான். சமைத்த உணவை இலைகளில் வைத்து எடுத்து வந்தான் . இரண்டு பிச்சைக்காரர்களுக்கும் கொடுத்தான். அவர்கள் வயிறார சாப்பிட்டார்கள்.

மனைவி வந்து ஏன் என்றாள்.

இதுதான் இறந்த மூதாதைக்கு செய்யும் தர்மம் என்றான்.

மனைவி வாயடைத்து நின்றாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *