சிறுகதை

புகைப்படம் – ராஜா செல்லமுத்து

ரியோ தன் தாத்தா நல்லுசாமியின் புகைப்படத்திற்கு பூ மாலைகள், தேங்காய், ஊதுபத்தி வைத்து பூஜை செய்து கொண்டிருந்தான்.

அவனைச் சுற்றி அவனின் குடும்பத்தார்கள் நண்பர்கள் சுற்றம் சூழ நின்று இருந்தார்கள்.

நல்லுசாமி புகைப்படத்திற்கு கீழே ஏகப்பட்ட விருதுகள் இந்தியாவில் சிறந்த புகைப்பட கலைஞர் விருது. உலகம் மெச்சும் புகைப்படக் கலைஞர் என்றெல்லாம் பொறிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய ஷீல்டுகள் இருந்தன.

உலகம் போற்ற வாழ்ந்த மாபெரும் ஒரு புகைப்படக் கலைஞரின் பேரனாக இருப்பது ரியோவிற்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது.

அன்று அவரின் நினைவு நாள் என்பதால் நண்பர்கள் எல்லாம் வீட்டில் கூடியிருந்தார்கள். ரியோவின் கண்களில் அவனையும் அறியாமலே கண்ணீர் வழிந்தது.

அவனின் தோள் தட்டி தட்டினார் ரியோவின் அப்பா. சுற்றியிருந்த ரியோவின் நண்பர்கள் எல்லாம் நல்லுசாமி எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தனையும் உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள். இந்தப் படத்த நான் அமெரிக்கன் பேப்பர்ல பாத்திருக்கேன். இந்த படத்த ஜப்பான் பேப்பர்ல பாத்திருக்கேன் என்று ஒவ்வொரு நாடாக வரிசைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

வந்திருந்த நண்பர்களில் ஒருவன், ரியோ உங்க தாத்தாவுக்கு புலிட்சர் விருது கிடைக்கிறது கிடைக்காம போச்சாமே? என்று சொல்ல, அதற்கு எதுவும் பேசாமல் தலையாட்டினான் ரியோ.

அவனுடன் வந்த இன்னொரு நண்பன், ஆமா நானும் அதை கேள்விப்பட்டிருக்கேன் என்று சொல்ல

அவனை அடுத்த இன்னொரு நண்பன் நல்லுசாமியின் புகழைப் பேச ஆரம்பித்தான்.

நல்லுசாமி ஐயா நல்ல போட்டோகிராபர்னு தெரிஞ்சு இந்திய ராணுவத்தில் அவரை சேர்த்துக்கிட்டாங்க. அப்போ ராணுவத்தில் இருக்கிற எல்லா புகைப்படங்களையும் எடுக்கணும். அது அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கனும். அதுதான் அவருடைய வேலையா இருந்தது.

உலகப்போர் சமயத்தில நம்ம நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் வந்துச்சு. போர்ல செத்து போனவங்கள எல்லாம் புகைப்பட எடுக்கணும். அப்படிங்கிற உத்தரவு நல்லுசாமி கிட்ட வந்துச்சு. நல்லுசாமி போர் நடந்த இடத்துக்கு போய் பார்த்திருக்காரு. ரெண்டு பக்க நாட்டு மக்களும் போர்ல எறந்து கிடக்குறாங்க.

அத பாத்துட்டு என்ன மனுஷங்க பதவிக்காக இப்படியா அடிச்சுட்டு சாகிறது? அப்படின்னு நினைச்ச நல்லுசாமி தன்னோட கழுத்துல தூங்குன கேமராவுல போட்டோ எடுக்காம அழுதுகிட்டே இருந்தாராம். பிணக் குவியலுக்கு மத்தியில ஒரு பொண்ணு பிரசவ வலியில துடிச்சிட்டு இருந்திருக்கா. அவ வயித்துல இருந்து பாதி வந்து வராத நிலையில ஒரு சிசு இருந்திருக்கு. அந்த செத்துப்போன மனுஷங்களுக்கு மத்தியில அப்படி ஒரு உசுரு போராடி வெளியே வந்துக்கிட்டு இருக்கிறது மத்த புகைப்படக்காரரா பாத்திருந்தா அது படம் புடிச்சு உலகத்தில இருக்கிற எல்லா விருதையும் வாங்கியிருப்பான்.

ஆனா நல்லுசாமி தன்னோட கேமராவ தூக்கி எறிஞ்சிட்டு, அந்த தாய்க்கு பிரசவம் பார்த்திருக்கிறாரு. பச்சக் குழந்தையை அந்த தாய் கிட்ட இருந்து பிரிச்சு எடுக்கவும் ரத்தப்போக்கு அதிகமாகி அந்தத் தாய் செத்துட்டா. குழந்தை பிழைத்துக்கிருச்சு. அந்த குழந்தையை ரெட் கிராஸ்ல கொடுத்துட்டு போர்க்களத்தில நடந்த விஷயத்தை சக போட்டோ கிராபர்ககிட்ட சொல்லியிருக்காரு அந்த போட்டோகிராபர்க எல்லாம் தலையில் அடிச்சிட்டு,

ஏண்டா முட்டாப் பயலே, எப்படி ஒரு அருமையான காட்சி. செத்துப்போன பெணங்களுக்கு நடுவுல ஒரு தாய் பிரசவம் ஆகிறத போட்டோ எடுத்து இருந்தேன்னா, அந்த ஒரு போட்டாவுக்காக, இந்த உலகத்தில இருக்கிற எல்லா விருதும் உனக்கு கிடைச்சிருக்குமே? அத விட்டுட்டு கேமராவை தூக்கி போட்டுட்டு, நீ அந்த பொண்ணுக்கு பிரசவம் பார்த்துட்டு, என்னத்த சாதிச்ச? என்று திட்ட

எதுவும் பேசாமல் மௌனமாக சிரித்த நல்லுசாமி.

நீங்க சொல்றதெல்லாம் சரிதான், நான் அந்த தாய காப்பாத்தாம இருந்திருந்தா ஒரு உசுரு இந்த பூமிக்கு வந்திருக்காது. என்னால ஒரு உசுரு போனாலும், ஒரு உசுர காப்பாத்த முடிஞ்சது. அந்த குழந்தை இப்ப நல்லபடியாக வளர்ந்துக்கிட்டு இருக்கு. நான் அதை செய்யாம வெறுமனே போட்டோ மட்டும் எடுத்திருந்தா ரெண்டு உசுரும் செத்துப் போயிருக்கும். அந்தப் பாவம் என்ன புடிச்சு ஆட்டும். எனக்கு பேரு, பெருமை, பரிசு வாங்குறத விட, ஒரு உசுர காப்பாத்துனேன்ற சந்தோசம் எனக்கு இருக்கு. அதுவே பெரிய விருதா நினைக்கிறேன் என்று சொன்னாராம் நல்லுசாமி என்று நல்லுசாமியின் கதையை ஒரு நண்பன் சொல்ல,

அதை கேட்ட மற்ற நண்பர்கள் எதுவும் பேசாமல் வாயடைத்து நின்றார்கள்.

அப்போது வாசலில் ஒருவர் வந்து நின்றார். அவர் யார்? என்று அடையாளம் காணாமல் திகைத்தார்கள் ரியோவும் அவர் குடும்பத்தார்களும்.

வந்தவர் கண்கள் கலங்கியபடியே, ஐயா என்ன உங்களுக்கு தெரியாது. நான் நல்லுசாமி ஐயாவால காப்பாத்தப்பட்டவருடைய பேரன், எங்க தாத்தாவ தான் நல்லுசாமி ஐயா போர்க்களத்தில எங்க பாட்டிக்கு பிரசவம் பாத்து, எங்க அப்பாவ குழந்தை எடுத்திருக்கிறார்.

எங்க பாட்டிக்கு நல்லுசாமி ஐயா பிரசவம் பாக்கலன்னா எங்க அப்பா இந்த பூமிக்கு வந்திருக்க மாட்டாரு. நானும் நான் இங்க வந்திருக்க முடியாது. எங்களுக்கு குலசாமின்னா அது நல்லுசாமி ஐயா தான். இதுவரைக்கும் எங்களுக்கு அந்த உண்மை தெரியல. இப்பதான் தெரிஞ்சது என்று நல்லசாமி ஐயாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் வந்தவர்.

இதைவிட உலகத்தில் பெரிய விருது நல்லுசாமி தாத்தாவிற்கு எதுவும் இல்லை என்று நினைத்தான் ரியோ.

தீப ஒளியில் நிமிர்ந்து ஒளிர்ந்தது நல்லுசாமி ஐயாவின் புகைப்படம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *