செய்திகள்

பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம்: பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டி

மோடியின் நல்லாட்சி தொடர கூட்டணி: அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை, மார்ச் 19

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பா.ஜ.க. – பா.ம.க. இடையிலான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பா.ம.க. – பா.ஜ.க. இடையிலான கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், தீவிர ஆலோசனைக்கு பிறகு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்த்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த ஆலோசனையின் முடிவில் பா.ஜ.க. – பா.ம.க. இடையிலான கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 10 நாடாளுமன்ற தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நாட்டின் நலன் கருதி

பா.ஜ.க.வுடன் கூட்டணி

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “10 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது.

நாட்டின் நலன் கருதி, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது. ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

எங்கள் கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று அன்புமணி கூறினார்.

அண்ணாமலை நம்பிக்கை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் மக்கள் சக்தியாக, தனிப்பெரும் அரசியல் இயக்கமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்து பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று ஒரு வேள்வியுடன் பாமக களமிறங்கியிருக்கிறது.

இந்தியாவின் தனிப்பெரும் அரசியல் தலைவராக திகழும் ராமதாஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் அன்பை பெற்றவர் ராமதாஸ். தமிழகத்தில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது அவரது மிகப்பெரிய கனவு.

ராமதாஸ் யோசித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களை பிரதமர் மோடி நாடு முழுவதும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வெற்றியை கொடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருக்கிறோம். தமிழகத்தின் அரசியல் நேற்று இரவில் இருந்து மாறியிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது.

2024ல் மாபெரும் வெற்றி, 2026ல் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம். நாங்கள் இரவோடு இரவாக கோவையிலிருந்து இங்கு வந்ததற்கு காரணம், இன்று சேலத்தில் பிரதமர் மோடியுடன் ராம்தாசை அமரவைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசைதான்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *